பிரீமியம் ஸ்டோரி

''அமெரிக்க வாழ் இந்தியர்களின் வரவேற்பால் திணறிப் போய்விட்டேன். அவர்களின் அன்பு, என்னை நெகிழச் செய்துவிட்டது. இதற்காக, அவர்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன். இந்த வரவேற்பை என்றும் நான் மறக்க மாட்டேன்’_ இதுதான் கடந்த 26-ம் தேதி மோடியின் ட்விட்டர் பக்கத்தில் இருந்த செய்தி!

'கெம் சோ?'

குஜராத் கலவரத்துக்குப் பிறகு அமெரிக்காவுக்கு விசா மறுக்கப்பட்ட மோடிக்கு, பிரதமரானதும் விசா அவரைத் தேடி வந்தது. மோடியை வரவேற்பதற்காக ஏராளமானோர் திரண்டிருந்தனர். அவர்களின் கைகளில் 'நாங்கள் மோடியை விரும்புகிறோம். அமெரிக்கா, மோடியை விரும்புகிறது’ என்ற வாசகங்கள் இடம்பெற்ற போஸ்டர்களை வைத்திருந்தனர். மோடியைப் பார்த்ததும், 'மோடி வாழ்க, வந்தே மாதரம், ஹர... ஹர... மோடி’ என, உற்சாகத்துடன் கோஷங்களை எழுப்பினர். அவர்களின் வரவேற்பால் உற்சாகமடைந்த மோடி, காரைவிட்டு இறங்கி, அவர்களுடன் கை குலுக்கிவிட்டு, மலர் கொத்துக்களை வாங்கிக்கொண்டு நலம் விசாரித்தார்.

அதன்பின், நியூயார்க் நகர மேயர் பில் டி பிளாசியோவைச் சந்தித்து நகர நிர்வாகம், பாதுகாப்பு, கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், நகர விரிவாக்கம் உள்ளிட்ட அம்சங்கள் குறித்து விவாதித்தார்.

'கெம் சோ?'

2001-ல், நியூயார்க்கின் இரட்டை கோபுர வர்த்தக மையக் கட்டடத்தின் மீதான பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தோருக்கான நினைவிடத்தில் பார்வையிட்ட மோடி, அங்கு அஞ்சலி செலுத்தினார். தாக்குதலுக்கு உள்ளானபோது, அங்கு மேற்கொள்ளப்பட்டப் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து, மோடி கேட்டறிந்தார். பின், ஐ.நா பொதுச் செயலர் பான் கீ  மூனையும் சந்தித்து, இந்தியாவின் நிலைப்பாடு குறித்துப் பேசினார். அன்று இரவு ஐ.நா பொதுச் சபையின் 69-வது கூட்டத்தில் பங்கேற்ற மோடி, இந்தியிலேயே உரையாற்றினார். ''ஒவ்வொரு நாட்டின் பார்வையும் அதன் நாகரிகம் மற்றும் தத்துவார்த்த கலாசாரம் போன்ற கொள்கைகளைக்கொண்டே அமையும். அந்த அடிப்படையில் இந்தியா வளர்ச்சி கண்டுள்ளது. அண்டை நாடுகளின் அரவணைப்பு என்பது மிகவும் முக்கியம். அதனால்தான் எனது தலைமையிலான அரசு அண்டை நாடுகளுடன் நல்லுறவைப் பேண நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தீவிரவாதம் என்பது இங்கு தலையாய பிரச்னையாக உள்ளது. பாகிஸ்தான் இந்தியாவுடனான பேச்சுவார்த்தைக்கான ஒரு சூழலை உருவாக்க வேண்டும். ஒரு நாடு மட்டும் முயற்சி எடுத்தால் போதாது. இதற்கு சர்வதேச அளவிலான கூட்டு முயற்சி முக்கியம்.  இதற்கு நாம் ஐ.நா சபையை புதிய கட்டமைப்புகளால் புதுப்பிக்க வேண்டியுள்ளது. 20-ம் நூற்றாண்டுக் கொள்கைகள், 21-ம் நூற்றாண்டுக்கு ஒத்துவருவது இல்லை'' என்று குறிப்பிட்டபோது அங்கு கூடியிருந்த உறுப்பினர்கள் புன்முறுவல் செய்தார்கள்.  ''நாம் நம் அளவில் முன்னேறிவிட்டோம் என்று அறிக்கைவிட்டுக் கொண்டிருந்தாலும் இன்னமும் உலக அளவில் 2.5 பில்லியன் மக்கள் சாதாரண மருத்துவ வசதியையும் 1.3 பில்லியன் மக்கள் மின்சாரத்தையும் 1.1 பில்லியன் மக்கள் சுத்தமான குடிநீரையும் பயன்படுத்த வாய்ப்பின்றி இருக்கிறார்கள். இவர்களுக்கு நாம் செய்ய வேண்டிய கடமைகள் பல உள்ளன. இந்தச் சபையின் 70-வது ஆண்டு உலகத்தின் முன்னேற்றதுக்கு ஒரு வரைபடமாக இருக்க வேண்டும்'' என்று அறிவுறுத்திய மோடி, சார்க் அமைப்பை வலுப்படுத்துவது குறித்து, சில முக்கிய ஆலோசனைகள் வழங்கினார். உலக யோகா தினத்தன்று இந்தியாவில் நடைபெறவுள்ள விழாவுக்கு அனைவரையும் வரவேற்று தன் உரையை முடித்தார். ஐ.நா  பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடியின் பேச்சுக்கு, ராஜபக்ஷே, ஷேக் ஹசீனா, கொய்ராலா ஆகியோர் பாராட்டு தெரிவித்தனர். அதன் பின்னர் பேசிய பாக். பிரதமர் நவாஸ் ஷெரீப், ''ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் புதிதாக எந்த ஒரு நாட்டுக்கும் நிரந்தர

'கெம் சோ?'

உறுப்பினர் அந்தஸ்து வழங்கக்கூடாது. அதுபோன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டால், பாக்., அதைக் கடுமையாக எதிர்க்கும்'' என்று பேசினார். இதற்குப் பதிலளித்த இந்திய வெளியுறவுச் செயலர் அபிஷேக் சிங், ''காஷ்மீர் பிரச்னை குறித்த பாக்., பிரதமரின் கருத்து கண்டனத்துக்குரியது. ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர அந்தஸ்து பெறக் கூடாது என்ற வகையில் பேசியது சரியல்ல.

இதை  இந்தியா  வன்மையாகக் கண்டிக்கிறது'''' என்று பத்திரிகையாளர்களிடத்தில் தெரிவித்து இருந்தார்.

மோடிக்கு அமெரிக்கா வாழ் இந்தியர்கள் சார்பில், நியூயார்க்கில் உள்ள மேடிசன் சதுக்க அரங்கத்தில், 28-ம் தேதி பிரமாண்ட வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியைப் பார்ப்பதற்காக, நியூயார்க் நகரின், 50-க்கும் மேற்பட்ட இடங்களில் திரைகள் அமைக்கப்பட்டு, நேரடி ஒளிபரப்புக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அமெரிக்காவில் அதிகம் வசிக்கும் வெளிநாட்டவர்களின் பட்டியலில், இந்தியர்கள் மூன்றாவது இடத்தில் உள்ளனர். இதனால், இந்த நிகழ்ச்சியை பிரமாண்டமாக நடத்த, திட்டமிடப்பட்டு இருந்தது. மோடியை, பிரபல நடிகர் ஹக் ஜாக்மேன் அறிமுகம் செய்தார். நவராத்திரி விழாவில் இங்கு இவ்வளவு இந்தியர்களைச் சந்தித்ததற்காக மிகவும் மகிழ்ச்சியடைவதாகக் கூறிய நரேந்திர மோடி, 'இளைஞர்கள்தான் எதிர்கால சொத்து’ என்று தன் உரையை ஆரம்பித்தார். தான் டீ விற்க ஆரம்பித்தது முதல் இன்றைய நிலை வரை விவரித்துப் பேசியபோது இளைஞர்கள் உற்சாகத்தில் துள்ளிக் குதித்தனர். ''ஒரு காலத்தில் இந்தியா என்றால் பாம்பு மற்றும் பாம்பாட்டிகள் இருந்த நாடு என்ற நிலையை மாற்றியமைத்த உங்களுக்கு நன்றி. நம் முன்னோர்கள் பாம்புகளுடன் விளையாடிக் கொண்டிருந்தார்கள், நாம் கம்ப்யூட்டர் மவுஸுகளுடன் விளையாடிக் கொண்டிருக்கிறோம்'' என்றபோது மோடிக்கு பலத்த கரவொலி. மோடி பங்கேற்ற நிகழ்ச்சியை, லட்சக்கணக்கானோர், தங்கள் லேப் டாப், மொபைல், கம்ப்யூட்டர் ஆகியவற்றின் மூலம் கண்டுகளித்தனர். அந்த அரங்கத்தில் 19,000 பேர் கூடி இருந்தனர். பின்னர், நரேந்திர மோடியை, அமெரிக்க இந்தியர்கள் சந்தித்துப் பேசினர். அமெரிக்காவை தலைமையகமாகக்கொண்டு செயல்படும், 10 முன்னணி நிறுவனங்களின் தலைவர்கள், மோடியுடன் தொழில், வர்த்தகம் குறித்து விவாதித்தனர். அவர்களுடன் இந்தியாவில் தொழில் துறை வளர்ச்சி குறித்து பேசிய மோடி, ''இனிமேலும் தாமதிக்காதீர்கள், இந்தியா உங்களுடன் சேர்ந்து வளர்ச்சிப் பாதையில் பயணிக்கத் தயாராக உள்ளது'' என்று அவர்களை, இந்தியாவில் முதலீடு செய்ய அழைத்தார்.

பின்னர் அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளின்டன் தம்பதியினரை மோடி சந்தித்துப் பேசினார். அப்போது கங்கை நதியை சுத்தப்படுத்தும் திட்டப் பணிகள் குறித்து இருவரும் விரிவாக விவாதித்தனர். இந்தப் பணியில் கிளின்டனின் தொண்டு நிறுவனத்தையும் ஈடுபடுத்திக்கொள்ள மோடி சம்மதித்தார். அதன் பின்னர் வாஷிங்டன் கிளம்பிச் சென்ற மோடி, ஒபாமாவைச் சந்தித்தார். மீண்டும் 30-ம் தேதி அவரைச் சந்தித்தபோது, ஒபாமா, மோடியை 'கெம் சோ?’ (நலமாக இருக்கிறீர்களா?) என்று குஜராத்தி மொழியில் வரவேற்றார். 90 நிமிடங்களுக்கு இந்தச் சந்திப்பு நடந்தது. அதன் பின்னர் அவர்கள் 'இணைந்து முன்னேறுவோம்’ என்ற தலைப்பில் அளித்த கூட்டறிக்கையில், 'அணு ஆயுதப் பரவலைத் தடுக்க இருநாடுகளும் கூட்டாக இணைந்து பணியாற்றுவது, ராணுவ ஒப்பந்தத்தை நீட்டிப்பது உள்ளிட்ட விஷயங்கள் இடம்பெற்றன. ''இந்தியாவும் அமெரிக்காவும் நம்பகமான நட்பு நாடுகளாக உள்ளன. இந்த நட்புறவு இரு நாடுகளுக்கு மட்டுமல்லாமல், இந்த உலகத்துக்கே நன்மையாக அமையும்'' என்று அதில் தெரிவிக்கப்பட்டது.

ஒபாமா அளித்த விருந்து நிகழ்ச்சியிலும் மோடி பங்கேற்றார். நவராத்திரியை முன்னிட்டு பிரதமர் மோடி ஒன்பது நாட்கள் விரதம் இருந்ததால் இந்த விருந்தில் அவர் தண்ணீர் மட்டும் அருந்தினார். வழக்கமாக எந்த நாட்டு அதிபரைச் சந்தித்தாலும் நடக்கும் சடங்காக ஒபாமாவுக்கு பகவத் கீதையைப் பரிசளித்தார்.

94--ம் ஆண்டு சாதாரண சுற்றுலாப் பயணியாக அமெரிக்கா சென்ற மோடி, வெள்ளை மாளிகை முன்னால் போட்டோ எடுத்துக்கொண்டார். ஆனால், இந்த முறை அவருக்காக வெள்ளை மாளிகை காத்திருந்தது!

- மா.அ.மோகன் பிரபாகரன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு