Published:Updated:

`மோடியுடனான அந்த 40 நொடிகள்!’ - வைரல் புகைப்படம் குறித்து சுவாரஸ்யம் பகிர்ந்த இஸ்லாமிய இளைஞர்

இஸ்லாமிய இளைஞர் மோடியுடன் பேசியபோது களத்தில் க்ளிக் செய்யப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி, பல்வேறு விவாதங்களுக்கு விதைபோட்டிருக்கின்றன. பிரதமர் மோடி இஸ்லாமிய இளைஞர் காதில் என்ன பேசினார் என்பது சமீபத்திய பேசுபொருளாக மாறியிருக்கிறது.

மேற்குவங்கத்தில் தேர்தல் ஆணையம் எட்டு கட்டங்களாகச் சட்டப்பேரவைத் தேர்தலை நடத்திவருகிறது. அந்த மாநிலத்தில் கடந்த மாதம் 27-ம் தேதி தொடங்கிய வாக்குப்பதிவு இந்த மாதம் 29-ம் தேதி அன்று நிறைவடைகிறது. அதைத் தொடர்ந்து மே 2-ல் வாக்கு எண்ணிக்கை நடைபெறவிருக்கிறது.

சட்டமன்றத் தேர்தலையொட்டி மேற்கு வங்கத்தில் அரசியல் தலைவர்கள் தீவிர பிரசாரம் மேற்கொண்டுவருகின்றனர். அந்த வகையில், கடந்த 2-ம் தேதி மேற்குவங்க மாநிலம் சோனாப்பூர் பகுதியில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.

பிரதமர் மோடி தனது பிரசார உரையை முடித்துக்கொண்டு அங்கிருந்து ஹெலிகாப்டரில் புறப்பட்டபோது கூட்டத்திலிருந்து மோடியை நோக்கி வந்த இஸ்லாமிய இளைஞர் ஒருவர் அவரை மிகுந்த ஆவலுடன் சந்தித்தார். இளைஞர் பிரதமர் காதில் எதையோ கூற முற்பட்டார். அப்போது மோடி அந்த இளைஞரை அரவணைத்து அவர் தோளில் கைபோட்டு அவர் கூறியவற்றை மிக உன்னிப்பாக கவனித்தார்.

மோடி
மோடி

இஸ்லாமிய இளைஞர் மோடியுடன் பேசியபோது களத்தில் க்ளிக் செய்யப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி பல்வேறு விவாதங்களுக்கு விதை போட்டிருக்கின்றன. பிரதமர் மோடி இஸ்லாமிய இளைஞர் காதில் என்ன பேசினார் என்பது சமீபத்திய பேசுபொருளாக மாறியிருக்கிறது.

இந்தக் கேள்விக்கு அரசியல்வாதிகள், அரசியல் விமர்சகர்கள் எனப் பலரும் பலதரப்பட்ட விளக்கங்களை அளித்த நிலையில், மேற்குவங்க அரசியலில் சமீபத்திய கவன ஈர்ப்பாளராகத் திகழும் ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சித் தலைவர், அசாதுதீன் ஒவைசி அந்தப் புகைப்படம் தொடர்பாக சமூக ஊடகத்தில் தனது கருத்தை வெளியிட்டிருந்தார். அதில் ஒவைசி, ``மேற்கு வங்க பிரசாரத்தில் மோடியுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட நபர் ஓர் இஸ்லாமியரே கிடையாது. சட்டமன்றத் தேர்தலுக்காக பாரதிய ஜனதா அரங்கேற்றிய நாடகம் அது" என்று காட்டமான விமர்சனத்தை முன்வைத்தார்.

ஒவைசி
ஒவைசி

ஒவைசியின் இந்தக் கருத்துக்குப் பலர் இணையத்தில் ஆதரவாகவும் எதிராகவும் பதில் கருத்துகளைப் பதிவிட்டுவருகின்றனர். இந்தநிலையில், பிரபல செய்தி நிறுவனம் ஒன்று மோடியுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட நபரைத் தேடிக் கண்டுபிடித்து விசாரித்திருக்கிறது. அதில் மோடியுடன் பேசிய நபர் இஸ்லாமியர்தான் என்பது உறுதியாகியுள்ளது.

செய்தி நிறுவனத்துக்குப் பேட்டி அளித்த அந்த இஸ்லாமிய இளைஞர், ``என் பெயர் ஜுல்பிகர் அலி. நான் கொல்கத்தாவைச் சேர்ந்தவன். நான் ஓர் இஸ்லாமியன். கடந்த 2014-ம் ஆண்டு முதல் பாஜக-வில் இருக்கிறேன். தற்போது தெற்கு கொல்கத்தா மாவட்ட சிறுபான்மையினர் பிரிவு தலைவராகப் பதவி வகித்துவருகிறேன். பிரதமர் மோடியை வாழ்நாளில் ஒரு முறையாவது சந்தித்துவிட வேண்டும் என்பது என்னுடைய நீண்ட கனவு. அந்தக் கனவு கடந்த 2-ம் தேதி சோலாப்பூரில் நிறைவேறியது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பிரதமர் நரேந்திர மோடியுடன் 40 நொடிகள் மட்டுமே பேசினேன். ஆனால், அந்த 40 நொடிகள் என்னுடைய வாழ்வில் 40 ஆண்டுகள் நீக்கமற நிறைந்திருக்கும். அந்தச் சந்திப்பின்போது பிரதமர் என்னை அரவணைத்து என்னுடைய பெயரைக் கேட்டார். நான் ஜுல்பிகர் அலி என்றேன். உங்களுக்கு என்ன வேண்டும் என்று என்னிடம் அன்பாகக் கேட்டார். நான் `எனக்கு எம்.எல்.ஏ சீட், எம்.பி சீட் என எதுவும் வேண்டாம். உங்களைச் சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டும். அதுதான் என்னுடைய நீண்ட நாள் ஆசை’ என்றேன். உடனே பிரதமர் புகைப்பட நிருபரை அழைத்து என்னுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். எனக்கு ராணுவத்தில் இணைந்து இந்தியாவுக்காகப் பணிபுரிய வேண்டும் என்று ஆசை, ஆனால் எனக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. அதனால்தான் அரசியலில் இணைந்து நாட்டுக்குச் சேவை செய்துவருகிறேன்" என்றார்.

வைரல் புகைப்படம்
வைரல் புகைப்படம்

தேர்தல் நேரத்தில் நரேந்திர மோடி இஸ்லாமிய இளைஞருடன் எடுத்துக்கொண்ட புகைப்படமும், அதற்கு அந்த இளைஞர் அளித்த விளக்கமும் மேற்கு வங்க தேர்தலில் பாரதிய ஜனதா கட்சிக்குச் சிறுபான்மையினர் ஓட்டுகளை அதிக அளவில் பெற்றுத்தரும்' என்று அரசியல் பார்வையாளர்கள் பலரும் கருத்து தெரிவித்துவருகின்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு