சிறையில் பிறந்த நாள்... சசிகலாவை வாழ்த்தச் செல்லும் தினகரன்! | Sasikala's 66th birthday at Parappana Agrahara and dinakaran on the way to Bengaluru

வெளியிடப்பட்ட நேரம்: 21:30 (17/08/2017)

கடைசி தொடர்பு:22:23 (17/08/2017)

சிறையில் பிறந்த நாள்... சசிகலாவை வாழ்த்தச் செல்லும் தினகரன்!

சசிகலா -ஜெயலலிதா

“ஜெயலலிதா பரிசாகத் தரும் புடவை, உறவுகளின் வாழ்த்து, நெருக்கமானவர்களின் பூங்கொத்து என்று பிறந்த நாளை கொண்டாடியவர் சசிகலா. இந்தப் பிறந்த நாள் அவருக்கு மறக்க முடியாததாக அமைந்துவிட்டது” என்று உருக்கமாக சொல்கிறார் சசிகலாவுக்கு நெருக்கமான ஒருவர். 

ஆகஸ்ட் 18-ம் தேதி சசிகலாவின் பிறந்த நாள். அ.தி.மு.க-வின் அதிகார சத்தியாக இருந்தபோதுகூட அவருடைய பிறந்த நாள் குறித்து பெரும்பாலனவர்களுக்கு தெரியாது. சசிகலாவின் பிறந்த நாளை அவருடைய உறவுகள் கூட வெளிப்படுத்த மாட்டார்கள். காரணம் ஜெயலலிதா மீதான பயம். அதனால் சசிகலா தனது பிறந்த நாளை வேதா இல்லத்தில் நான்கு சுவற்றுக்குள்ளே கொண்டாடுவார். ஜெயலலிதாவுடன், வேதா இல்லத்தில் சசிகலா தங்கத் தொடங்கிய ஆரம்ப காலத்தில், தனது பிறந்த நாள் அன்று கணவர் நடராஜனை சந்திக்க சென்றுவிடுவார் சசிகலா. ஜெயலலிதாவும் மறுப்பு ஏதும் சொல்லாமல் சசிகலாவை அனுப்பிவைப்பார்.  உறவுகளுடன் அன்றை தினத்தை கழிக்கவேண்டும் என்று சசிகலா விரும்புவார். 

33 மூன்று ஆண்டுகாலம் ஜெயலலிதாவுடனே அவர் பிறந்த நாளைக்கொண்டாடி இருக்கிறார். 96-ம் ஆண்டு தி.மு.க.ஆட்சிக்கு வந்த பிறகு, ஜெயலலிதா மற்றும் சசிகலா மீதான வழக்குகளினால் சிறையில் தள்ளப்பட்டார். அப்போது ஒரு முறை அவருடைய பிறந்த நாள் சிறையில் கழிந்துள்ளது. ஜெயலலிதா இருந்தவரை சசிகலாவின் பிறந்த நாளுக்கு முதல் வாழ்த்தே ஜெயலலிதாவிடம் இருந்து தான்வரும். பிறந்ந நாள் அன்று காலையில் புதிய புடவையும் சசிகலாவுக்குப் பிறந்த நாள் பரிசாக வழங்குவாராம் ஜெயலலிதா. அதே போல், சசிகலாவின் கணவர் நடராஜன் பிறந்த நாள் வாழ்த்தை ஆண்டுதோறும் மறக்காமல் சொல்லிவிடுவார். சசிகலாவுக்கு நெருக்கமான அதிகாரிகள் சிலரும் போயஸ்கார்டனில் அவருக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவிப்பார்கள்.

சசிகலா -தினகரன்

போயஸ் தோட்டத்தில் பணிபுரிந்த ஊழியர்கள் பெரும்பாலானவர்கள் சசிகலாவினால் நியமிக்கப்பட்டவர்கள் என்பதால் அவர்களும் பிறந்த நாள் அன்று சசிகலாவுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துவிடுவார்கள். கோவிலுக்குச் செல்வது, உறவுகளை சந்திப்பது என்று அன்றைய நாளை மகிழ்ச்சியாகவே கழிப்பார் சசிகலா. ஆனால் இந்த ஆண்டு பெங்களுரு சிறையில் பிறந்த நாளைக் கொண்டாட வேண்டிய நிலையில் சசிகலா உள்ளார். ஏற்கெனவே சிறையில் சலுகைகளை அனுபவித்தற்காக, கடும் நெருக்கடிகள் இப்போது சசிகலாவுக்கு கொடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சிறையில் தனது பிறந்த நாளை புத்தாடை அணிந்து கூட கொண்டாட முடியாத நிலை சசிகலாவுக்கு உள்ளது. அவருக்கு இருக்கும் ஒரே ஆறுதல் அவருடன் இளவரசி இருப்பது மட்டுமே.

அ.தி.மு.க-விலிருந்து சசிகலாவை நீக்க வேண்டும் என்ற குரல் ஓங்கி ஒழித்துவரும் நிலையில் அவருடைய பிறந்த நாள் சசிகலா அணியினரால் கூட உற்சாகமாக கொண்டாடப்படுவது சந்தேகம் தான். 

சசிகலாவின் பிறந்த நாள் அன்று, அவரை சிறையில் சென்று சந்திக்க திட்டமிட்டார் அ.தி.மு.க-வின் துணைப் பொதுச்செயலாளர் தினகரன். அதற்காக சென்னையில் இருந்து பெங்களூரு செல்கிறார். நாளை சசிகலாவை சந்தித்து பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவிக்க உள்ளார். மேலும், சசிகலாவின் பிறந்த நாளில் மன்னார்குடி மற்றும் கர்நாடகாவில் உள்ள ஓர் ஆலயம் ஆகியவற்றில் சிறப்பு பூஜைகளும் நடைபெற உள்ளன. ஜெயலலிதாவின் வாழ்த்தும் இல்லை, உறவுகளின் ஆசியும் இல்லாத பிறந்த நாளாக இந்தப் பிறந்த நாள் சசிகலாவுக்கு அமைந்துவிட்டது.


டிரெண்டிங் @ விகடன்