Published:Updated:

இந்தி எதிர்ப்புப் போராளி, துணைப் பேராசிரியர், பத்திரிகை ஆசிரியர்... க.அன்பழகனின் வாழ்க்கைக் குறிப்பு!

தமிழர்களுடைய இன உரிமை, பகுத்தறிவு, சுயமரியாதை, சமூக நீதி என்ற பெரியார் போட்ட விதைகளையெல்லாம் தூக்கி வளர்த்தவை திராவிட இயக்கங்கள். அதன் வேராகவும், விழுதாகவும் இருந்தவர்களுள் ஒருவர் பேராசிரியர் அன்பழகன்.

கலைஞர் கருணாநிதியாலும் ஸ்டாலினாலும் தி.மு.க தொண்டர்களாலும் வாஞ்சையோடும், மரியாதையோடும் உச்சரிக்கப்பட்ட சொல் `இனமான பேராசிரியர்'. தி.மு.க-வின் முதுபெரும் தலைவரும் கட்சியின் பொதுச் செயலாளராக 43 ஆண்டுகள் செயலாற்றிய பேராசிரியர் க.அன்பழகன் இன்று அதிகாலை மறைந்தார். அவருக்கு வயது 97. மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 75 ஆண்டுக்கால நண்பர்; திராவிட இயக்கக் கொள்கைப் பற்றாளர்; சென்னை பச்சையப்பன் கல்லூரியில் துணைப் பேராசிரியராகப் பணியாற்றியவர்; இளம்வயதில் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டவர்; கட்சியினரிடையே அறிவுசார் முகமாக விளங்கியவர் பேராசிரியர் க.அன்பழகன். திராவிட இயக்க கொள்கை சார்ந்து பல நூல்களை எழுதியுள்ளார். அவரது உரைகளின் வழியாகவே தெளிவு பெற்றோம் எனப் பல திராவிட இயக்கத்தினர் கூறுவதுண்டு.

கலைஞருடன் பேராசிரியர் க.அன்பழகன்
கலைஞருடன் பேராசிரியர் க.அன்பழகன்

தொடர்ச்சியான வாசிப்பும், தெளிவான அரசியல் பார்வையும் கட்சிகளைத்தாண்டியும் அவரை மதிப்புமிக்கவராய் மாற்றியது. திராவிட இயக்கத்தின் மிகப்பெரிய பலமான பத்திரிகை உலகிலும் கால் பதித்தவர். `புது வாழ்வு' என்ற இதழை நடத்தியிருக்கிறார். அழகுராணி, இன-மொழி வாழ்வுரிமைப் போர், உரிமை வாழ்வு, தமிழர் திருமணமும் இனமானமும், தமிழினக்காவலர் கலைஞர், தமிழ்க்கடல், தமிழ் வானின் விடிவெள்ளி தந்தை பெரியார், தொண்டா? துவேஷமா?, வகுப்புரிமைப் போராட்டம், வளரும் கிளர்ச்சி, 1953, (டாக்டர் நாயர் காலத்திலிருந்து 1953 வரை திராவிட இயக்கத்தின் வரலாறு), வாழ்க திராவிடம் (ஓர் ஆராய்ச்சி நூல்), 1947, விடுதலைக் கவிஞர், விவேகானந்தர் - விழைந்த மனிதகுலத் தொண்டு உள்ளிட்ட நூல்களை எழுதியுள்ளார்.

பேராசிரியர் அன்பழகன் மறைவு குறித்து கவிஞர் மனுஷ்யபுத்திரனிடம் பேசினோம். ``அரசியலில் பங்கேற்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு, அரசியலில் விசுவாசம், கொள்கை சார்ந்த அரசியல் இவற்றைக் கற்றுக்கொள்ள பேராசிரியர் வாழ்க்கை ஒரு பாடம். பெரியாரின் தொண்டனாக, அண்ணாவின் தம்பியாக, கலைஞரின் தோழனாக தன்னுடைய நீண்ட அரசியல் பயணத்தை மேற்கொண்டுள்ளார். தமிழர்களுடைய இன உரிமை, பகுத்தறிவு, சுயமரியாதை, சமூக நீதி என்ற பெரியார் போட்ட விதைகளையெல்லாம் தூக்கி வளர்த்தவை திராவிட இயக்கங்கள். அதன் வேராகவும், விழுதாகவும் இருந்தவர்களுள் ஒருவர் பேராசிரியர் அன்பழகன். வெகுஜன அரசியலுக்கு வருகிறவர்கள் காலப்போக்கில் தங்களது கொள்கைகளை சமரசம் செய்துகொள்வார்கள். ஆனால், வாங்கு வங்கி அரசியலாக இருந்தாலும் அதில் கொள்கை சார்ந்த சமரசம் செய்யத் தேவையில்லை என அண்ணாவைப்போல, கலைஞரைப் போல, கடைசிவரை தன் கொள்கையில் சமரசம் செய்துகொள்ளாமல் வாழ்ந்தவர் பேராசிரியர். அண்ணா, கலைஞர், பேராசிரியர் அன்பழகன் இவர்கள் மூவருடைய பார்வைதான் தி.மு.க-வினுடையது. இன்றைக்கு அந்த மூவரும் நம்மிடையே இல்லை.

திராவிட இயக்கத் தலைவர்களுடன் பேராசிரியர் க.அன்பழகன்
திராவிட இயக்கத் தலைவர்களுடன் பேராசிரியர் க.அன்பழகன்

பேராசிரியர் என்பது அவருக்கு வழங்கப்பட்ட கௌரவ பட்டமல்ல. அவர் தொடர்ந்து கற்றுக்கொள்ளக் கூடியவராக இருந்திருக்கிறார். பல நூல்களை எழுதியிருக்கிறார். அவர் இயக்கத்தின் வழியாக மக்களுக்குக் கற்பிக்கக்கூடியவராக இருந்தார். அவர் ஒருபோதும் தன்னை முன்னிறுத்தி அரசியல் செய்யவில்லை. கலைஞர்தான் இந்த இயக்கத்தை வழிநடத்த முடியும் என்ற தெளிவான புரிதலோடு கலைஞரின் அனைத்துச் செயல்பாடுகளுக்கும் உறுதுணையாக நின்றார். கட்சியின் பொதுச் செயலாளராக 43 ஆண்டுகள் இருந்துள்ளார். கிட்டத்தட்ட 5 தலைமுறைகளைக் கடந்த கட்சி தி.மு.க. அத்தனை பேருடனும் இணக்கமாக இருந்துள்ளார். அந்த அளவுக்குக் கொள்கை வெளிப்பட்ட அரசியலை நடத்தியிருக்கிறார். தன்னை முன்னிறுத்திக் கொள்ளாத நம்பிக்கையான அரசியலை நடத்தியுள்ளார். இந்த நம்பகத்தன்மைதான் அவரின் பலம். தி.மு.க என்கிற இந்த மாபெரும் இயக்கம் பல புயல்களைச் சந்தித்திருக்கிறது. பல தோல்விகளைச் சந்தித்திருக்கிறது. ஆனால், எதனாலும் பேராசிரியரின் இடம் பாதிக்கப்படவில்லை. அவரது மனஉறுதி பாதிக்கப்படவில்லை. அவரது கொள்கை பாதிக்கப்படவில்லை. அதனால்தான். அந்த இயக்கம் கொண்டாடியது.

அண்ணா, கலைஞர், தளபதி என மூவரோடும் பணியாற்றியிருக்கிறார் பேராசிரியர் அன்பழகன். பேராசிரியரின் உறுதுணை என்பது மாநில உரிமைகள், மொழி உரிமை, சமூக நீதி இது மூன்றையும் விட்டுக்கொடுக்கக் கூடாது என்பதே. அதற்குப் பங்கம் வந்தால் உறுதியுடன் நின்று போராட வேண்டும். இவையெல்லாம்தான் அண்ணா, கலைஞர், பேராசிரியரின் கொள்கைகள். இந்தக் கொள்கைகள் இருக்கும்வரை இவர்கள் யாருக்கும் மறைவில்லை " என்றார் உருக்கமாக.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கவிஞர் கலாப்ரியா, ``நான் சின்ன வயதில் கேட்ட முதல் மேடைப் பேச்சு அன்பழகனுடையதுதான். கலைஞர் மாதிரி ரொம்பவே மொழிநயத்தோடு எல்லோரையும் ஈர்க்கும்விதமான பேச்சு அல்ல. அதேநேரம் இலக்கியத்தரமான பேச்சும் அல்ல. திராவிட இயக்கக் கொள்கைகளை எளிமையாகப் புரிந்துகொள்ளும் தன்மையோடு எனக்கு நெருக்கமாக இருந்தது அந்தப் பேச்சு. அதிலிருந்து அவரின் செயற்பாடுகளைக் கவனித்தே வருகிறேன்.

அன்பழகன் அண்ணாவுடன்
அன்பழகன் அண்ணாவுடன்

ரெண்டாம் இடம் எனச் சிலர் சொல்லலாம். ஆனால், தி.மு.க-விலிருந்து அவரை வெளியே வரவழைக்க தம் கட்சிக்கு அழைத்தவர்கள் பலர். ஆனாலும் எந்தச் சூழலிலும் அவர் ஏற்றுக்கொண்ட தி.மு.க-விலிருந்து வெளியேற விரும்பவில்லை. அதற்கு ஒரே காரணம், தன்னை முன்னிறுத்திக்கொள்ளாததுதான் நேசிக்கிற, பின்பற்றுகிற திராவிடக் கொள்கைகளை மக்களிடம் கொண்டுசென்றால் போதும் என அர்ப்பணிப்பு மனநிலை எல்லோருக்கும் வாய்த்திடாது. எந்தக் குற்றக்கறையும் தம் மீது விழாதபடி வாழ்ந்த நேர்மையாளர்" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு