Published:Updated:

`அமைச்சர் மனோ தங்கராஜ்' - 5 ஆண்டுகளுக்குப் பிறகு அமைச்சரவையில் குமரி மாவட்டம்

தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ்
தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ்

'இங்கு நம் கூட்டணிப் பிரதிநிதி இல்லாததால், இந்தப் பகுதி மக்கள் பிரச்னைகள் எங்களிடம் கொண்டுவரப்படவில்லை' என நாகர்கோவிலில் தேர்தல் பிரசாரத்தின்போது பேசினார் எடப்பாடி பழனிசாமி.

கன்னியாகுமரி மாவட்டத்துக்கு கடந்த ஐந்து ஆண்டுகளாக தமிழக ஆளும் கட்சிக்கு மக்கள் பிரதிநிதிகளே இல்லாத நிலை ஏற்பட்டது. அதனால்தான் நாகர்கோவிலுக்கு தேர்தல் பிரசாரத்துக்கு வந்த முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, "கடந்த தேர்தல்களில் சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றத்தில் பிரதிநிதிகள் இல்லாததால் பல திட்டங்கள் வராமல் போயின. இங்கு நம் கூட்டணி பிரதிநிதி இல்லாததால், இந்தப் பகுதி மக்கள் பிரச்னைகள் எங்களிடம் கொண்டுவரப்படவில்லை. இங்குள்ள திட்டம் நிறைவேற மத்தியில் ஆட்சியிலிருக்கும் கட்சியின் பிரதிநிதியை வெற்றிபெறச் செய்யுங்கள். மத்தியிலும் மாநிலத்திலும் பிரதிநிதிகள் இல்லாமல் இருந்தால் எப்படி வளர்ச்சி நடக்கும்? எப்படி நீங்கள் வைக்கும் கோரிக்கைகள் நிறைவேறும்? முழுமையான திட்டங்கள் இங்கு வந்து சேரவில்லை. சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றத்திலும் கோரிக்கை வருவதில்லை. அப்படி வந்தாலும் தொகுதியைத்தான் அவர்கள் பார்ப்பார்கள், மாவட்டத்தை கவனிக்க மாட்டார்கள்" எனப் பேசினார்.

அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்ட மனோதங்கராஜ்
அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்ட மனோதங்கராஜ்

கடந்த 2016 சட்டசபை தேர்தலில் கன்னியாகுமரி மாவட்டத்தின் ஆறு தொகுதியையும் தி.மு.க, காங்கிரஸ் கூட்டணி கைப்பற்றியது. 2019 நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கன்னியாகுமரி தொகுதியை தன்வசமாக்கியது. கன்னியாகுமரி மாவட்டத்தில் திட்டங்கள் எதுவும் கொடுக்காததற்கு இதுதான் காரணம் என நியாயப்படுத்தும் விதமாக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதை குமரி மக்கள் ரசிக்கவில்லை. தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் உடனே அந்த பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

2011 ஜெயலலிதா ஆட்சியில் அ.தி.மு.க-வின் கே.டி.பச்சைமால் அமைச்சராக இருந்தார். அதற்கு முந்தைய தி.மு.க ஆட்சியில் சுரேஷ்ராஜன் அமைச்சராக இருந்தார். ஆனால், கடந்த ஐந்து ஆண்டு ஆட்சியில்தான் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆளும் கட்சி எம்.எல்.ஏ-க்கள்கூட இல்லாமல் போனது.

மனோதங்கராஜ்
மனோதங்கராஜ்

2021 தேர்தலில் தி.மு.க வென்று ஆட்சி அமைத்ததும் பத்மநாபபுரம் எம்.எல்.ஏ மனோதங்கராஜ் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். ஆளும் கட்சி எம்.எல்.ஏ-க்களே இல்லை என்ற நிலைமை மாறி அமைச்சரே கிடைத்துவிட்டார் என நெகிழ்ந்துபோயுள்ளனர் குமரி மாவட்ட மக்கள்.

அமைச்சராக பொறுப்பேற்றிருக்கும் மனோதங்கராஜ் எம்.எல்.ஏ-வாக இருந்த சமயத்தில் நீர்நிலைகளை பாதுகாப்பதற்காக கன்னியாகுமரி மாவட்ட இளைஞர்களை ஒருங்கிணைத்து மராத்தான் ஓட்டம் போன்ற விழிப்பு உணர்வு நிகழ்ச்சிகளை நடத்தினார். மலைகளை உடைத்து கேரளாவுக்கு கருங்கல், ஜல்லி, எம் சாண்ட் கடத்துவதை தடுக்க போராட்டம் நடத்தினார். கன்னியாகுமரி மாவட்டத்தில் இயற்கையை அழிக்காமல் ஐ.டி.பார்க் போன்ற திட்டங்கள் கொண்டு வரவேண்டும் என்பது இம்மாவட்ட மக்கலின் கோரிக்கையாக இருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு