`ஆம், எம்.ஜி.ஆர் தொப்பி அணிவேன்!’- மனம் திறக்கும் கமல் | பகுதி - 1 #DayWithaleader

`பிக்பாஸ் டு மய்யம்... பர்சனல் முதல் அரசியல் வரை...’ முதன்முதலாக விகடனிடம் மனம் திறக்கும் கமல்!
சனிக்கிழமை..09.01.2021 அந்தி சாய்ந்த நேரம்...'ஓகே' சொல்லிவிட்டார் என்று தகவல் வர, அதற்கான தயாரிப்புகளோடு பூந்தமல்லி நோக்கி பயணித்தோம். தொலைக்காட்சியில் பார்த்த அந்த உள்ளரங்கத்தின், வெளிப்பரப்போ பிரமாண்டமாக இருந்தது. அந்த பிரமாண்ட நிலப்பரப்பில், பல்வேறு கட்ட சோதனைகளைக் கடந்து நம்முடைய குழுவினருடன் காரில் உள்ளே நுழைந்தோம்.
அங்கே அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நாயகனின் பல்வேறு படங்கள், பாதையின் இருபுறமும் அலங்கரித்திருந்தன. எளிமையாகச் சொல்லவேண்டுமென்றால் சுவர்களில் புன்னகையோடு காட்சி தந்தார் பிக்பாஸ் நாயகன். ஆம், யாரை சந்திக்க வந்திருக்கிறோம் என்று புரிந்திருப்பீர்கள்.... வாசக நண்பர்களே...!
அவரேதான் வார இறுதி நாள்களில் நிகழ்ச்சி தொகுப்பும், வார நாள்களில் அரசியல் பரப்புரைப் பயணமும் , இதற்கிடையே மே மாதத்துக்குள் ஒரு படத்தை ரிலீஸ் செய்தே தீருவேன் என சபதமும் எடுத்திருக்கும் `கமல்ஹாசன்'.
நம்முடைய 'டே வித் எ லீடர் ' என்ற புதிய தொடருக்காகவே மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனோடு நம் தொடரின் முதல் பயணத்தை தொடங்கினோம்.
நாம் சென்றிருந்த இடம் பிக்பாஸ் தளம்.
`எங்கள் குழுவினர் அல்லாத வெளி நபர்களாக உங்கள் குழுவினரை மட்டுமே நாங்கள் அனுமதித்துள்ளதால்தான் இத்தனை சோதனைகள். தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம்' என்ற பவுன்சர்கள், கமல் சார் வரும் வழி இதுதான் என பாதையைக் காட்டினர். அவர் வெளியே வரும் பிக்பாஸ் அரங்கின் பேக்டோர் பாதையில் காத்திருந்தோம்.
அப்போது மணி இரவு 09.30.
அடுத்த நிமிடம் தொடங்குவதற்குள் சரசரவென கதவைத் திறந்தபடியே வெண்மையான கோட் ஷூட்டில் வெளியே வந்தார் கமல்.
`யார் இளங்கோ ?' என்று அவர் கேட்க, 'நான்தான்' என என்னை அறிமுகம் செய்துக்கொள்ள',`ஓ ! மகிழ்ச்சி...நாளை நாம் ஏர்போர்ட்டில் சந்திக்கலாம்...களத்தில் சந்திப்போம்..'என்றவரிடம் `ஆம், மக்களை சந்திப்போம் ' என்றேன்.

சின்னப் புன்னகையைப் பதிலாகப் பகிர்ந்தவர், மடமடவென தன் மேல்கோட்டை கழற்றியபடியே தன் கேரவனுக்குள் சென்றார்.
சில நிமிடங்களில் கருப்பு அரை கை டி- ஷர்ட்டில் இயல்பாக வெளிவந்த கமல், `நாளை சந்திப்போம்' என மீண்டும் சொல்லிவிட்டு, தன் காரில் வீட்டுக்கு திரும்பினார்.
அப்போது இரவின் காற்று குளிரைக் கூட்ட, அந்த சில்லிட்டலோடு நாமும் வீடு திரும்பினோம்.
10-01-2020 ஞாயிற்றுக்கிழமை மதியம் 01.10 மணி
முதல் நாள்
சென்னை விமான நிலையத்தில் நாம் காத்திருந்த சில நிமிடங்களில் கமல் வர, அவரோடு பேசியபடியே கோவையை நோக்கி விமானத்தில் பயணத்தைத் தொடங்கினோம்.
யெஸ் , கோவை, திருப்பூர், ஈரோடு என 3 மாவட்டங்கள், நான்கு நாள்கள், சுமார் 950 கி.மீ என கமலின் சூறாவளிப் பரப்புரை பயணத்தில்தான் நம்மையும் இணைத்துக் கொண்டோம்.
மேகங்களை வருடியபடியே விமானத்தின் சிறகுகள் முன்னோக்கிச் செல்ல, கமல் குறித்த நினைவுகளை நான் பின்னோக்கி செலுத்திக் கொண்டே இருந்தேன். கேள்விகளுக்காக அவரின் அரசியல் செயல்பாடுகளை அசைபோட்டபடியே இருக்க, கோவை விமான நிலையத்தை ரீச் ஆனது நாம் பயணித்த விமானம்.
கோவை விமான நிலையம் மதியம் 03.30 மணி
கமலை வரவேற்க வெளியே மிகப்பெரியளவில், மக்கள் நீதி மய்யத்தினர் திரண்டிருக்க, அவர் தம் சகாக்களைப் பார்ப்பதற்கு முன் நம்முடைய முதல் கேள்வியை முன் வைத்தோம்.
`மேற்கு மண்டலத்தை அ .தி.மு.க-வின் கோட்டை என்பார்கள். முதல்வர், துணை முதல்வர், அமைச்சர் எஸ்.பி வேலுமணி கோட்டையில் கமல் காலடி எடுத்து வைத்துள்ளார்..?' என்று நம் கேள்வியை முடிப்பதற்குள் ,
`அவர்கள் மனக்கோட்டையை எங்கள் மக்கள் நீதி மய்யம் தகர்க்கும்' என்றபடியே அங்கிருந்து கிளம்பினார் கமல்.
அடுத்து தனக்காக புக் செய்திருந்த நட்சத்திர விடுதியில், தங்கள் கட்சியின் முக்கிய நிர்வாகிகளைச் சந்தித்துவிட்டு மாலை நேரத்தில் கோவை மாநகரப் பகுதிகளில் பரப்புரையைத் தொடங்கினார் கமல்.
மாலை 05.40 மணி.
சிவப்பு நிற பரப்புரை வேனில் பவனியைத் தொடங்கிய கமல் , முதலில் தி.மு.க சிட்டிங் தொகுதியான சிங்காநல்லூருக்கு உட்பட்ட மசக்காளிபாளையத்துக்குள் நுழைந்தார். பெரும் கூட்டம் கூடியிருக்க,`இது ஆளும்கட்சி கோட்டை என்கிறார்கள். இங்கே கூடியிருக்கும் கூட்டத்தைப் பார்க்கும்போது ஆளும்கட்சியின் மனக்கோட்டையைத் தகர்ப்போம் என நம்பிக்கை உறுதிப்படுகிறது' என்றார் கமல் உற்சாகத்தோடு.
அடுத்து சவுரிபாளையம், காந்திபுரம் என பரப்புரை வேன் பயணிக்க, கமல் கான்வாய் வருவதற்கு முன்பாக அடுத்த ஸ்பாட்டான செல்வபுரத்தை நோக்கி நம் டீமோடு பயணித்தேன்.

இரவு 08.09 மணி - செல்வபுரம்
அமைச்சர் எஸ்.பி வேலுமணியின் தொண்டாமுத்தூர் தொகுதிக்கு உட்பட்ட செல்வபுரம் பகுதியில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான மக்களில் சிலரிடம் மைக்கை நீட்டினேன்.
`கமல் நடிகர் என்பதால் பார்க்க வந்துள்ள்ளீரா?' என்றேன் ஒரு பெண்ணிடம். ``எங்க குடும்பமே கமல் ரசிகர்கள்தான். ஆனா இன்னைக்கு இப்போ நாங்க பார்க்க வந்திருக்கிற கமல் , மாற்றத்தைக் கொடுக்கிற புது கமல்’’ என்றார் அழுத்தமாக.
அருகிலிருந்த அவரின் மகளோ,``நான் கல்லூரி முடித்துவிட்டு வேலைக்குப் போகிறேன். டெக்னாலஜி லெவெலில் பல்வேறு மாற்றுத் திட்டங்களை கமல் சொல்கிறார். கம்யூட்டர்மயம் குறித்து பேசுகிறார். அதனால், இங்கே வந்திருக்கிறேன்’’ என்றார் தமது பங்காக.
சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த ஒரு அம்மா, ``இல்லத்தரசிகளுக்கு ஊதியம் என்ற கமலின் அறிவிப்பு பிடிச்சிருந்தது. அதனால ஒரு நன்றி சொல்லலாம்னு இங்க வந்திருக்கோம்’’ என்றார்.
சிறிய சிறிய வாண்டுகளோ, ``அண்ணே, இந்தியன், தசாவதாரத்தில வேறலெவல் -ல கமல் நடிச்சிருப்பாரு. அந்த கமலைப் பார்க்க வந்திருக்கோம்' என்றனர்.
தன் மூன்று சக்கர பைக்கில் எம்.ஜி.ஆர் படம் ஒட்டியிருந்த அங்கிருந்த மாற்றுத்திறனாளி ஒருவரைப் பார்த்த நான், அவரிடம் ``எம்.ஜி.ஆர் படம் ஒட்டியிருக்கீங்க. எம்.ஜி.ஆரின் தொடர்ச்சி நான்-ன்னு கமல் சொல்றாரு. நீங்க அதை ஏத்துக்குறீங்களா?’’ என்றேன்.
``நான் பக்கா எம்.ஜி.ஆர் ரசிகன். அவரைப் போல நல்லது செய்றேன்னு கமல் சொல்லியிருக்காரு. வாத்தியாரோடு பழகியவர் கமல். அதனால அவர் சொல்றதை நான் ஏத்துக்கிறேன்’’ என்றார்.
இப்படி நாம் மக்களிடம் கருத்துக்களைக் கேட்டுக்கொண்டிருந்த நேரத்திலேயே மேளதாளங்களின் வேகம் கூடி, கமல் பரப்புரை வேன் வருவதை உணர்த்தியது.
இரவு 08.30 மணி
செல்வபுரத்தில் திரண்டிருந்த மக்கள் மத்தியில் கமல், `நாளை நமதே' என்று முழங்க, அங்கிருந்த ம.நீ.மய்யத்தினரும் அதையே முழங்கினர். அவர்களிடம், `இது அமைச்சரின் தொகுதி. அவர் நிறைய நல்லது செய்திருப்பதாகவும் இங்குள்ள மக்கள் சிலர் சொல்கிறார்கள். ஆளும்கட்சியும் கூறுகிறது. அப்படியிருக்க, இந்தத் தொகுதியில் கமலால் மாற்றத்தைக் கொண்டு வந்துவிட முடியுமா ?' என்றேன்.
``நிச்சயம் முடியும்... எங்கள் `நம்மவர் கமல்’ எனும் நேர்மையின் உளி மூலம் ஊழல் இமயமலையை நாங்கள் உடைப்போம்..மாற்றத்தை நிகழ்த்துவோம்’’ என்றார்கள் ஒருமித்த குரலோடு...
இப்படியான பயணங்களோடு அன்றைய இரவு கழிய , அடுத்த நாள் அதிகாலையிலேயே நம் பணிகளைத் தொடங்கிவிட்டோம்.
இரண்டாம் நாள் அதிகாலை 05.10 மணி
எல்லோருக்கும் 24 மணி நேரம் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. அந்தவகையில் கமல், தன்னுடைய 24 மணி நேரத்தை எப்படி கட்டமைத்துக் கொள்கிறார்..குறிப்பாக அவரின் விடியல் எப்படியிருக்கும் என அறிய அவரின் விடுதிக்கு நம் டீமோடு பயணித்தேன்.
சுமார் 05.10 மணியளவில் 'ஒரு குட் மார்னிங்'-கோடு தம்முடைய காலையைத் தொடங்கியவர், முதலில் தம்முடைய ஆக்சிஜன் மற்றும் பல்ஸ் அளவுகளைப் பார்த்தார். அதன் பிறகு காஃபி பருகியபடியே, மொபைல் எடுத்து வாட்ஸப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வந்துள்ள முக்கியச் செய்திகளைப் பார்க்கிறார். இதன் தொடர்ச்சியாக அன்றைய நாளிதழ்களைப் புரட்டியபடியே தகவல்களைத் திரட்டி, கையோடு இருக்கும் TAB-ல் குறிப்பெடுத்துக் கொள்கிறார். இதன் பிற்பாடு தம்முடைய உடற்பயிற்சியைத் தொடங்கினார். அதிக நேரம் நின்றபடியே பரப்புரை செய்வதால் கால்கள் மற்றும் வயிறு பகுதிக்கு அதிகமானளவில் வொர்க் -அவுட் செய்கிறார் என்றார் கமலின் உதவியாளர்.

இதற்கடுத்து அந்தந்த மாவட்ட ம.நீ.ம நிர்வாகிகளுடன் சில கலந்துரையாடல்கள் நடந்தன. அவர்களுடன் வட்ட அளவிலான பிரச்னைகள், என்னென்ன சிக்கல்களை மக்கள் சந்திக்கிறார்கள் என்பது குறித்தெல்லாம் பேசி நோட்ஸ் எடுத்துக் கொள்கிறார் கமல். இந்த காட்சிகளைப் பார்த்துக்கொண்டே இருக்கும்போதே காலை உணவுக்குத் தயாரானார் கமல்.
இடையிலேயே காலை உணவை முடித்த நமது டீமும், அவரின் டைனிங் டேபிளை நோக்கி நகர்ந்தோம்.
காலை 08.20 மணி
பூரியும் கிழங்கும் மெல்ல சுவைத்தபடியே இருந்த கமலிடம், 'நேற்று இரவு சுமார் 11.30 மணியளவில் விடுதி திரும்பி, இன்று அதிகாலையிலேயே எழுந்து வேலைகளை அதே புத்துணர்ச்சியோடு தொடங்கிவிட்டீர்கள். உங்கள் எனர்ஜி-க்கான காரணமென்ன?' என்றோம்.
``அதற்கு முன்பாக நீங்க சாப்டீங்களா?' என்று கமல் கேட்க, 'ம்ம் சாப்பிட்டோம்' என பதிலளித்தோம். அதன்பிறகு பதில் சொல்ல தொடங்கியவர், ``என்ன கேட்டீங்க...எனர்ஜி-க்கான காரணமென்ன என்றுதானே... மக்கள்தான் என் எனர்ஜிக்கான காரணம். அவர்கள் காட்டும் அன்பு, திரையுலகில் பெற்ற அன்பையும் விட அதிகளவில் எனர்ஜி கொடுக்கிறது’’ என்றார் நெகிழ்ச்சியோடு.
உங்கள் பிட்னெஸ் ரகசியம் என்ன? என்றேன். `அளவான உணவு, அவசியமான உடற்பயிற்சி' என்றார் கமல். இந்த நேரத்தில் சுட,சுட மற்றொரு பூரி வர, அந்த சூட்டோடு சூடாக அரசியல் கேள்விகளை முன்வைத்தேன்.
`உங்களை அரசியலில் ஜீரோ என்கிறாரே முதல்வர் எடப்பாடி பழனிசாமி' என்றேன்.
'ஜீரோ பக்கத்துல நம்பர் சேர்த்துக்கோங்க. ஏழரை கோடி மக்கள் என்கிற இந்த நம்பர்களை சேர்த்து பாருங்கள்... கமல் எனும் ஜீரோவின் மதிப்பு இப்போது எந்தளவுக்கு உயர்ந்திருக்கிறது பார்த்தீர்களா'’ என்றார் தனது டிரேட் மார்க் புன்னகையோடு...
அடுத்த கேள்வியாக, `நீங்கள் வீட்டுக்கு வீடு இன்டர்நெட் வசதி ஏற்படுத்தித் தருவதாக உங்கள் ஏழு அம்ச திட்டத்தில் தெரிவித்திருந்தீர்கள். தற்போதோ முதல்வர், மாணவர்களுக்கு ஒரு நாளைக்கு இரண்டு ஜி.பி டேட்டா இலவசம் என்று அறிவித்துள்ளார். உங்களை அவர் பின் தொடர்வதாக உணர்கிறீர்களா?' என்றேன்.
`இதேபோல நேர்மையையும் அவர் பின்தொடர்ந்தால் நல்லது ' என்றார் பட்டென...
மூக்கை துளைத்த பூரி மசால் மணத்தோடு கமலின் பதிலும் மனதுக்குள் நுழைய, அத்தோடு கமலுடனான காலை செஷனும் முடிய, அடுத்த செஷனுக்காக இருவருமே நகர்ந்தோம்.
மதியம் 01.00 மணி
தேர்தல் பரப்புரைக்காக கமல் கேரவனுக்குள் ஏற , நமது டீமும் அவரோடு ஏறினோம். அங்கிருந்தே அரசியல் கேள்விகளை முன்வைத்தேன்.
`2018 பிப்ரவரி 21-ம் தேடி மதுரை ஒத்தக்கடை மைதானத்தில் மக்கள் நீதி மய்யத்தை தொடங்கினீர்கள். இந்த மூன்றாண்டு அரசியல் பயணத்தை எப்படி பார்க்கிறீர்கள்?’
``எல்லாவற்றிலும் அரசியல் உள்ளது. அரசியல் நம்மோடு கலந்திருக்க வேண்டும்... `அரசியல் இருந்ததால்தான் சுதந்திரமே வந்தது’ என்று என் அப்பா சொல்லிக்கொண்டே இருப்பார் . 'அப்பாக்களே இப்படித்தான்' என அப்போது நினைத்துக் கொண்டேன். ஆனால் அது தவறு என்பதை தற்போது உணர்கிறேன்.

என் வாழ்க்கையில் ஒரு முக்கியமான கட்டத்தை அடைந்துவிட்டேன் என்கிற உணர்வை இந்த மூன்றாண்டு ஏற்படுத்தியுள்ளது. மக்கள் எங்களுக்குக் காட்டும் ஆதரவு, நெகிழச் செய்கிறது. எங்கள் கடமையுணர்வை அதிகரிக்கிறது’’ என்றார்.
அடுத்த கேள்வியாக, ``சிறந்த மாநிலம் உள்ளிட்ட பரிசுகளை நம் மாநிலம் பெற்றுள்ளது என்று முதல்வர் கூறுகிறார். தி.மு.க-வும் கூட, `திராவிட ஆட்சியால்தான் தமிழ்நாடு பலவற்றிலும் முன்னேறியுள்ளது என்று சொல்கிறது. அப்படியிருக்க, அரசியல் களத்தில் புதிதாக கமல் என்கிற ஓர் புதிய சக்திக்குத் தேவை இருக்கிறதா?’’
``தேவை இல்லாமல் நான் எதிலும் மூக்கை நுழைக்க மாட்டேன். எங்கள் தேவையை இங்கிருக்கிற ஒருசில அரசியல் கட்சிகளே உருவாக்கியுள்ளன. அந்த அளவுக்கு இவர்கள், தங்கள் ஆட்சியின் மூலம் தமிழ்நாட்டின் வளர்ச்சியைச் சிதைத்துள்ளனர். நம், தமிழ்நாடு போட்டிபோட வேண்டியது ஊழல் நிறைந்த, நைந்துபோன உத்தரப்பிரதேசம், பீகார் போன்ற மாநிலங்களுடன் இல்லை. உலகத்தில் உள்ள நல்ல மாநிலங்கள், நகரங்களுடன் போட்டியிட வேண்டும். அப்படியான ஆரோக்கியமான போட்டியை எங்கள் ம.நீ.மய்யதால் நிகழ்த்த முடியும்’’ என்றார்.
அடுத்து நாம்,``முன்னாள் அமைச்சர் வளர்மதி, `அண்ணன் எடப்பாடியார் தீரன் சின்னமலை, அண்ணன் ஓ.பி.எஸ் பூலித்தேவன். அந்தளவுக்கு சிறப்பான ஆட்சி நடக்கிறது’’ என்று ஒப்பிட்டு பேசியுள்ளாரே’’ என்றோம்.
``என்ன சொல்வது...இப்படியெல்லாம் ஒப்பிடுவதென்பது வரலாற்றுக் கறை’’ என்று சுருக்கமாக முடித்துக்கொண்டார்.
``சமீபத்தில் எம்.ஜி.ஆரின் தொடர்ச்சி நான் என்றீர்கள். தேர்தல் நெருங்குவதால் நீங்களும் எம்.ஜி.ஆர் எனும் தொப்பியை அணியத் தொடங்கிவிட்டீரா?’’ என்று அடுத்த கேள்வியை வீசினோம்.
``நல்ல தொப்பி என்றால் மாட்டிக்கொள்வதில் தப்பில்லையே..(சிரிக்கிறார் ) நான் ரசிகர் இயக்கமாக வைத்திருந்தபோதே எங்கள் கூட்டத்துக்கு வந்து வாழ்த்தியவர் எம்.ஜி.ஆர். இன்றைக்கு பல அமைச்சர்கள் அவரைப் பார்த்துக் கூட இருக்க மாட்டார்கள். ஆனால், நான் அவர் மடியில் தவழ்ந்தவன். அண்ணனாக ஏற்றுக்கொண்டு அவரிடமிருந்து நல்லவற்றைக் கற்றுக்கொண்டவன். எனவே, எம்.ஜி.ஆர் பெயரை சொல்ல எனக்கு நிறையவே உரிமை உள்ளது’’ என்றார் சற்று காட்டமாகவே.
இப்படியான பதில்கள் மட்டுமில்லாமல், ``இல்லத்தரசிகளுக்கு ஊதியம் வழங்குவோம் என்று குறிப்பிட்டீர்கள். அதற்கான திட்டமென்ன ? எங்கிருந்து நிதியை திரட்ட இயலும்?’’
``உங்கள் பரப்புரையில் கார்ப்பரேட்கள் உதவியும் தேவை என்கிறீர்கள்.... இது எந்த அளவுக்குச் சரி?’’
``என் மக்களை விரைவாக சந்திக்க போயிங் விமானத்தில் கூட பறப்பேன் என்று சொன்னாலும் உங்கள் ஹெலிகாப்டர் பயணம், லக்ஸூரியான ஒன்றாக விமர்சிக்கப்படுகிறதே...’’
உள்ளிட்ட பல்வேறு கேள்விகளையும் கமலிடம் தொடுத்திருந்தோம். அத்தனைக்கும் பொறுமையாக பதிலளித்திருந்தார் கமல். அந்த பதில்கள் என்ன? இதற்கடுத்து எந்தெந்த ஊர்களுக்குப் பயணித்தார் கமல்? என்னென்ன சுவாரஸ்யங்கள், டிவிஸ்டுகள் நடந்தது என்பதையும் உங்களுக்குச் சொல்கிறோம். அத்தனையும் தெரிந்துகொள்ள நீங்கள் கொஞ்சம் பொறுத்திருங்க்க வேண்டும்... ஏனெனில் கமலின் கேரவன் வண்டியைத் தற்போது இளைப்பாறலுக்காக நிறுத்தியிருக்கிறார். வண்டி கொஞ்சம் நேரம்தான் நிற்கும்...அதற்குள் உங்களின் அடுத்தடுத்த பணிகள் இருந்தால் முடித்துவிட்டு வாருங்கள் அன்பு வாசகர்களே....
தொடரும்....
மேற்கண்ட கட்டுரையின் காணொலி வடிவம்.