Published:Updated:

கருணாநிதியின் செயல்மணி!

- ப.திருமாவேலன்

கோபாலபுரத்தின் முதல் மாடியில் இருந்து செயல்மணி இறங்கிவந்தால், கருணாநிதி கிளம்பிவிட்டார் என்று அர்த்தம். கீழ்த்தளத்தில் இருப்பவர்கள் உஷார் ஆவார்கள். கார் தயார் நிலைக்கு வரும். அதுவும் கருணாநிதி வெளியூர் புறப்படுகிறார் என்றால், அவரது தனிப்பட்ட சூட்கேஸை செயல்மணி எடுத்துவரும் அழகே

கருணாநிதியின் செயல்மணி!

தனியாக இருக்கும். அதன் கைப்பிடியை பிடித்து எடுத்து வரமாட்டார். சேலை, வேட்டி, பூ, பழம் வைக்கப்பட்ட தாம்பாளத்தை ஏந்தி வருவதைப்போல இரண்டு கைகளாலும் தாங்கி வருவார். 'தலைவர் உள்ளே மருந்து, மாத்திரைகூட வெச்சிருப்பார். அது பத்திரமாக இருக்கணும்ல’ என்று சொல்லிக்கொள்வார். அப்படி பத்திரமாகப் பார்த்துக்கொண்ட, அதாவது கருணாநிதியின் நிழலாகக் கடந்த 50 ஆண்டுகளாக இருந்த உதவியாளர் செயல்மணி தனது 73-வது வயதில் இறந்துபோனார்.

''பாரதி, கண்ணனைப் பற்றிப் பாடியபோது, 'கண்ணன் என் சேவகன்’ என்று எழுதினான். அந்தப் பாடலில் 'இங்கிவனை நான் பெறவே என்ன தவம் செய்தேன்’ என்று எழுதி இருப்பார். அப்படித்தான், 'செயல்மணியை சேவகனாகப் பெறவே என்ன தவம் செய்தேன்?’ என்று ஒரு முறை நான் பாராட்டினேன். அவரை இழந்து நிற்கும் அந்தக் குடும்பத்துக்கும் என்னுடைய குடும்பத்துக்கும் நான் எப்படி இரங்கல் கூறிடுவேன்? ஏன், எனக்குத்தான் நான் எப்படி இரங்கல் கூறிக்கொள்வேன்?'' என்று கருணாநிதியை உருக வைத்துவிட்டார் செயல்மணி.

செயல்மணிக்கு தம்பிதுரை, கலைவாணன் என இரண்டு மகன்கள். ஒரு மகள் பெயர் அஞ்சுகம். இதில் தம்பிதுரையின் திருமணம் 2002-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 9-ம் தேதி நடக்க இருந்தது. கருணாநிதி அப்போது 'தொல்காப்பியப் பூங்கா’ எழுதுவதற்காக கோவா சென்று இருந்தார். குறிப்பிட்ட நாளுக்குள் எழுதி முடிக்க முடியவில்லை. 9-ம் தேதி செயல்மணியின் மகன் திருமணம். 'இன்னும் ஒரு வாரம் இங்கே இருந்து எழுதி முடித்துவிட்டுச் செல்லலாம்’ என்று சுற்றி இருப்பவர்கள் கருணாநிதியிடம் சொல்கிறார்கள். கருணாநிதிக்கும் அது சரி என்று படுகிறது. ஆனால், அதனை செயல்மணியிடம் யார் சொல்வது? சிறிது நேரத்துக்குப் பிறகு, 'சென்னை கிளம்பிவிடுவோம்’ என்று கருணாநிதி பயணத்துக்கு ஆயத்தம் ஆனார். திருமணத்தை நடத்தி வைக்க வந்துவிட்டார். ''தொல்காப்பியப் பூங்காவை இன்னும் முடிக்கவில்லை. ஆனால், ஒரே ஒரு ஆளுக்காகப் பயந்தேன். அந்த ஆள் செயல்மணிதான். ஏன் வரவில்லை என்று அழுதுவிடுவான், கோபித்துக்கொள்வான் என்ற பயமல்ல. அப்படியே உருகிவிடுவானே... அதனைத் தாங்கிக்கொள்ள முடியாதே என்ற பயம்தான்'' என்று அந்தத் திருமண மேடையில் ஒப்புக்கொண்டார் கருணாநிதி. அந்த அளவுக்கு கருணாநிதியை உருகி உருகிக் கவனித்த செயல்மணி, கோபாலபுரம் வீட்டுக்கு வரும்போது 20 வயதுதான்.

கருணாநிதியின் செயல்மணி!

1962-ம் ஆண்டு தி.மு.க நடத்திய விலைவாசி உயர்வுப் போராட்டத்தில் கலந்துகொண்டு சிறைக்கு வந்த செயல்மணியை, கருணாநிதி சிறை வைக்கப்பட்ட திருச்சி ஜெயிலில் அடைத்தார்கள். அப்போதுதான் அவருக்கு சிறு அறிமுகம். முகவை மாவட்ட தி.மு.க-வின் முன்னணியினராக இருந்த எஸ்.எஸ்.தென்னரசுவும், செ.மாதவனும் அடுத்த சில மாதங்களில் 'முரசொலி’ இதழுக்காக செயல்மணியை சென்னைக்கு அழைத்து வந்தார்கள். அவரது செயல்பாடுகளைப் பார்த்து கோபாலபுரம் வீட்டுக்கு அழைத்துச் சென்றுவிட்டார் கருணாநிதி. அன்று முதல் மூச்சு அடங்கும் வரை கோபாலபுரத்தோடு 'கோபமே’ இல்லாமல் வாழ்ந்தவர் செயல்மணி. கருணாநிதி ஒன்றைச் சொல்வதற்கு முன்னால் செய்து முடித்திருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பவர். அப்படிப்பட்டவரிடம் ஒருவர் 50 ஆண்டுகள் இருக்க முடியும் என்றால் அதற்குக் காரணம் செயல்மணியின் பெர்ஃபெக்ட்!

கருணாநிதியைப் பற்றி செயல்மணியிடம் இருந்து ஒரு நியூஸ் வாங்க முடியாது. செயல்மணியைத் தெரியாத தி.மு.க முன்னணியினர் யாரும் இருக்க மாட்டார்கள். அனைவரிடமும் நலம் விசாரிப்பாரே தவிர, அவர்கள் ஏதாவது தகவல் கேட்டால், காது கேட்காதது மாதிரி இருந்துவிடுவார். தன்னுடைய குடும்பத்தினரிடம்கூட எதனையும் பகிர்ந்துகொள்ள மாட்டார்.

கருணாநிதியின் வாரிசுகளும் அவரிடம் இருந்து நியூஸ் எடுத்துவிட முடியாது. செயல்மணி அந்த வீட்டுக்குள் வரும்போது அழகிரி, ஸ்டாலின்... உள்ளிட்ட வாரிசுகள் அனைவரும் சிறுவர்கள். அழகிரியையும் ஸ்டாலினையும் ஒரே சைக்கிளில் கொண்டு போய் பள்ளிக்கூடத்தில் விட்டு, மதியம் அவர்களுக்குச் சாப்பாடு கொண்டுபோய் ,அவர்கள் சாப்பிடும் வரைக்கும் அருகில் இருந்து பார்த்து, 'உங்கள் அப்பா எவ்வளவு பெரிய தலைவர்’ என்று அந்தச் சிறுவர்களுக்குப் பாடம் புகட்டியவர் செயல்மணி. 1976-ல் அவசர நிலைப்பிரகடனம் செய்யப்பட்டு தி.மு.க ஆட்சியே கலைக்கப்பட்டது. கருணாநிதியின் வீட்டுக்கே பலரும் வர பயந்த நேரம். ஸ்டாலின் கைது செய்யப்பட்டுவிட்டார். அப்போது துணிந்து கோபாலபுரம் வீட்டுக்கு வந்தார் செயல்மணி. 'கொஞ்ச நாள் இங்க வரவேண்டாம், உன்னோட ஊருக்குப் போய்விடு’ என்று சொன்னபோது செயல்மணி சம்மதிக்கவில்லை. கருணாநிதி கட்டாயப்படுத்தியபோது, 'அப்படியானால் அழகிரியையும் அழைத்துச் சென்று, எங்கள் ஊரில் வைத்திருக்கிறேன்’ என்று சொல்லி சிங்கம்புணரிக்கு அழைத்துச் சென்றுவிட்டார். 'உங்க குடும்பத்துக்கு ஆகிறது எனக்கும் ஆகட்டும்’ என்று சொல்லிக் கொண்டவர் அவர். சில நாட்களிலேயே மீண்டும் கோபாலபுரம் வந்துவிட்டார். அவர் இல்லாமல் இவர் இருக்க முடியாது. இவர் இல்லாமல் அவர் இருக்கமாட்டார் என்பதே கருணாநிதிக்கும் செயல்மணிக்குமான பந்தம்.

எப்போதும் கோபாலபுரம் வீட்டு வாசலில் செயல்மணி உட்கார்ந்திருப்பார். கருணாநிதி, பெல் அடித்ததும் குடுகுடுவென மாடியில் ஏறி அவர் முன் நிற்பார். 2009-க்குப் பிறகுதான் கோபாலபுரத்தில் மாடிக்கு லிஃப்ட் போடப்பட்டது. அப்போதும் இவர் படி ஏறித்தான் செல்வார். இந்தக் காலக்கட்டத்தில்தான் செயல்மணியின் உடல்நிலையும் சோர்வடையத் தொடங்கியது. அவ்வப்போது வந்து சென்றாரே தவிர, வருகையை நிறுத்தவில்லை. ஒரு மாதத்துக்கு முன் கோபாலபுரம் வந்தார் செயல்மணி. படி ஏறித்தான் கருணாநிதியைப் பார்க்கப் போனார். ''ஏன்யா லிஃப்ட்ல வர வேண்டியதுதானே? பழைய நினைப்பா?'' என்று கேட்ட கருணாநிதி, லிஃப்ட் வரை வந்து, செயல்மணியை லிஃப்டில் கீழே அனுப்பி வைத்தார். அது கோபாலபுரம் இல்லமும் கருணாநிதியும் மறக்க முடியாத இறுதிப் பயணமாக அமைந்துவிட்டது.