Published:Updated:

'உள்ள பதவியும் போச்சே..!' - புலம்பும் நாமக்கல் திமுக எம்.எல்.ஏ ஆதரவாளர்கள்

பெ.ராமலிங்கம் (நாமக்கல் தி.மு.க எம்.எல்.ஏ)

15-வது உட்கட்சி தேர்தலில், திமுக தலைமை பெ.ராமலிங்கம் வகித்து வந்த கிழக்கு மாவட்ட துணைச் செயலாளர் பதவியை பறித்திருக்கிறது. அந்த பதவியில், தற்போது நலங்கிள்ளி என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். இதுதான், பெ.ராமலிங்கம் ஆதரவாளர்களை புலம்ப வைத்திருக்கிறது

'உள்ள பதவியும் போச்சே..!' - புலம்பும் நாமக்கல் திமுக எம்.எல்.ஏ ஆதரவாளர்கள்

15-வது உட்கட்சி தேர்தலில், திமுக தலைமை பெ.ராமலிங்கம் வகித்து வந்த கிழக்கு மாவட்ட துணைச் செயலாளர் பதவியை பறித்திருக்கிறது. அந்த பதவியில், தற்போது நலங்கிள்ளி என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். இதுதான், பெ.ராமலிங்கம் ஆதரவாளர்களை புலம்ப வைத்திருக்கிறது

Published:Updated:
பெ.ராமலிங்கம் (நாமக்கல் தி.மு.க எம்.எல்.ஏ)

'இருக்கிறதை விட்டுட்டு பறக்குறதுக்கு ஆசைப்பட்ட மாதிரினு சொல்லுவாங்களே, அதுபோல ஆச்சு எங்க அண்ணன் நிலைமை. மாவட்டம் விட்டு மாவட்டம் தாண்டி பதவிக்கு ஆசைப்பட்டதால, ஏற்கனவே வகிச்ச பதவியையும் இழந்துட்டு நிக்கிறார்' என்று நாமக்கல் தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ பெ.ராமலிங்கம் பற்றி, அவரின் ஆதரவாளர்கள் மத்தியில் 'ஆதங்கப் பேச்சு' ஓடிக்கொண்டிருக்கிறது.

நாமக்கல் சட்டமன்றத் தொகுதி தி.மு.க எம்.எல்.ஏவான பெ.ராமலிங்கம், நாமக்கல் தி.மு.க கிழக்கு மாவட்ட துணைச் செயலாளராக பதவி வகித்து வந்தார். இந்நிலையில், தற்போது நடந்து முடிந்த 15 வது உட்கட்சி தேர்தலில், தி.மு.க தலைமை பெ.ராமலிங்கம் வகித்து வந்த கிழக்கு மாவட்ட துணைச் செயலாளர் பதவியை பறித்திருக்கிறது. அந்த பதவியில், தற்போது நலங்கிள்ளி என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். இதுதான், பெ.ராமலிங்கம் ஆதரவாளர்களை புலம்ப வைத்திருக்கிறது.

பெ.ராமலிங்கம் (நாமக்கல் தி.மு.க எம்.எல்.ஏ)
பெ.ராமலிங்கம் (நாமக்கல் தி.மு.க எம்.எல்.ஏ)
நா.ராஜமுருகன்

இதுகுறித்து, நம்மிடம் பேசிய ஆதரவாளர்கள்,

"நாமக்கல் தி.மு.கவை அமைப்புரீதியாக நாமக்கல் கிழக்கு, நாமக்கல் மேற்கு என இரண்டு மாவட்டங்களாக பிரித்துள்ளனர். இதில், மேற்கு மாவட்டத்தில் பரமத்தி வேலூர், திருச்செங்கோடு, குமாரபாளையம் ஆகிய மூன்று தொகுதிகளும், கிழக்கு மாவட்டத்தில் நாமக்கல், ராசிபுரம், சேந்தமங்கலம் ஆகிய மூன்று தொகுதிகளும் உள்ளன. இதில், பெ.ராமலிங்கத்தின் சொந்த ஊர், எம்.எல்.ஏவாக பதவி வகிக்கும் தொகுதி, மாவட்ட துணை செயலாளராக பதவி வகித்தது என எல்லாமே தி.மு.க கிழக்கு மாவட்ட எல்லைக்குள்தான் உள்ளன. ஆனா, சம்பந்தமே இல்லாமல் நாமக்கல் மேற்கு மாவட்டச் செயலாளர் பதவிக்கு பெ.ராமலிங்கம் சீட் கேட்டு, வேட்புமனுத்தாக்கல் செய்தார். அதற்கு காரணம், ஏற்கனவே மேற்கு மாவட்டச் செயலாளராக இருந்து, தற்போது 'மதுரா' செந்திலிடம் அந்த பதவியை இழந்த கே.எஸ்.மூர்த்திதான், தனக்கு கிடைக்காத பதவி ராமலிங்கத்துக்கு கிடைக்கட்டும் என நினைத்து, அவரை விருப்ப மனு செய்ய சொன்னதாகச் சொல்லப்பட்டது. ஆனால், உண்மையில் பெ.ராமலிங்கம் மேற்கு மாவட்டத்தை குறிவைத்ததற்கு காரணம், தற்போதைய கிழக்கு மாவட்ட செயலாளரான கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் தந்த குடைச்சல்தான் என்ற தகவும் வெளியானது.

ராமலிங்கத்தை கிழக்கு மாவட்டத்தில் அரசியல் செய்யவிடாமல், ஒதுக்கினார். இதனால், இருவருக்கும் இடையில் விரிசல் அதிகமானது. அதனைத்தொடர்ந்து, நாமக்கல் தொகுதியில் நடக்கும் அரசு நிகழ்ச்சிகளில் இருவரும் தனித்தனியாக கலந்துகொண்டனர். பல நிகழ்ச்சிகளில் தன்னை ராஜேஸ்குமார் திட்டமிட்டு தவிர்ப்பதாக ராமலிங்கம் வருந்தி வந்தார். தலைமை வரை ராமலிங்கம் அனுப்பிய புகாரை, மேலிடத்தில் தனக்கிருக்கும் செல்வாக்கால் ஒன்றுமில்லாமல் ஆக்கினார் ராஜேஸ்குமார்.

ராஜேஸ்குமார், ராமலிங்கத்தின் மீது வன்மம் கொள்வதற்கு காரணம், ராமலிங்கத்தால்தான் தனது அமைச்சர் கனவு பாழானது என்று நினைப்பதுதான். அதாவது, கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது, நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க பொறுப்பாளராக இருந்த கே.ஆர்.என்.ராஜேஸ்குமார், நாமக்கல் தொகுதியில் சீட் கேட்டார். அதன்மூலம், எம்.எல்.ஏவாகி, தி.மு.க ஆட்சி அமைந்தால் பவர்ஃபுல் அமைச்சராகலாம் என்று நினைத்தார். ஆனால், ராஜேஸ்குமாரிடம் மாவட்ட செயலாளர் பதவியை இழந்த முன்னாள் மத்திய அமைச்சர் காந்திசெல்வனும் நாமக்கல் தொகுதியில் சீட் கேட்டு தீவிரமாக காய்நகர்த்தினார். 'இருவரில் யாருக்கு சீட் கொடுத்தாலும், ஒருவரை ஒருவர் பரஸ்பரம் உள்ளடி வேலைகள் பார்த்து தோற்கடித்துவிடுவார்கள். இதனால், மறுபடியும் நாமக்கல் தொகுதி அ.தி.மு.க கோட்டையாக தொடரும். ஆக இரண்டு பேருக்கும் சீட் கிடையாது' என்று தி.மு.க தலைமை கைவிரித்தது.

கே.எஸ்.மூர்த்தி (நாமக்கல் தி.மு.க மேற்கு மாவட்ட முன்னாள் செயாளர்)
கே.எஸ்.மூர்த்தி (நாமக்கல் தி.மு.க மேற்கு மாவட்ட முன்னாள் செயாளர்)
நா.ராஜமுருகன்

இதனால், எந்த கோஷ்டியிலும் சேராத, தி.மு.க தலைவர் ஸ்டாலினோடு நேரடி தொடர்பில் இருந்த பெ.ராமலிங்கத்துக்கு சீட் கிடைத்தது. அவர் வெற்றியும் பெற்றார். ஆனால், தனது அமைச்சர் கனவை காவு வாங்கிய பெ.ராமலிங்கத்துக்கு அமைச்சர் பதவி கிடைக்காமல், தனது மேலிட செல்வாக்கை வைத்து கச்சிதமாக ராஜேஸ்குமார் செய்துமுடித்தார். இதனால், ராசிபுரம் தொகுதியில் வென்ற மருத்துவர் மதிவேந்தன் என்ற இளைஞருக்கு அமைச்சர் பதவி கிடைத்தது. மாவட்டப் பொறுப்பாளராக இருந்தாலும், எம்.எல்.ஏ., அமைச்சர் என எந்த மக்கள் பதவியையும் வகிக்கமுடியவில்லையே என்று ராஜேஸ்குமார் நொந்துபோனார். அதனாலேயே, ரா,ராமலிங்கத்தை அவர் ஒதுக்கினார். இந்த நிலையில், தி.மு.கவின் முக்கிய பவர்சென்டர்கள் மூலம் முயற்சி செய்து, ராஜேஸ்குமார் ராஜ்யசபா எம்.பியானார். இருந்தாலும், 'மாவட்டத்தில் அமைச்சர் என்ற அந்தஸ்தோடு சுற்றமுடியவில்லையே என்ற வருத்தம் அவரை விட்டு அகலவில்லை.

இந்த சூழலில்தான், சமீபத்தில் நடந்து முடிந்த 15 வது உட்கட்சி தேர்தலில், பெ.ராமலிங்கம் வகித்து வந்த மாவட்ட துணை செயலாளர் பதவி மறுபடியும் அவருக்கு கிடைக்ககூடாது என்று உள்ளடி செய்ததாகச் சொல்லப்பட்டது. இதனை முன்கூட்டியே தெரிந்துகொண்ட ராமலிங்கம், 'இனி, ராஜேஸ்குமார் தன்னை இங்கே வளரவிடமாட்டார்' என்று நினைத்து, தனக்கு சம்பந்தம் இல்லாத மேற்கு மாவட்ட செயலாளர் பதவிக்கு விருப்ப மனு அளித்தார்.

முதல்வரோடு தனக்கிருக்கும் நேரடி பரிச்சயம், தனக்கு மேற்கு மாவட்ட செயலாளர் பதவியை நிச்சயம் வாங்கி தரும் என்று மலைபோல நம்பினார். ஆனால் அவர் நினைத்தற்கு மாறாக, 'உங்களுக்கு சீட் கொடுத்தா, மேற்கு மாவட்டத்தில் கட்சி பணி பார்ப்பீங்களா, இல்லை, கிழக்கு மாவட்டத்தில் உள்ள உங்க தொகுதியில் மக்கள் பணி பார்ப்பீங்களா?. இது, வேண்டாத வேலை. மனுவை உடனே வாபஸ் வாங்குங்க' என்று தி.மு.க தலைமை கடிந்துகொண்டதாகச் சொல்லப்பட்டது. அந்த அதிர்ச்சி அகலுவதற்குள், அவர் ஏற்கனவே எதிர்பார்த்தமாதிரி, தான் வகித்த கிழக்கு மாவட்ட துணை செயலாளர் பதவியும் பறிபோக, அல்லாடி வருகிறார். 'ஒரு உறைக்குள் இரு கத்திகள் இருக்க முடியாது' என்று ராஜேஸ்குமார், ராமலிங்கத்துக்கு கிழக்கு மாவட்டத்தில் பதவி கிடைக்காமல் பார்த்துக்கொண்டார். மேற்கு மாவட்ட செயலாளர் ஆக முயற்சி பண்ணி, கடைசியில் உள்ளப் பதவியும் போயிட்டேனு ராமலிங்கம் அண்ணன் இப்போ பொருமிகிட்டு இருக்கிறார். இனி, அவர் அரசியல் வாழ்க்கை அவ்வளவுதான். அவரை நம்பியிருந்த எங்க கதியும் இப்போ அதோகதியாகிவிட்டது" என்று குமுறித் தீர்த்தார்கள்.

இதுகுறித்து, நாமக்கல் எம்.எல்.ஏ பெ.ராமலிங்கம் தரப்பில் பேசினோம்.

"அண்ணன் கட்சிக்காக உண்மையாக உழைக்கிறார். ஆனால், சிலர் அவரோட வளர்ச்சி பிடிக்காமல், அவருக்கு எதிராக சதி பண்ணி, இப்போ நிர்கதியாக நிக்க வச்சுட்டாங்க. ஆனால், கட்சி தலைமைக்கு அண்ணனின் உழைப்பு பற்றியும், கட்சிக்காக அவர் ஆற்றிய அளப்பரிய பணிகள் குறித்தும் தெள்ளத்தெளிவாக தெரியும். அதனால், சிலரது சதிவேலைகளை கடந்து, மறுபடியும் கட்சியில் அவர் மகுடம் சூடுவார்" என்றார்கள்.

கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் (தி.மு.க நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர்)
கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் (தி.மு.க நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர்)
நா.ராஜமுருகன்

நாமக்கல் தி.மு.க கிழக்கு மாவட்டச் செயலாளர் கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் தரப்பில் பேசினால்,

"அண்ணனுக்கும், ராமலிங்கத்துக்கும் எந்த பிரச்னையும் இல்லை. அவர் அண்ணன் பதவிக்கு வர முயற்சித்தார். அது முடியாது என்று முன்கூட்டியே தெரிந்ததால், மேற்கு மாவட்டச் செயலாளர் பதவிக்கு சீட் கேட்டு விருப்ப மனு கொடுத்தார். அதனால், தலைமை அவரை பதவியில் அமர்த்தவில்லை. அவரது வீழ்ச்சிக்கு அவர் செய்த அதிகபிரசங்கிதனமே தவிர, எங்கண்ணன் காரணமில்லை" என்றார்கள்.