Published:Updated:

‘அன்புக்கு நிகர் ஏது?’

சென்னையில் தமிழ் மண்ணே வணக்கம்!

வணிகமயமான உலகில் இன்றைய கல்லூரி மாணவ - மாணவிகள் மறந்த, மறந்துகொண்டிருக்கும் யதார்த்த உண்மைகளைக் கொண்டு சேர்க்கும் நிகழ்வு, 'தமிழ் மண்ணே வணக்கம்’. அந்த நிகழ்ச்சி, சென்னையில் உள்ள 'ஆனந்த் இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஹையர் டெக்னாலஜி’ கல்வி நிறுவனத்தில் நடத்தப்பட்டது.

‘அன்புக்கு நிகர் ஏது?’

'மாறிவரும் உணவுப் பழக்கம்’ குறித்து பேசிய மருத்துவர் கு.சிவராமன், ''உணவுகளில் உள்ள மகத்துவத்தை எடுத்துச் செல்லும் மரபிலிருந்து வந்தவர்கள் தமிழர்கள். இந்தியாவின் வளர்ச்சியை வித்திடுகின்ற இளைஞர்கள் கூட்டத்துக்குப் பிரச்னை உருவாகிக் கொண்டிருக்கிறது. தொற்றாத வாழ்வியல் நோய்க் கூட்டம் இவர்களைத் துரத்திக் கொண்டிருக்கிறது. பிரசவங்களையும் பிரசவ கால மரணங்களையும் சந்தித்தவர்கள் தாய்மார்கள். காலப்போக்கில் அது தடுக்கப்பட்டது. அதேசமயம் பெண்களின் கருப்பையில் ஏற்பட்ட புற்றுநோய்தான் அதிகம். இன்றைய நிலையில் பெரும்பாலான பெண்கள் இளம் வயதிலேயே மார்பக புற்றுநோயால் அவதிப்படுகின்றனர். இவை அனைத்தையும்விட, 10-ல் 3 பேர் மனநோயாளிகளாக மாறி வருகின்றனர் என்பதுதான் கொடூரமான செய்தி. இரவு சரியான தூக்கமில்லை என்றால் நீங்களும் மனநோயாளிதான். பெண்களின் பல்வேறு நோய்களுக்கு 'அனீமியா’ பிரதான காரணமாக உள்ளது.

சிறுதானியங்களில் உயர்வாகக் கருதப்படும் கம்பில், அரிசியைவிட 8 மடங்கு இரும்புச் சத்து உள்ளது. இந்தியாவின் சிறந்த காலை உணவாக இட்லியை எஃப்.ஏ.ஓ என்ற அமைப்பு தேர்வு செய்துள்ளது. இன்று அதையெல்லாம் தொலைத்துவிட்டு பீட்ஸா, பர்கர் முன் காத்துக் கிடக்கிறோம். பப்பாளி, மாதுளை, இலந்தை, வில்வம் போன்ற பழங்களிலுள்ள சத்துகள் வேறு எந்தப் பழங்களிலும் கிடையாது.  பெண்களுக்கு உளுந்து மற்றும் கம்பையும் குழந்தைகளுக்குக் கேழ்வரகையும் உணவுகளாகக் கொடுங்கள். மது, கள் குடிப்பதால் உடலுக்கு எந்தவிதத்திலும் நன்மை இல்லை. கேவலமாகக் கருதப்பட்ட விஷயத்தை நம் சமூகம் கொஞ்சம் கொஞ்மாக ஏற்றுக்கொள்கிறது. இதுவே மிகப்பெரிய அவமானம். வீட்டுக்கு வரும் விருந்தாளிகளுக்குத் தண்ணீர் கொடுப்பதுதான் நம் பாரம்பர்யம். நாமோ, கண்ட பானங்களைக் குடிக்கக் கொடுத்துக் கொண்டிருக்கிறோம். சக மனிதர்களையும் தமிழ் இனத்தையும் உயர்த்தப் பாடுபடுவோம்'' என்றார்.

எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன், ''உலகிலேயே மிக மோசமான கொடுமை, காதலின் பெயரால் பெண்கள் மீதான ஆசிட் வீச்சு. ஒருவரை ஒருவர் புரிந்துகொள்வதுதான் உண்மையான காதல். எதை எல்லாம் ஓர் ஆண் சுதந்திரமாக நினைக்கிறானோ அது பெண்களுக்கு அடிமைத்தனமாக இருக்கிறது. நீங்கள் பயிலும் கல்வியால் பணம், வீடு, சொத்து கிடைக்கும். ஆனால், அன்பு கிடைக்காது. எப்போதும் யாரை புறக்கணிக்கிறோம் என்று யோசித்துப் பாருங்கள். எவ்வளவுதான் படித்திருந்தாலும் அடிப்படை அன்புக்கு நிகர் ஏது?

‘அன்புக்கு நிகர் ஏது?’

தொடர் முயற்சிகளால் மட்டுமே நாம் சாதிக்க முடியும். லட்சக்கணக்கான மக்களின் உயிர் தியாகத்தினால் நமக்குக் கிடைத்த சுதந்திரத்தை என்றாவது எண்ணிப் பார்த்துள்ளோமா?  சுதந்திரத்துக்காகப் போராடிய வ.உ.சி-க்கு இரட்டை ஆயுள் தண்டனை கிடைத்தது. சுப்பிரமணிய சிவாவுக்கு வாய்ப் பூட்டு போட்டதுடன், கொதிக்கும் சுண்ணாம்பில் ஆட்டுத்தோலைப் போட்டு பிய்த்து எடுக்க வைத்தனர். அதில், அவருக்குத் தொழுநோய் வந்ததுதான் மிச்சம். சுதந்திர வேட்கையைத் தணிக்க தொழுநோயோடு ஊர் ஊராகச் சென்று போராடியவர். வரலாற்றில் ரத்தம் சொட்டச்சொட்ட இயற்றப்பட்ட பக்கம் 'ஜாலியன் வாலாபாக்.’ ஆனால், என்றாவது அதைப் பற்றி கவலைப்பட்டு இருக்கிறோமா? தேசத்தின் விடுதலைக்காக இறந்தவர்களை ஒரு நிமிடமாவது நினைத்துப் பார்க்க வேண்டாமா? ஆறு வாரங்களில் 30,000 ரூபாய் சம்பளம் வாங்கிக்கொண்டு மனம்போன போக்கில் இந்தியா - பாகிஸ்தானை பிரித்தான் ரெட் கிளிஃப். நம்மில் பலருக்கு இந்திய வரலாறு பற்றியே தெரியாது. உங்களுக்கு விருப்பமான மொழிகளை கற்றுக்கொள்ளுங்கள். ஆனால், உங்களுடைய தனித்திறன் என்பது மற்ற மனிதர்கள் மீது காட்டும் அன்பு தவிர வேறு எதுவும் இல்லை. சிறு விஷயங்களில் நாம் அக்கறை செலுத்தினால் பெரிய விஷயங்களில் வெற்றிகிட்டும்'' என்று நிகழ்ச்சியை நிறைவு செய்தார்.  

'புதியதோர் உலகம் செய்வோம்!’ என்ற தலைப்பில் நடத்தப்பட்ட கட்டுரைப் போட்டியில் சிறந்த கட்டுரைகளை எழுதியவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

படங்கள்: கே.ராஜசேகரன்