Published:Updated:

அங்கே லாலு.... இங்கே ஜெயலலிதா!

தகுதி இழந்த தலைவர்கள்!

''சமோசாவில் ஆலு (உருளைக் கிழங்கு) இருக்கும் வரை பீகாரில் லாலு இருப்பான்''  - மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் சிறையில் தள்ளப்பட்டு ஜாமீனில் வெளியானபோது லாலு உதிர்த்த வார்த்தைகள் இவை. ஆனால் இன்றோ, தேர்தலில் போட்டியிடும் தகுதியை அவர் இழந்து நிற்கிறார். லாலுவின் வரிசையில் இப்போது ஜெயலலிதாவும்.  

ஊழல் வழக்குகள், தண்டனை விதிப்பு, 'மக்கள் பிரதிநிதி’ பதவி பறிப்பு, சிறை வாழ்க்கை, ஜாமீன் போராட்டம், அரசியல் பின்னடைவு என லாலுவுக்கும் ஜெயலலிதாவுக்கும் அரசியல் பொருத்தங்கள் நிறைய உண்டு. தமிழகத்தில் சொத்துக் குவிப்பு வழக்கு என்றால், பீகாரில் மாட்டுத் தீவன ஊழல் வழக்கு. கடந்த ஆண்டு லாலுவின் வாழ்வில் வீசிய புயலையும் இந்த ஆண்டு ஜெயலலிதாவின் வாழ்வில் அடித்த சுனாமியையும் முடிச்சுப் போட்டுப் பார்ப்போம்.

அங்கே லாலு.... இங்கே ஜெயலலிதா!

சுவாரஸ்யங்கள் நிறைந்தது லாலுவின் ஃப்ளாஷ் பேக். வடக்கு பீகாரின் புல்வாரியா கிராமத்தில் ஏழை விவசாயி யாதவ் குந்தன் ராய்க்கு மகனாக பிறந்தவர் லாலு. சொந்தமாக வீடுகூட இல்லாத குடும்பத்தில் லாலுதான் கடைக்குட்டி. அம்மா மர்சியா தேவியுடன் சென்று சிறுவன் லாலு, வீடு வீடாகத் தினமும் பால் ஊற்றுவது உண்டு. கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு கிளார்க் வேலையில் சேர்ந்தார். லாலுவின் பார்வை ஜெயப்பிரகாஷ் நாராயணன் இயக்கத்தின் பக்கம் திரும்பியது.

திருமணத்தின்போது லாலுவின் மனைவி ராப்ரி தேவிக்கு 14 வயது. சில மாதங்கள் கழித்துதான் முதலிரவுக்கே தேதி குறித்தார்கள். முதலிரவு அன்று கனவுகளோடு லாலு காத்திருக்க... அவர் வீட்டைத் தட்டினார்கள் காக்கிகள். மிசாவில் 'உள்ளே’ போனார். அந்தக் காரணத்தினால்தான் லாலு, தன் முதல் பெண் குழந்தைக்கு 'மிசா பாரதி’ என்று பெயர் சூட்டினார். ஒரு காலத்தில் பீகாரில் அசைக்க முடியாத சக்தியாக இருந்த காங்கிரஸுக்கு சமாதி கட்டினார். தந்தையைப் போலவே லாலுவுக்கும் குடும்பக் கட்டுப்பாட்டின் மீது நம்பிக்கை இல்லை. அதனால் ஏழு மகள்கள்... இரண்டு மகன்கள்.

கட்சி, ஆட்சி, குடும்பம் என சந்தோஷமாக போய்க் கொண்டிருந்த வாழ்க்கையில், 1997-ல் 'பிரேக்’ விழுந்தது. கால்நடைத் தீவன வழக்கில் சிக்கி முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டி வந்தது. அப்போது, திடீர் திருப்பமாக தன் மனைவி ராப்ரி தேவியை முதல்வராக்கினார் லாலு. ''முதல்வர் பதவியைச் சிறப்பாக நடத்த, ராப்ரிக்கு இரண்டுநாள் டிரெயினிங் கொடுத்து இருக்கிறேன். அவர் நன்றாக ஆட்சி செய்வார்'' என்று சீரியஸாகவே சொன்னார் லாலு. சிறையில் இருந்தபடி 'நிழல் முதல்வர்’ லாலு, ராப்ரி ரிமோட்டை இயக்கிக் கொண்டிருந்தார்.  

லாலுவின் அரசியல் அஸ்தமனத்துக்கு அஸ்திவாரம் போட்ட மாட்டுத் தீவன  ஊழல் வழக்கு, ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கைப்போலவே சவ்வு மிட்டாய் ரகம்தான். லாலு முதல்வராக இருந்தபோது மாட்டுத் தீவனம் வாங்கியதில் மெகா மோசடிகள் அரங்கேற... ரூ.37.7 கோடிக்கு ஊழல் நடந்ததாக சி.பி.ஐ வழக்குப் போட்டது ராஞ்சி சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றத்தின் படிக்கட்டுகளில் ஏறி இறங்கிக்கொண்டிருந்தார் லாலு. ஒருவழியாக வழக்கு கடந்த ஆண்டு முடிவுக்கு வந்து தீர்ப்புக்குத் தேதியும் குறித்தார் நீதிபதி பிரவாஸ்குமார் சிங். அப்போதுதான் 'கிரிமினல் வழக்குகளில் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் தண்டனை பெற்றால் எம்.பி., எம்.எல்.ஏ-க்கள் பதவி உடனடியாகப் பறிபோகும்’ என்ற அஸ்திரம் சுப்ரீம் கோர்ட்டில் இருந்து பாய்ந்தது. உடனே 'நீதிபதி பிரவாஸ்குமார் சிங், ஆளும் ஐக்கிய ஜனதா தளக் கட்சியின் மூத்த தலைவர்களின் உறவினர். இதனால் நியாயமான தீர்ப்பு வழங்க மாட்டார். வழக்கை வேறு நீதிமன்றத்துக்கு மாற்ற வேண்டும்’ எனச் சொல்லி உயர் நீதிமன்றத்தில் லாலு மனுப் போட்டும் பயன் இல்லாமல் போனது.

2013 செப்டம்பர் 30-ம் தேதி தீர்ப்பு. அன்று நீதிமன்றம் வந்த லாலுவை குற்றவாளி என அறிவித்தது நீதிமன்றம். தண்டனை விவரங்கள் அக்டோபர் 3-ம் தேதி அறிவிக்கப்பட்டன. ''லாலுவுக்கு வயதாகிவிட்டது. நிறைய நோய்களோடு போராடிக்கொண்டிருக்கிறார். ரயில்வே துறையை லாபம் அடையச் செய்த பொறுப்புமிக்க குடிமகன். அதனால் குறைந்த தண்டனை கொடுங்கள்'' என அவரது வழக்கறிஞர் கேட்டும் எந்தப் பயனும் ஏற்படவில்லை. லாலுவுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ.25 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது. இதைவிட ஊழல் வழக்கில் தண்டனை பெற்று எம்.பி பதவியைப் பறிகொடுத்ததைத்தான் இந்தியாவே ஆச்சர்யமாகப் பார்த்தது.

ராஞ்சியின் பிர்சா முண்டா சிறையில் அடைக்கப்பட்ட லாலு, செய்த அலம்பல்கள் கொஞ்சம் நஞ்சமல்ல. 'இசட் ப்ளஸ் பாதுகாப்பில் இருந்ததால் சிறையிலும் கறுப்புப் பூனைப்படை பாதுகாப்பு வேண்டும்’ என அடம்பிடித்தார். அதற்காக நீதிமன்றத்தில் அவர் போட்ட மனு தள்ளுபடியானது. லாலுவின் கைதி எண் 3,312. பரப்பன அக்ரஹாரா சிறையைப்போலவே பிர்சா முண்டா சிறையும் பரப்பளவில் பெரியது. சுமார் 52 ஏக்கர் பரப்பளவு கொண்ட அந்தச் சிறையில் லாலுவுக்காக டிவி, கட்டில், பத்திரிகைகள், கொசுவலை, டைல்ஸ் போட்ட டாய்லெட், வெளியில் இருந்து உணவு என வசதிகள் செய்து தரப்பட்டன. தண்டனைக் கைதிகளுக்குச் சிறையில் வேலை கொடுக்கப்படும். அந்த வகையில் இரண்டு வேலைகளை டிக் அடித்தார் லாலு. ஒன்று ஆசிரியர் வேலை. மற்றொன்று தோட்ட வேலை. இரண்டையும் பார்த்தார் லாலு. அரசியல், நிர்வாகவியல் பற்றிச் சிறையில் சீரியஸாக பாடங்கள் நடத்தினார். ஆசிரியர் வேலைக்குத் தினசரி 25 ரூபாயும் தோட்ட வேலைக்கு 14 ரூபாயும் சம்பளம் வேறு வாங்கினார். தோட்ட வேலையை செய்வதாக ஒப்புக்கொண்டார் லாலு. பின்னர், வயதானதால் செய்ய முடியாது எனச் சொல்லி சூப்பர்வைஸர் வேலைக்கு மாறினார். சிறைக் கைதிகள் ஒழுங்காக தோட்ட வேலை செய்கிறார்களா என்று கண்காணித்ததோடு எப்படி வேலை பார்க்க வேண்டும் என அங்கேயும் கிளாஸ் எடுத்தார். சிறையில் இருந்த லாலுவை எப்படியும் வெளியே எடுத்துவிட ஜாமீன் போட்டபடியே இருந்தார்கள். ஒருவழியாக இரண்டரை மாதம் கழித்து லாலுவுக்கு ஜாமீன் வழங்கியது சுப்ரீம் கோர்ட். சிறையில் இருந்து வெளியே வந்த லாலு, ''சிறைக்குச் சென்றதோடு என் கதை முடிந்துவிட்டது என எண்ணிவிட்டார்கள். மதவாத சக்திகளைக் களையெடுப்பதே இனி என் வேலை'' என முழங்கினார். ஆனால், அது பலிக்கவில்லை. உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட லாலு, இப்போது ஓய்வில் இருக்கிறார். உடலில் மட்டுமல்ல, அரசியலிலும் கிட்டத்தட்ட ஓய்வு கொடுக்கப்பட்டுவிட்டது.

ரசீத் மசூத், லாலு, செல்வகணபதி என பதவி பறிபோனவர்கள் பட்டியல் நீண்டாலும், லாலுவும் ஜெயலலிதாவும் 'அரசியலை கலக்கிய பிரபலங்கள்’ என்பதால்தான் இந்தியாவே இவர்களைத் திரும்பிப் பார்த்தது. நல்லதுக்கு உதாரணமாகச் சொன்னால் பெருமைப்படலாம். இது பெருமைப்பட வேண்டிய விஷயம் இல்லையே!

- எஸ்.ஏ.எம்.பரக்கத் அலி

படம்: சு.குமரேசன்