Published:Updated:

மாவட்டச் செயலாளர் முதல் ஆர்.எஸ்.பாரதி வரை... தி.மு.க-வை பதறவைத்த கொங்கு மண்டல ஆடியோ!

அறிவாலயம்
அறிவாலயம்

சொந்தக் கட்சியிலேயே லாபி செய்வதுபோன்ற பல்வேறு காரணங்களால் எளிதில் வெற்றி வாய்ப்பு பெறக்கூடிய இடங்களிலும் தி.மு.க தோல்வியைத் தழுவியுள்ளது.

நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில், கொங்கு மண்டலத்தின் முடிவுகள், தி.மு.க-வுக்கு திருப்திகரமாக இல்லை. அ.தி.மு.க பிரமுகர்களுக்கு ஸ்லீப்பர் செல்லாக இருப்பது, காசு வாங்கிக் கொண்டு சொந்தக் கட்சியிலேயே லாபி செய்வதுபோன்ற பல்வேறு காரணங்களால், எளிதில் வெற்றி வாய்ப்பு பெறக்கூடிய இடங்களிலும் தி.மு.க தோல்வியைத் தழுவியுள்ளது.

தி.மு.க செயற்குழு
தி.மு.க செயற்குழு

இதனால், சமீபத்தில் நடைபெற்ற தி.மு.க செயற்குழுக் கூட்டத்தில் பேசிய மு.க. ஸ்டாலின், ``துரோகிகளுக்கு இனியும் இடம் இல்லை. கொங்கு மண்டலத்தின்மீது கடுமையான நடவடிக்கை எடுப்பேன்” என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், தி.மு.க-வின் தோல்விக்கு, தி.மு.க-வேதான் காரணம் என்பதை உறுதிப்படுத்தும் விதமாக, சமூக வலைதளங்களில் ஓர் ஆடியோ வைரலாகப் பரவிவருகிறது. கோவை தெற்கு மாவட்டம், பொள்ளாச்சி வடக்கு ஒன்றியச் செயலாளராக இருப்பவர், மருதவேல். இவர், ஆச்சிப்பட்டி ஊராட்சித் தலைவர் பதவிக்கு சீட் கொடுப்பதற்காக, முன்னாள் ஊராட்சி மன்றத்தலைவர் ஈஸ்வரனிடம் ரூ.30 லட்சம் கேட்டுள்ளார்.

மாவட்டச் செயலாளர் முதல் ஆர்.எஸ்.பாரதி வரை... தி.மு.க-வை பதறவைத்த கொங்கு மண்டல ஆடியோ! #DMK #politics #Audio #kongubelt மேலும் விவரங்களுக்கு : http://bit.ly/2RE49M8

Posted by Junior Vikatan on Wednesday, January 29, 2020

இதுதொடர்பான போன் காலில், தனக்காகவும் (மருதவேல்), மாவட்டப் பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ் மற்றும் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோருக்காக, பணம் கேட்கப்பட்டது என்பதையும் மருதவேல் குறிப்பிடுகிறார்.

``ஈஸ்வரன் பணம் கொடுக்கவில்லை. இதனால், வேறு ஒருவரிடம் பணம் பெற்றுக்கொண்டு சீட் ஒதுக்கிவிட்டனர். அங்கு, தி.மு.க தோல்வியடைந்தது. இதேபோல மாவட்டம் முழுவதும் பல வெற்றி வாய்ப்புள்ள நபர்களுக்கு சீட் கொடுக்காமல், பணம் கொடுத்தவர்களுக்கு மட்டுமே சீட் கொடுத்து, கோவை தெற்கு மாவட்டத்தில் மிகப்பெரிய தோல்வியைச் சந்திக்க வைத்துவிட்டனர்.

மருதவேல்
மருதவேல்

கொங்கு மண்டலத்தில் தி.மு.க காயமடைந்து சீழ்பட்டு இருப்பதால், அதை எப்படியாவது மருந்து போட்டு சரிப்படுத்தி விட வேண்டும் என்று தலைவர் நினைக்கிறார். ஆனால், இரண்டாம் கட்டத் தலைவர்கள் அதற்கு விடுவதில்லை. இந்தப் பிரச்னையை எல்லாம் சரிசெய்தால்தான், 2021 சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற முடியும்” என்கின்றனர், கோவை உடன் பிறப்புகள்.

இதுகுறித்து தி.மு.க ஆதி திராவிடர் நலக்குழு மாநில துணைச் செயலாளர் திப்பம்பட்டி ஆறுச்சாமி, ``நான் 70-களில் இருந்தே கழக உறுப்பினராக இருக்கிறேன். எந்தப் பிரதிபலனும் எதிர்பாராமல் கட்சிக்காக உழைத்துக்கொண்டிருக்கிறேன். நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில், திப்பம்பட்டி ஊராட்சித்தலைவர் பதவிக்கு என் மனைவி வேலுமணி போட்டியிட்டார். அதேபோல, அ.தி.மு.க-வில் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனின் ஆதரவாளர் போட்டியிட்டார்.

திப்பம்பட்டி ஆறுச்சாமி
திப்பம்பட்டி ஆறுச்சாமி

இதனால், பொள்ளாச்சி ஜெயராமனின் உறவினர்கள், `தேர்தலில் போட்டியிடக்கூடாது’ என்று எங்களை நேரடியாக மிரட்டினார்கள். மேலும், `ரூ.5 லட்சம் தருகிறோம்’ என்றும் ஆசைவார்த்தை கூறினார்கள். நாங்கள் அதையெல்லாம் மறுத்துவிட்டு தேர்தலைச் சந்தித்தோம். ஆனால், எங்கள் கட்சியில் இருந்த சிலரே, எங்களுக்காக வேலை செய்யாமல், அ.தி.மு.க உறுப்பினருக்காக வேலை செய்தனர். இதனால், நடந்துமுடிந்த தேர்தலில் நாங்கள் தோற்றுவிட்டோம்.

கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களை நீக்க வேண்டியது, மாவட்டச் செயலாளரின் கடமை. ஆனால், அவரின் செயல்கள் கட்சி விரோத நடவடிக்கைகளை ஆதரிப்பது போலத்தான் இருக்கின்றன. நாடாளுமன்றத் தேர்தலில் பொள்ளாச்சி தொகுதியை 39 ஆண்டுகளுக்குப் பிறகு கைப்பற்றினோம்.

ஸ்டாலின்
ஸ்டாலின்

அந்த வெற்றியின் ஈரம் காய்வதற்குள் இப்படி ஒரு தோல்வியைச் சந்தித்துவிட்டோம். எங்களது ஆசையெல்லாம், 2021-ம் ஆண்டு தலைவர் ஸ்டாலின் முதல்வராக வேண்டும் என்பதுதான். அதற்கு தடையாக இருப்பவர்களை எல்லாம் தூக்கி வீசவேண்டிய நேரமிது” என்று கொந்தளித்தார்.

`அ.தி.மு.கவுக்கு ஓட்டுப்போட்ட அந்த ஒருவர் யார்?' - புதுக்கோட்டை தி.மு.க புகைச்சல்

``பணம் செலவு செய்தால்தான் வெற்றிபெற முடியும் என்ற அடிப்படையில், ஈஸ்வரனிடம் அப்படிப் பேசினேன். அவர் மட்டுமல்ல,

ஈஸ்வரன்
ஈஸ்வரன்

இதேபோல இன்னும் மூன்று பேரிடம் பேசினேன். கட்சி வெற்றி பெறுவதற்காகத்தான் அப்படிச் சொன்னேன். மற்றபடி சீட் கொடுப்பதற்காகவெல்லாம் காசு வாங்கவில்லை” என்று கூறியிருக்கிறார் மருதவேல்.

கோவை தி.மு.க புறநகர் தெற்கு மாவட்டப் பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ், ``எனக்கும் அதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இதுகுறித்து மருதவேலிடம் பேசியிருக்கிறேன். நான் தற்போது வெளியூரில் இருக்கிறேன். ஊருக்கு வந்த பிறகு மருதவேல் மற்றும் அவரிடம் பேசிய நான்கு பேரிடம் விசாரணை நடத்த உள்ளோம். நாடாளுமன்றத் தேர்தல் வேறு, உள்ளாட்சித் தேர்தல் வேறு.

தென்றல் செல்வராஜ்
தென்றல் செல்வராஜ்

உள்ளாட்சித் தேர்தலில் மாமன், மச்சான் சண்டை எல்லாம் சகஜம். அப்படித்தான் இதுவும். மற்றபடி, கடந்த 2011 உள்ளாட்சித் தேர்தலைவிட, இந்தத் தேர்தலில் நல்ல வெற்றியைப் பெற்றுள்ளோம். நான், கட்சி விரோத செயல்களில் எல்லாம் ஈடுபடவில்லை. அப்படிச் செய்திருந்தால், தலைமை இந்த இடத்தில் என்னை வைத்திருக்குமா?” என்றார்.

தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, ``எனக்கு உடல்நிலை சரியில்லை. கோவையில் லோக்கல் பாலிடிக்ஸ் அதிகம். ஒருவர்மீது ஒருவர் மாற்றி மாற்றி குற்றம் சாட்டிக் கொண்டேதான் இருப்பார்கள். உள்ளாட்சித் தேர்தலில் வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பதில் தலைமைக்கழகம் தலையிடவில்லை.

 ஆர்.எஸ்.பாரதி
ஆர்.எஸ்.பாரதி

அந்தப் பொறுப்பை மாவட்டக் கழகங்களிடம் ஒப்படைத்துவிட்டோம். இதுதொடர்பாக விரைவில் அனைவரையும் அழைத்து விசாரிப்போம்” என்றார்.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க ஆட்சிக்கு வராமல் போனதற்கு, கொங்கு மண்டலத்தில் அக்கட்சிக்குக் கிடைத்த பெரும் தோல்வியும் மிகமுக்கியக் காரணமாக அமைந்தது. அதற்குப் பின், கொங்கு மண்டலத்தில் மற்ற பகுதிகளில் சில நல்ல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. ஆனால், கொங்கு மண்டலத்தின் தலைநகரமாகக் கருதப்படும் கோவையில், தி.மு.க -வின் நிலைமை இன்னும் மோசமாகியிருப்பதாக தி.மு.க-வின் உண்மைத் தொண்டர்கள் குமுறுகின்றனர். அவர்களின் உள்ளக் குமுறலை உறுதிப்படுத்தும் வகையில் இந்த ஆடியோ உரையாடல் அமைந்திருக்கிறது. இதற்கு எந்த வகையில் கட்சித் தலைமை தீர்வு காணப்போகிறது என்பதுதான் கோவை உடன் பிறப்புகளின் மாபெரும் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு