Published:Updated:

சட்டமன்றத்தில் கொந்தளித்த எடப்பாடிக்கு வண்ணாரப்பேட்டையில் இருந்து ஒரு சாமானியனின் கடிதம்!

எடப்பாடி பழனிசாமி - வண்ணாரப்பேட்டை போராட்டம்
எடப்பாடி பழனிசாமி - வண்ணாரப்பேட்டை போராட்டம்

போராட்ட சூழலுக்குத் தள்ளப்பட்டிருக்கிறது தமிழகம். தமிழகத்தின் முக்கிய நகரங்களில் வீதிகளை நிரப்பிக் கொண்டிருக்கிறார்கள் முஸ்லிம் மக்கள். சென்னை வண்ணாரப்பேட்டையில், `சென்னை ஷஹீன்பாக்' என்ற பெயரோடு தொடங்கப்பட்ட குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்புப் போராட்டம் இதன் தொடக்கம்.

மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு,

மூன்றாண்டுகளை முற்றுமாக நிறைவு செய்திருக்கிறது தங்களின் ஆட்சி. மகிழ்ச்சி... கடந்த 3 ஆண்டுகளில் எத்தனையோ சவால்களைத் தாண்டி, இன்னும் அரியணையில் கம்பீரமாக அமர்ந்திருக்கிறீர்கள். பாராட்டுகள். இன்னும் ஓராண்டையும் நீங்கள் முழுதாக நிறைவு செய்ய வாழ்த்துகள்...

உங்கள் ஆட்சியின் மீது எங்களுக்கு எத்தனையோ விமர்சனங்கள் இருந்தாலும், இதுவரை கொஞ்சம் நம்பிக்கையும் இருந்தது. அந்த நம்பிக்கை தளர்ந்து, கரைந்து, மறைந்து போகும் தறுவாயில்தான் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன்.

கடந்த 3 ஆண்டுகளில், தமிழக மக்கள் எத்தனையோ பிரச்னைகளைச் சந்தித்திருக்கிறோம். ஆனால், கடந்த சில மாதங்களில் நாடாளுமன்றத்தின் நகர்வுகள், எங்களுக்குள் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. மக்களின் இந்த எண்ண ஓட்டங்களைப் புரிந்து, தமிழகத்தின் திட்டங்கள் வகுக்கப்படுகின்றனவா அல்லது மத்திய அரசுகளின் நிர்பந்தத்தினால், உங்கள் முடிவுகள் எடுக்கப்படுகின்றனவா என்று எங்களுக்குள் குழப்பம் எழுந்திருக்கிறது.

போராட்டச் சூழலுக்குத் தள்ளப்பட்டிருக்கிறது தமிழகம். தமிழகத்தின் முக்கிய நகரங்களில் வீதிகளை நிரப்பிக் கொண்டிருக்கிறார்கள் சிறுபான்மையினரான முஸ்லிம் மக்கள். சென்னை வண்ணாரப்பேட்டையில், `சென்னை ஷஹீன்பாக்' என்ற பெயரோடு தொடங்கப்பட்ட போராட்டத்தின் மீதான காவல்துறையின் அணுகுமுறை தமிழகம் முழுவதும் முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் அதிர்வை ஏற்படுத்தியதன் விளைவு இது. குடியுரிமை திருத்தச் சட்டத்தால் தங்களுக்குப் பாதிப்பு நேர்ந்துவிடும் என்ற அச்சத்தில், வீதிகளில் இறங்கிப் போராடிக் கொண்டிருக்கிறார்கள் தமிழக முஸ்லிம் மக்கள். அச்சம் கொண்ட சமூகத்திடம் நம்பிக்கையைத் தருவதற்குப் பதிலாக, லத்திகளைப் பாய்ச்சுகிறது உங்களின் அரசு.

சமீபத்தில் தமிழக சட்டமன்றத்தில், குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றுவதைப் பற்றி தி.மு.க உறுப்பினர் கேட்ட கேள்விக்கு, மிகுந்த கோபத்துடன், ``இதையே சொல்லிச்சொல்லி, நாட்டு மக்களை ஏமாத்திட்டே இருக்கீங்க.. இதனால் யார் பாதிக்கப்பட்டிருக்காங்க... சொல்லுங்க.. நாங்கள் தீர்வு வழங்குகிறோம்" என்று ஆவேசம் காட்டினீர்கள். `குடியுரிமை திருத்தச் சட்டத்தினால் இந்திய முஸ்லிம்களுக்குப் பாதிப்பு இல்லை' என்று உங்களுக்கு முன்பே, உங்கள் கூட்டணிக் கட்சியின் மூத்த தலைவர்களான அமித் ஷா, ராஜ்நாத்சிங் முதலானோரும், உங்கள் கூட்டணிக்கட்சிக்கு மிகவும் நெருங்கிய நண்பரான நடிகர் ரஜினிகாந்தும் இதே கருத்தைத் தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், இந்தப் பிரச்னை எதைப் பற்றியது, மக்கள் எதற்காகப் போராடுகிறார்கள் என்பதைப் போராடுபவர்களிடம் காதுகொடுத்துக் கேட்டிருந்தால், தங்களுக்குப் புரிந்திருக்கும்.

வண்ணாரப்பேட்டை போராட்டம்
வண்ணாரப்பேட்டை போராட்டம்
`இந்தியாவின் தலைசிறந்த குழந்தை மருத்துவர் கஃபில், அவருக்கே இந்த நிலையா?'- கொதிக்கும் சகோதரர் சமர் கான்

வண்ணாரப்பேட்டையிலும், தமிழகத்தின் மற்ற பகுதிகளிலும் நடைபெறும் போராட்டங்களில் தேசியக்கொடிகள் பறக்கின்றன. தமிழக சட்டமன்ற முற்றுகைப் போராட்டத்தின்போது, முஸ்லிம் பெண்கள் தேசியகீதம் பாடுகின்றனர். தங்களுக்கு ஆபத்து என்று இந்தப் போராட்டத்தில் முஸ்லிம்கள் ஈடுபடவில்லை. அதேபோல, பி.ஜே.பி தலைமையிலான மத்திய அரசு அமல்படுத்திய அனைத்துச்சட்டங்களுக்கும் எதிராக முஸ்லிம்கள் வீதியில் திரளவில்லை. அயோத்தி தீர்ப்பு தங்களுக்கு எதிராக வந்த போதும், அதை ஏற்றுக்கொள்ளாதபோதும், முஸ்லிம்கள் போராட்டத்தில் இறங்கவில்லை. தற்போது முஸ்லிம்கள் போராடுவதன் காரணம், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தைப் பாதுகாப்பதற்காக. இந்திய அரசியலமைப்பின் மீது நம்பிக்கை கொண்ட, இந்தியாவின் மதச்சார்பற்ற கொள்கையில் மீது நம்பிக்கை கொண்ட இந்துக்களும், முற்போக்காளர்களும், அரசியல் இயக்கங்களும் முஸ்லிம்களோடு போராட்டக் களத்தில் இணைந்து நிற்பதும் இதனால்தான்.

குடியுரிமை திருத்தச் சட்டம் என்பது, இந்தியாவின் அண்டை நாடுகளான பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய இஸ்லாமிய நாடுகளிலிருந்து அகதிகளாக இந்தியாவுக்குள் நுழைந்த இந்து, சீக்கிய, பௌத்த, சமண, பார்சி அல்லது கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்குகிறது. இதற்கும் தமிழகத்தில் போராட்டம் நடத்துவதற்கும் என்ன தொடர்பு என்ற கேள்வி, சாமான்யர்களிடம் எழுவது இயல்பு. ஆனால், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பெயரில் உறுதிமொழி எடுத்து, ஆட்சியில் அமர்ந்தவர்கள் அதைப் பொருட்படுத்தாமல் இருப்பது வியப்பு தருகிறது. மூச்சுக்கு முன்னூறு முறை `சட்ட ஒழுங்கு! சட்ட ஒழுங்கு!' என்று கூறும் தமிழக அரசு, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் ஒழுங்கு பாதிக்கப்பட்டதைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றத் தவறுகிறது.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

குடியுரிமை திருத்தச் சட்டம் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படைகளை மீறுகிறது. இந்திய அரசியலமைப்பின் முகவுரை, இந்தியக் குடியரசின் தன்மைகளை இந்திய மக்கள் தங்களுக்குத் தாங்களே அளித்துக்கொள்வதாக அமைந்திருக்கிறது. இந்தியக் குடியரசு நாட்டின் இறையாண்மையைப் பிரதானமாக முன்வைப்பதோடு, மதச்சார்பற்ற ஒன்றாகத் தன்னை முன்னிறுத்துகிறது. இந்திய அரசியலமைப்புச் சட்டம் உறுப்பு 15, ஓர் அரசு தமது குடிமக்களிடம் சாதி, மதம், பால், பிறப்பிடம் இவற்றின் அடிப்படையில் எந்தப் பாகுபாட்டையும் காட்டாது என்றும், உறுப்பு 14, அரசியலமைப்பின் முன் அனைவரும் சமம் என்றும் கூறுகிறது. இத்தனை ஆண்டுக்கால அரசியல் வாழ்வில், இதை நிச்சயம் நீங்கள் அறிந்திருப்பீர்கள் என்று நம்புகிறோம்.

கடந்த காலங்களில், சட்ட அளவில் மட்டுமாவது மதச்சார்பின்மையைக் கடைப்பிடித்து வந்த இந்திய அரசு, தற்போது அமல்படுத்தியுள்ள குடியுரிமை திருத்தச் சட்டம், ஒரு மனிதனை அவன் வணங்கும் கடவுளின் அடிப்படையில் பிரிக்கிறது. அந்த மனிதன் அண்டைநாட்டிலிருந்து குடிபெயர்ந்த போதும், அவனது மதநம்பிக்கையை சோதனை செய்கிறது. ஒரு மனிதனின் மதிப்பு, அவன் பின்பற்றும் மதத்தின் பெயராகவும், அந்த மதத்தின் மீதான அரசின் கண்ணோட்டமாகவும் சுருங்கிப்போகிறது. குடியுரிமை திருத்தச் சட்டத்தின் இந்தப் பாகுபாட்டோடு, என்.பி.ஆர் என்றழைக்கப்படும் தேசிய மக்கள்தொகைப் பதிவேட்டை அணுக வேண்டும்.

மண்ணடியில் போராட்டம்
மண்ணடியில் போராட்டம்
எஸ்.ஏ.எம். பரக்கத் அலி

தமிழகத்தில் நடக்கும் போராட்டங்களிலும், தங்களிடம் முஸ்லிம் அமைப்புகள் நடத்திய பேச்சுவார்த்தையிலும், `என்.பி.ஆர்' என்ற சொல் உச்சரிக்கப்படுகிறது. குடியுரிமை திருத்தச் சட்டம் தமிழக அரசின் எல்லைகளுக்கு உட்பட்டு இல்லை என்று நீங்கள் வாதிட்டாலும், அதை எதிர்த்துப் பல மாநிலங்கள் தீர்மானங்கள் நிறைவேற்றியிருக்கின்றன என்பதை நினைவூட்ட வேண்டியதாக இருக்கிறது. என்.பி.ஆர் தமிழக அரசின் எல்லைகளுக்கு உட்பட்ட கணக்கெடுப்பு. சென்சஸ் கணக்கெடுப்பு போல இல்லாமல், ஒருவரின் பிறந்த தேதி, அவரின் பெற்றோரின் பிறப்பிடம் முதலானவற்றைக் கேட்கிறது என்.பி.ஆர். இதைத் தெரிந்துதான், என்.பி.ஆர் கணக்கெடுப்புக்கான முன்னோட்டத்தை நீலகிரி, காஞ்சிபுரம், சிவகங்கை முதலான தமிழக மாவட்டங்களில் அனுமதியளித்ததா உங்கள் அரசு?

மேலும், என்.பி.ஆர் தேசிய அளவில் பதிவிடப்படுவதோடு, மாநிலம், மாவட்டம், துணை மாவட்டம், ஊரகம் எனப் பிரிக்கப்பட்டு, வெவ்வேறு நிலைகளில் இந்த நாட்டின் குடிமக்கள் தங்கள் குடியுரிமையைத் தாங்களே நிறைவேற்றுவதற்கான நிலைக்குத் தள்ளப்படவுள்ளனர். தாசில்தார்கள் சாதிச் சான்றிதழ் தர மறுக்கிறார்கள் என்று புகாரளித்து, கண்ணில் தெரியும் பழங்குடி மக்களை அழைத்து, காலணியைக் கழற்றச் சொல்பவர்களை அமைச்சர்களாக நியமித்திருக்கும் இந்த அரசுக்கு, ஒவ்வொரு மாதமும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களின் குறை தீர்க்கும் கூட்டத்தில் கூடும் பழங்குடி மக்களையும் தாழ்த்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த மக்களையும் ஏன் தெரியவில்லை? இந்த நிலத்தைச் சேர்ந்த மக்களின் குடியுரிமையை அரசு அலுவலர்களிடம் பெற்றுக்கொள்வது என்று உத்தரவிட்டால், நடைமுறையில் கடும் சிக்கல்களுக்குத் தள்ளப்படுவர்.

ஆவணங்கள் இல்லாத பிற சமயங்களைச் சேர்ந்த மக்களுக்கு மத்திய அரசு குடியுரிமை அளித்துவிடும்; ஆவணங்கள் இருந்தாலும், அரசு நிர்வாகத்தில் பெரிதும் பிரதிநிதித்துவம் இல்லாத முஸ்லிம் சமூகம் வதை முகாம்களுக்கு அனுப்பப்படுவோம் என்று அச்சப்படுவது இயல்பானது. அச்சம் கொண்ட சமூகத்திடம் நம்பிக்கையைத் தருவதற்குப் பதிலாக, லத்திகளைப் பாய்ச்சுகிறது உங்களின் அரசு.

`யாருக்கும் பாதிப்பு இல்லை' என்ற வாதம் முன் வைக்கப்பட்டாலும், அஸ்ஸாமில் 19 லட்சம் மக்கள் குடியுரிமை இழந்துள்ளனர். அவர்களுக்காக தடுப்புக் காவல் முகாம்கள் அமைக்கப்படுகின்றன. என்.பி.ஆர் என்றழைக்கப்படும் கணக்கெடுப்பு, குடியுரிமைச் சட்டத்தின் கீழ்வருகிறது. இதுவே தேசிய அளவிலான என்.ஆர்.சி என்றும் அழைக்கப்படுகிறது. தங்கள் இருப்பையே கேள்விக்குள்ளாக்கும் இந்தச் சட்டத்தை எதிர்த்து திரண்டிருக்கின்றனர் மக்கள்.
மோடி - எடப்பாடி
மோடி - எடப்பாடி

இந்தியா பாகிஸ்தான் பிரிவினையின்போது, பாகிஸ்தான் இஸ்லாமிய நாடாகத் தன்னை அறிவித்தது; இந்தியா மதச்சார்பற்ற நாடாக அறிவித்துக்கொண்டது. இந்தியாவின் முஸ்லிம்கள் தங்கள் மதத்துக்கு முன், மதச்சார்பற்ற நாட்டையே தேர்ந்தெடுத்தனர். இந்த மதச்சார்பற்ற கொள்கையே தாங்கள் இந்த நாட்டில் சமமாக மதிக்கப்படுவதற்கான நம்பிக்கையை இந்திய முஸ்லிம்களிடம் ஏற்படுத்துகிறது. இதை விட்டுக் கொடுக்கத் தயாராக இல்லாத மக்களே போராட்டக் களத்தில் குடும்பங்களாக கலந்துகொள்கிறார்கள். இவர்களின் பின்னணியில், தி.மு.க இருக்கிறது, காங்கிரஸ் இருக்கிறது என்று நீங்கள் குற்றம் சாட்டுவது, போராடும் மக்களின் போராட்ட உணர்வுகளை இழிவுபடுத்தும் செயலாகும்.

நீங்கள் வார்த்தைக்கு வார்த்தை புகழும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தமிழ்நாட்டில் மதமாற்றத் தடைச் சட்டம், சிறுதெய்வக் கோயில்களில் கிடா வெட்டும் தடைச் சட்டம் முதலான சட்டங்களைக் கொண்டுவந்தபோது தமிழக மக்களின் எதிர்ப்பைச் சம்பாதித்தார். காலப்போக்கில், அதை உணர்ந்து, அந்தச் சட்டங்களைப் பின்வாங்கிக்கொண்டார். ஆதிக்க சமூகத்தைச் சேர்ந்த ஜெயலலிதாவை, தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அவரது சாதியைக் குறிப்பிட்டு நிராகரித்த போதும், மக்களின் பக்கம் நின்று, 69 சதவிகித இட ஒதுக்கீட்டு முறையைப் பெற்றுத்தந்ததால் அவரை `சமூகநீதி காத்த வீராங்கனை’ என்றும் கொண்டாடியிருக்கிறது திராவிட இயக்கம்.

``ஜெயலலிதாவையே உள்ளே வச்சவன் நான்... எதுக்கும் பயப்பட மாட்டேன்!'' - ஆர்.எஸ்.பாரதி

1999-ம் ஆண்டு, முஸ்லிம் இயக்கங்களின் கூட்டம் ஒன்றில் பேசிய அவர், பி.ஜே.பி-யுடன் கூட்டணி வைத்திருந்ததைச் சுட்டிக்காட்டி, ``முஸ்லிம் சகோதரர்களுக்கு நான் ஓர் உத்தரவாதம் தருகிறேன். செய்த தவற்றை ஒப்புக்கொள்ளும் துணிச்சல், தைரியம் எனக்கு உண்டு. அந்தத் தவற்றுக்குப் பரிகாரமாக, பா.ஜ.க ஆட்சியை கவிழ்த்தேன். இனி ஒருபோதும் பா.ஜ.க-வுடன் அ.தி.மு.க கூட்டணி வைத்துக்கொள்ளாது. கடைசிவரை முஸ்லிம் மக்களுக்குப் பாதுகாப்பு அரணாக இருப்பேன். உங்கள் கஷ்ட நஷ்டங்களில் பங்குகொள்வேன்’’ என்றார். ஜெயலலிதாவின் வாக்கைத் தங்களது தலைமையிலான அ.தி.மு.க பின்பற்றாமல் இருப்பதன் பின்னணியில் இருக்கும் அரசியல் நிர்பந்தங்கள் தமிழக மக்களின் எதிர்காலத்தைப் பதம்பார்த்து வருகின்றன.

70 ஆண்டுக்கால இந்திய வரலாற்றில், அரசு இந்தச் சமூகத்தை உயர்த்தாதபோதும், கட்சிகள் இந்தச் சமூகத்தை வாக்கு வங்கிகளாக மட்டும் கருதியபோதும் அமைதி காத்த மக்கள், தற்போது இந்த நாட்டின் அடிப்படைக் கொள்கையான மதச்சார்பின்மைக்கு ஆபத்து வரும்போது போராடத் திரண்டுள்ளனர். தேசியக்கொடிகளுடன், அரசியல் சாசனத்தைக் காப்பாற்றும் நோக்கில் திரண்ட மக்களின் குரலைக் கேட்டு செயல்படுவதே நியாயமாக இருக்க முடியும். போராடும் மக்களுக்கு 15 கோடி செலவில் ஹஜ் இல்லம், உலமா என்றழைக்கப்படும் மார்க்கப் பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு என்ற அறிவிப்புகளால் முஸ்லிம் சமூகத்தின் ஆதரவைப் பெற விரும்பும் நீங்கள், அந்தச் சமூகம் விடுக்கும் கோரிக்கையை ஏற்றுக்கொண்டால் மட்டுமே, அந்த மக்களின் இதயங்களில் இடம் பிடிக்க முடியும் என்பதை நினைவூட்டுகிறேன்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

நீட், ஸ்டெர்லைட், ஜல்லிக்கட்டு, நெடுவாசல் முதலான அனைத்துப் பிரச்னைகளிலும், உங்கள் கட்சியின் நிலைப்பாடுகளை மக்கள் கவனித்து வருகின்றனர். மத்திய அரசின் `அழுத்தம்' உங்கள் மீது இருக்கலாம். ஆனால் பாதிக்கப்படுவது தமிழக மக்களும், நீங்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்ட அரசியலமைப்புமே. சட்டசபைக் கூட்டத்தொடர் முடியும் முன் ஒரு நல்ல முடிவை எடுப்பீர்கள் என்று இன்னும் நம்புகிறோம்.

இப்படிக்கு,

வண்ணாரப்பேட்டையில் இருந்து ஒரு சாமானியன்.

அடுத்த கட்டுரைக்கு