‘தலைவர் நாடாள வரப்போகும் கதை கேட்கப்போகிறோம்!' - திருச்சிக்குப் படையெடுக்கும் ரஜினி ரசிகர்கள்!

ரஜினிகாந்தின் அரசியல் பயணம் அவசியம் என்பதை வலியுறுத்தி, காந்திய மக்கள் இயக்கம் சார்பில் ஆகஸ்ட் 20-ம் தேதி மாலை 5 மணிக்கு திருச்சி அண்ணாநகர் உழவர்சந்தை மைதானத்தில் தமிழருவி மணியன் தலைமையில் மாநாடு நடைபெறவுள்ளது.  

ரஜினி

`இந்த மாநாட்டில், தமிழகத்தின் அனைத்து மாவட்ட ரஜினி ரசிகர்களும் கலந்துகொள்ள வேண்டும்' என்று ரஜினி ரசிகர் மன்ற தலைமையகத்திலிருந்து அனைவருக்கும் ரகசிய உத்தரவு சென்றுள்ளது.  அகில இந்திய ரஜினி ரசிகர் மன்றப் பொறுப்பாளர் சுதாகர், மாவட்ட நிர்வாகிகளை போன் மூலம் தொடர்புகொண்டு, `தலைவரை அரசியலுக்கு அழைக்கும் சிறப்பு மாநாடு இது.  இதில் ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் அதிகமான ரசிகர்களை அழைத்துச் செல்லுங்கள். இது நீங்களாகவே கலந்துகொண்டதுபோல் இருக்க வேண்டும். தலைமையிலிருந்து சொன்னதாக யாரிடமும் சொல்ல வேண்டாம்' என்று கூறியிருக்கிறார். எனவே, ஒவ்வொரு மாவட்டத்திலும் பொறுப்பாளர்கள் அவசர ஆலோசனைக் கூட்டம் நடத்தி, மாநாட்டில் கலந்துகொள்வதற்கு வாகனங்களைத் தயார்செய்து வருகிறார்கள்.  

ரஜினி

தஞ்சை, திருவாரூர், நாகை ஆகிய டெல்டா மாவட்டப் பொறுப்பாளர்கள் கும்பகோணத்தில் ஒன்றுகூடி, மாநாடு பற்றிய ஆலோசனைக் கூட்டத்தை நடத்தியிருக்கிறார்கள்.  திருச்சி ரஜினி ரசிகர் மன்றத் தலைவர் சாகுல் அமீது தலைமையில் அவரது இல்லத்தில் காந்திய மக்கள் இயக்கம் மற்றும் மாவட்ட ரஜினி ரசிகர் மன்றம் இணைந்த ஆலோசனைக் கூட்டம் இரண்டுமுறை நடைபெற்றது. மாநாட்டைச் சிறப்பாக நடத்துவது எப்படி, மாநாட்டில் கலந்துகொள்ளும் தலைவர்களை கௌரவிப்பது எப்படி என்றெல்லாம் ஆலோசனை நடத்தியிருக்கிறார்கள்.  

ரஜினிக்கு அழைப்பு

இதற்கிடையில், தமிழகம் முழுவதும் ரஜினி ரசிகர்களிடையே வாட்ஸ்அப் செய்தி ஒன்று வேகமாக பரவி, பரபரப்பைக் கிளப்பிவருகிறது.   அதில், `ஆகஸ்ட்-20-ம் தேதி திருச்சிக்குப் புறப்படத் தயாராகிறோம். புல்லுருவிகள் யாராவது, எங்கேயாவது நம்மைச் சீண்டலாம். அவர்களைச் சிரித்துக்கொண்டே கடந்துவிடுவோம்.  அரசியல் திருப்ப மாநாடு என்பதால், காவல் துறை நண்பர்கள் அதிகார வர்க்கத்தின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு, நமது வாகனங்களைச் சுற்றலில் விடலாம்.  கோபம் வேண்டாம். கால்கள் இருக்க, கவலையும் வேண்டாம்.

Rajini

சந்தோஷ மிகுதியில் துள்ளிக் குதித்தால்கூட சாராயம் எனப் பழி சுமத்திவிடுவார்கள்.  ஆதலால், கவனமாக இருப்போம். ஏதோ தள்ளுமுள்ளு நம்மை அறியாமல் நடந்துவிட்டால்கூட `மாநாட்டில் ரசிகர்கள் கூச்சல், குழப்பம்' எனத் தலைப்புச் செய்தியாக்கிவிடுவார்கள் ஜாக்கிரதை.  நாம் கதை கேட்கப்போகிறோம்.  ஆண்டவர்கள், ஆள்பவர்களின் கதையைக் கேட்கப்போகிறோம்.  ஊழல், உரிமை மீறல் நடத்திய கள்வர்கள் கதையை அய்யா தமிழருவி மணியன் சொல்ல நாம் கேட்கப்போகிறோம். முடிவில்,  நல்லதே நடக்கும். நல்லவரான ரஜினி நாடாள வரப்போகும் கதை கேட்கப்போகிறோம்.  நாம் போர் வீரர்கள். உடன் பொதுமக்களும் நிரம்பி இருப்பார்கள். மாநாட்டுக் களத்தில் கவனமாக இருப்போம்; காவலாக இருப்போம்' என்ற செய்தி ரசிகர்களை உற்சாகப்படுத்தியிருக்கிறது.  

இதுபற்றி மயிலாடுதுறை ரஜினி ரசிகர் மன்ற நகரச் செயலாளர் ரஜினி வீரமணியிடம் பேசியபோது, ``ஜெயலலிதா தற்போது இல்லை.  கருணாநிதியோ உடல்நலம் சரியில்லாமல் இருக்கிறார். ஆட்சியில் இருப்பவர்களும் நாற்காலிச் சண்டை போட்டுக்கொண்டிருக்கிறார்கள். இந்த சமயத்தில் தமிழ்நாட்டின் நலனில் அக்கறைகொண்ட ஒரே தலைவர் ரஜினி, அரசியலுக்கு வரவேண்டும். எம்.ஜி.ஆரைப்போல் ஏழை, எளிய மக்கள் துயர்துடைக்கும் முதலமைச்சராகத் திகழவேண்டும். தலைவரை, அரசியலுக்கு அழைக்கும் அய்யா தமிழருவி மணியனின் முயற்சிக்கு, ரசிகர்களான நாங்கள் தூண்போல துணையாக இருப்போம்.  நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்'' என்றார்.  

நாகை மாவட்ட ரஜினி ரசிகர் மன்றத் தலைவர் ரஜினி பாஸ்கரிடம் கேட்டபோது, ``நாங்கள் நீண்ட காலமாகவே தலைவரை அரசியலுக்கு அழைத்துக்கொண்டிருக்கிறோம்.  தற்போது, அய்யா தமிழருவி மணியன் வெளிப்படையாக ஒரு மாநாடு போட்டுத் தலைவரை அழைக்கிறார். இது எங்களுக்கு மிகவும் சந்தோஷமான விஷயம். எனவேதான், டெல்டாவிலிருந்து சுமார் 200 வாகனங்களில் அணிவகுத்து மாநாட்டைச் சிறப்பிக்க உள்ளோம்'' என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!