Published:Updated:

தீவிரமாகும் ரெண்டு சர்ச்சைகள்: 'கந்த சஷ்டி வரிகள்', 'திருக்குறளைக் காணோம்!'

கறுப்பர் கூட்டம்
கறுப்பர் கூட்டம்

சுரேந்தர் நடராஜன் என்பவர் 'கறுப்பர் கூட்டம்' என்ற யூடியூப் சேனலை நடத்திவருகிறார். தொடக்கத்தில், தான் ஆர்.எஸ்.எஸ்-ல் இருந்ததாகவும், அவர்களின் கொள்கை பிடிக்காமல் திராவிடர் கழகத்தில் தன்னை இணைத்துக்கொண்டதாகவும் கூறிக்கொள்கிறார்

கந்த சஷ்டி கவசத்தை இழிவு படுத்திய குற்றச்சாட்டில், 'கறுப்பர் கூட்டம்' யூடியூப் சேனல்மீது தமிழகம் முழுவதும் ஆங்காங்கே காவல்துறையில் புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன.

அந்த சேனலைச் சேர்ந்தவர்கள் சிலர் கந்த சஷ்டி வரிகளைத் திரித்து, ஆபாசமாகக் கருத்துகளைக் கூறியது உலகம் முழுவதும் வாழும் இந்து சமயத்தினர் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

சுரேந்தர் நடராஜன் என்பவர் 'கறுப்பர் கூட்டம்' என்ற யூடியூப் சேனலை நடத்திவருகிறார். தொடக்கத்தில், தான் ஆர்.எஸ்.எஸ்-ல் இருந்ததாகவும், அவர்களின் கொள்கை பிடிக்காமல் திராவிடர் கழகத்தில் தன்னை இணைத்துக்கொண்டதாகவும் கூறிக்கொள்கிறார். இரண்டு வருடங்களுக்கு முன்னர் 'கறுப்பர் கூட்டம்' யூடியூப் சேனலைத் தொடங்கிய சுரேந்தரின் வீடியோக்கள் இந்து மதக் கடவுள்களையும், இந்து புராணங்களையும் விமர்சிக்கும் நோக்கத்திலேயே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. சமீபத்தில் 'ஆபாச புராணம்' என்கிற தலைப்பில், கந்த சஷ்டி கவசத்தில் வரும் பாடல் வரிகளான 'சேரிள முலைமார் திருவேல் காக்க...' என்ற வரிகளைத் திரித்து, ஆபாசமாக சுரேந்தர் பேசியிருப்பது அதிர் வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

சுரேந்தர்மீது சென்னை மத்திய குற்றப்பிரிவில் புகார் அளித்துள்ளார் இந்து தமிழர் கட்சியின் தலைவர் ராம ரவிக்குமார். அவர் இது குறித்துக் கூறுகையில், "பாரதியார் 'வலிமை சேர்ப்பது தாய் முலைப் பாலடா' என்றார். பாரதியார் ஆபாசக் கவிஞரா? இறந்த தன் தாயை எரியூட்டும்போது 'கனகமுலை தந்தாளை எப்பிறப்பில் காண்பேன் இனி' என்றார் பட்டினத்தார். அது ஆபாசமா?

கறுப்பர் கூட்டம்
கறுப்பர் கூட்டம்

சமீபகாலமாக இந்துமதக் கடவுளர்களையும், உணர்வுகளையும் தாக்கும் போக்கு அதிகரித்துள்ளது. இதை எந்த அரசியல் கட்சிகளும் கண்டிக்காதது வேதனை யளிக்கிறது. இந்த விஷயத்தில் தி.மு.க., அ.தி.மு.க ஆகிய இரு கட்சிகளுமே ஒரே நிலைப்பாட்டில் இருக்கின்றன. சம்பந்தப்பட்ட கறுப்பர் கூட்டம் நிர்வாகிகளைக் கைது செய்ய வலியுறுத்த வேண்டிய பா.ஜ.க., 'வீட்டுக்கு முன் போராட்டம் நடத்துவோம்' என அறிவிக்கிறது. ஆனால், சாமானிய இந்துக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. இனியும் அவர்களை ஏமாற்ற முடியாது" என்றார்.

- விரிவான செய்திக் கட்டுரையை ஜூனியர் விகடன் இதழில் வாசிக்க க்ளிக் செய்க... https://bit.ly/2WNMu75 > கந்த சஷ்டி வரிகளை கொச்சைப்படுத்தலாமா? - 'கறுப்பர் கூட்டம்'மீது கொதிக்கும் இந்துக்கள்

திருக்குறளைக் காணோம்!

கொரோனா ஊரடங்கு காரணமாக 2020, மார்ச் மாத இறுதியிலிருந்து பள்ளி, கல்லூரிகள் செயல்படவில்லை. இந்தநிலையில், "பள்ளிகள் திறக்கப்படாத காரணத்தால் மாணவர்களின் சுமை அதிகரித்துவிடக் கூடாது என்பதைக் கருத்தில்கொண்டு சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தில், 9 முதல் 12-ம் வகுப்பு வரை 30 சதவிகிதப் பாடங்கள் குறைக்கப்படும்'' என்று மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் ஜூலை 7-ம் தேதி அறிவித்தது. தொடர்ந்து ஜூலை 8-ம் தேதி, நீக்கப்பட்ட பாடங்களின் தலைப்புகளை சி.பி.எஸ்.இ நிர்வாகம் வெளியிட்டது. அதில்தான் 'உள்நோக்கத்துடன் சில பாடப்பிரிவுகள் நீக்கப்பட்டுள்ளன' என்று சர்ச்சை கிளம்பியிருக்கிறது.

சி.பி.எஸ்.இ 10-ம் வகுப்பு பாடத்திட்டத்தில் ஜனநாயகம், பன்முகத்தன்மை ஆகிய பாடப்பிரிவுகளும், 11-ம் வகுப்பில் கூட்டாட்சி, குடியுரிமை, மதச்சார்பின்மை ஆகிய பாடப்பிரிவுகளும் நீக்கப்பட்டுள்ளன. இதற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியது. பா.ஜ.க தங்கள் கொள்கைகளைக் கல்வித்திட்டத்தில் திணிக்கவே இத்தகைய நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பதாக விமர்சனங்கள் எழுந்தன.

9 மற்றும் 10-ம் வகுப்புகளின் தமிழ்ப் பாடப்புத்தகத்தில் திருக்குறள், பெரியார் சிந்தனைகள், எல்லைப் போராட்ட வரலாறுகள் உள்ளிட்ட பாடப்பிரிவுகளும் நீக்கப்பட்டுள்ளன. இது தமிழ் ஆர்வலர்கள் மத்தியில் அதிருப்தியை உருவாக்கியுள்ளது. இது குறித்துப் பேசியவர்கள், "பிரதமர் மோடி எல்லையில் திருக்குறளை வாசித்த சில நாள்களில் பாடத்தில் திருக்குறளை நீக்கியிருக்கிறார்கள். திருக்குறள், சிலப்பதிகாரமே இல்லாத ஒரு தமிழ்ப்பாடத்தை இந்த ஆண்டுதான் பார்க்கிறோம். 'அறிவியல் தொழில்நுட்பம்' என்ற தலைப்பில் தமிழ்ப் பாடத்துக்குச் சம்பந்தமே இல்லாத பிரிவுகளெல்லாம் இருக்கும்போது, மிக முக்கியமான தலைவர்கள் மற்றும் போராட்டங்கள் குறித்துக் கற்பிக்கும் பாடப்பிரிவுகளையும் நீக்கியிருப்பது உள்நோக்கம் கொண்டது" என்கிறார்கள்.

தீவிரமாகும் ரெண்டு சர்ச்சைகள்: 'கந்த சஷ்டி வரிகள்', 'திருக்குறளைக் காணோம்!'

"பாடங்களைக் குறைக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், அதைச் சந்தர்ப்பமாகப் பயன்படுத்திக்கொண்டு, அரசியலமைப்பில் சொல்லப்பட்டுள்ள முக்கிய அம்சங்களை நீக்கியிருப்பது தவறானது. நம் தலைவர்கள் குறித்தும் பண்பாடு குறித்தும் மாணவர்கள் கற்றுக்கொள்ளக் கூடாது என்பதில் மத்திய பா.ஜ.க அரசு முனைப்பாக உள்ளது. தவிர, மத்தியில் ஆளும் அரசுக்கென்று அஜண்டா ஒன்று உள்ளது. வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அதைப் புகுத்தி வருகிறார்கள்'' என்றார் தமிழக முன்னாள் கல்வி அமைச்சர் தங்கம் தென்னரசு.

- விரிவான செய்திக் கட்டுரையை ஜூனியர் விகடன் இதழில் வாசிக்க க்ளிக் செய்க... https://bit.ly/30me8sK > பாடப்பிரிவுகள் நீக்கம்... பா.ஜ.க-வின் உள்நோக்கமா?

சிறப்புச் சலுகை: விகடன் App-ஐ டவுன்லோடு செய்து ரெஜிஸ்டர் செய்தால், ஆனந்த விகடன் தொடங்கி அவள் கிச்சன் வரை அனைத்து இதழ்களையும் 30 நாள்களுக்கு கட்டணமின்றி வாசிக்கலாம். குறிப்பாக, கடந்த 2006-ல் இருந்து வெளியான அனைத்து ப்ரைம் கன்டென்ட்டுகள், பொக்கிஷக் கட்டுரைகளிலும் வலம்வர முடியும். விகடன் ஆப் டவுன்லோடு லிங்க் இதோ https://bit.ly/2VRp3JV

அடுத்த கட்டுரைக்கு