Published:Updated:

எடி 4.0... இப்போது என்ன செய்யக் காத்திருக்கிறார் எடியூரப்பா?!

எடியூரப்பா
எடியூரப்பா

`அவர் மாறவே இல்லை. அத்தனையும் நடிப்பு’ என்று கர்நாடக இளைஞர்கள் குமுறிக்கொண்டிருக்கிறார்கள். அதாவது, ஆட்சிக்கு வந்ததுமே `திப்பு ஜயந்தி’ கொண்டாட்டங்களை ரத்து செய்திருக்கிறார், எடி. ஆக, அவர் அறிவித்த ‘நவகர் நாடகம்’ எந்தத் திசையில் செல்லப்போகிறது என்பது, தெளிவாகியிருக்கிறது.

கர்நாடகாவின் முதலமைச்சராக நான்காவது முறையாகப் பதவியேற்றிருக்கிறார், எடியூரப்பா. சூட்டோடு சூடாக, கர்நாடகச் சட்டமன்றத்திலும் பெரும்பான்மையை நிரூபித்துக் காட்டிவிட்டார், எடி. `இம்முறை முழு ஆட்சிக் காலத்தையும் முடிப்பேன்’ என்ற சூளுரையுடன், அவர் முதல்வர் அறைக்குள் அடியெடித்து வைத்தபோது, முரசுகள் முழங்காதது மட்டும்தான் குறை. இனி, எடிக்கு எல்லாம் சரவெடிதான்!

எடியூரப்பா
எடியூரப்பா

2011-ம் ஆண்டு இதே ஆகஸ்ட் முதல்வாரத்தில்தான், எடியூரப்பாவின் அரசியல் வாழ்க்கைக்கு முடிவுரை எழுதப்பட்டது. அன்று காலையில் நல்லமழை. கட்சியின் எழுபது எம்.எல்.ஏ-க்களோடு ஆளுநர் மாளிகையை நோக்கி எடியூரப்பா புறப்பட்டபோது, மாலை நெருங்க ஆரம்பித்திருந்தது. அங்கே, அவருக்காக அருண் ஜெட்லியும் ராஜ்நாத் சிங்கும் காத்திருந்தார்கள். கூடவே, எடியூரப்பாவை ராஜினாமாவுக்குத் தயார் செய்த தர்மேந்திர பிரதானும் நின்றிருந்தார். சரியாக ஆறு மணிக்கு வீட்டைவிட்டு வெளியே வந்தது, எடியூரப்பாவின் கார். தெருவில் அவர் கண்பட்ட இடங்களில் எல்லாம் மக்கள் கூடி நின்று சத்தமாகப் பேசிக் கொண்டிருந்தனர்.

எல்லோர் பேச்சிலும் எடியூரப்பாதான் மையம். `அவரால் நம் மாநிலத்துக்கே கெட்டபெயர். அவருக்கு இது சரியான தண்டனைதான்’ என்ற கோபச்சொல், கார் கண்ணாடியைக் கடந்து எடியூரப்பாவின் காதுகளைத் துளைத்தது. அவர் கண்மூடி மேலே பார்க்க ஆரம்பித்தார். அதேநேரம், காரில் பாடிக்கொண்டிருந்த பண்பலையில் செய்தி நேரம் வந்தது. `ஊழல் குற்றச்சாட்டில் பதவி விலகும் முதல் கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா...’ என்று குதூகலக் குரலில் செய்தி வாசித்தார் தொகுப்பாளினி. கார் ஓட்டுநர் பதறியடித்து வானொலியை அணைக்கப்போக, எடியூரப்பா ‘இருக்கட்டும்...’ எனத் தடுத்தார்.

எடியூரப்பா
எடியூரப்பா

ஆறரை மணிக்கு, எடியூரப்பாவின் கார் ஆளுநர் மாளிகையை அடைந்தது. அவரைக் கண்டதும் அவரின் ஆதரவாளர்கள் தடுப்புகளை உடைத்துப் பாயத் தயாராகினர். அவர்களை அமைதியாக இருக்கும்படி கைகாட்டிவிட்டு, ஆளுநர் பரத்வாஜைப் பார்க்க உள்ளே போனார், எடியூரப்பா. பத்து நிமிடங்கள்கூட அந்தச் சந்திப்பு நீடிக்கவில்லை. ராஜினாமா கடிதத்தை அளித்ததும், விறுவிறுவென வெளியே வந்துவிட்டார், எடி. அருண் ஜெட்லியும் ராஜ்நாத் சிங்கும் அவரை ஆறுதல் பார்வை பார்த்தனர். அவர்களைத் திரும்பிப் பார்க்காமல், ‘நான் கட்டுண்டு கிடக்கிறேன் என்பதை மட்டும் சொல்லிக் கொள்கிறேன்’ என்று பேட்டி கொடுத்துவிட்டு, வீட்டுக்குத் திரும்பினார், எடி. அடுத்த நாள், சதானந்த கவுடாவை அடுத்த முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்க இருக்கும் செய்தியை அவருக்கு அனுப்பியது கட்சித் தலைமை. சதானந்த கவுடா எடியூரப்பாவின் தீவிர ஆதரவாளர். அவரை முதலமைச்சர் பதவிக்குப் பரிந்துரைத்ததும்கூட எடியூரப்பாதான். `அவன் ஆள்வது நானே ஆள்வதுதான்’ என உற்சாகமானார், எடி. ’நாளை முதல் கட்சிப்பணிகளில் தீவிரம் காட்டப்போகிறேன்’ என்றும் அறிவித்தார்.

ஆனால், அடுத்த நாளும் சரி அதற்கடுத்து வந்த நாள்களும் சரி எடியூரப்பாவுக்கு உவப்பானதாக இல்லை. வைரமுத்துவின் ‘ஒரு மாஜி மந்திரியின் பகல்’ படித்ததுண்டா? பணத்தாசையில் பதவியை இழந்த ஒரு முன்னாள் அமைச்சரின் மனச்சாட்சியாகவே மாறி அந்தக் கவிதையை வடித்திருப்பார், வைரமுத்து. அதேபோலவே கழிந்தன, எடியூரப்பாவின் நாள்கள். கட்சி அவரைக் கைவிட்டது. ஆதரவாளர்கள் அவரைவிட்டு விலகினார்கள். வீட்டு வேலைக்காரர்கள்கூட அவரை ஒரு மாதிரியாகவே பார்க்க ஆரம்பித்தார்கள். கட்சி நிகழ்ச்சிகள் அனைத்திலும் அவர் புறக்கணிக்கப்பட்டார். பத்திரிகைகள் எடியூரப்பாவுக்கு என்ன ஸ்பெல்லிங் என்பதையே மறந்துவிட்டிருந்தன. தினம் பத்து சந்திப்புகள், நூறு தொலைபேசி அழைப்புகள் எனப் பரபரப்பாக இருந்தவர், கால் உடைந்த குதிரையென ஒரே இடத்தில் முடங்கினார். வீட்டு மாடியில் அமர்ந்து ’எத்தனை புறாக்கள் தினம் வருகின்றன’ என்று எண்ணிக் கொண்டிருந்தார். அதையும் முழுதாக முடிக்கவிடவில்லை, விதி. மூன்றே மாதங்களில், சிறைக்குப் போய் ’எத்தனை கம்பிகள்’ என எண்ண ஆரம்பித்துவிட்டார்.

எடியூரப்பா
எடியூரப்பா

இதெல்லாம் நடந்து, எட்டாண்டுகள் நிறைவடைந்துவிட்டன. இந்த எட்டாண்டுகளில் எத்தனையோ மாற்றங்கள் எடியின் வாழ்க்கையில் வந்துபோய் விட்டன. ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு, சிறைக்குச் சென்று, ஜாமீனில் வெளியே வந்து, பா.ஜ.க-வில் மீண்டும் வாய்ப்புகேட்டு, அது மறுக்கப்பட்டு, தனிக்கட்சி கண்டு, தேர்தலில் நின்று, அதில் செல்வாக்கை நிரூபித்து, மீண்டும் பா.ஜ.க-வின் தலைமைப்பொறுப்புக்கு வந்து, வழக்கை உடைத்து, பா.ஜ.க-வை மாநிலத்தின் தனிப்பெரும் கட்சியாக்கி எனக் காட்சிகள் சனிஞாயிறென சரட்டெனக் கடந்துவிட்டன. இப்போது, விட்டதைப் பிடித்துவிட்ட மனமகிழ்ச்சியுடன் கர்நாடகத்தின் முதலமைச்சராகக் கம்பீரமாக வீற்றிருக்கிறார், எடி. ஆனால், அவர் அமர்ந்திருக்கும் நாற்காலி ஜனநாயகத்தைக் கொன்றெடுத்த எலும்புகளால் உருவாக்கப்பட்டது என்பதுதான் உறுத்துகிறது.

எடியூரப்பா, மாண்டியாக்காரர். விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். பதிவுசெய்யப்பட்ட தகவல்களின்படி, பதினைந்து வயதில் ஆர்.எஸ்.எஸ்ஸில் இணைகிறார், எடி. சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டுக்கொண்டே, பெங்களூரு கல்லூரியில் பி.ஏ முடிக்கிறார். அதேவருடம், அவருக்கு அரசு வேலையும் கிடைக்கிறது. கர்நாடக மாநிலச் சமூகநலத் துறையில் சாதாரண கிளார்க்காகப் பணியில் சேர்கிறார். ஆரம்பத்தில் அந்த வேலை அவருக்குப் பிடிக்கிறது, அனுபவித்துச்செய்கிறார். ஆனால், போகப்போக அவருக்குப் போரடிக்க ஆரம்பிக்கிறது. தினமும் ஒரே இடத்தில் அமர்ந்து ஒரே வேலையைப் பார்த்து சலிப்படைகிறார். அடிப்படையில், ஊர்சுற்றி அவர். 1987-ம் ஆண்டு சிகாரிபுரா பகுதி முழுவதையும் சைக்கிளாலேயே வட்டமடித்து வறட்சி நிலவரங்களைக் கணக்கெடுத்து வெளியிட்டு, மாநிலத்தையே அலறவிட்ட வரலாறு கொண்டவர், அவர். சந்தேகமே இல்லாமல், எடியூரப்பா உழைப்புக்கு அஞ்சாதவர். கட்சிப் பணிகளில் ‘கடோத்கஜன்’. தேவகவுடா, பங்காரப்பா வரிசையில் வைக்கப்பட வேண்டியவர்.

எடியூரப்பா
எடியூரப்பா

அடுத்து, எடியூரப்பாவின் வாழ்க்கையில் நடந்ததை அதிசயம் என்பதா, அபூர்வம் என்பதா, ஆச்சர்யம் என்பதா... அட, அனைத்தும்தான். 1965-ம் ஆண்டு வாக்கில் மாண்டியாவிலிருந்து சிகாரிபுராவுக்கு இடம் மாறுகிறார் எடி. அங்கே, சங்கர் ரைஸ் மில்லில் பணிக்குச் சேர்கிறார். அதே கிளார்க் வேலைதான். அந்த ரைஸ்மில் வீரபத்ர சாஸ்திரி என்பவருக்குச் சொந்தமானது. அங்கே, அவருக்குச் சொற்ப சம்பளமே தரப்பட்டது. நாளும் கஷ்டஜீவனம்தான். ஆனாலும், எடி அனைத்தையும் சகித்துக்கொள்கிறார். வீரபத்ர சாஸ்திரி பெரும் செல்வந்தர். நிலபுலன்களும் ஏராளம். அவருக்கு ஒரு மகள் மற்றும் இரண்டு மகன்கள். இதில் மகள்தான் மூத்தவர். அவர் பெயர், மைத்ராதேவி.

மைத்ரா மீது ஒரு தலைக்காதல் கொண்டிருந்தார், எடி. அதனால், சம்பளத்தைப் பற்றியெல்லாம் அலுத்துக்கொள்ள அவருக்கு நேரமில்லை. ஒரு நல்ல நாளில், காற்றாடியை எடியின் பக்கம் திருப்பிவைக்கிறார், கடவுள். அதாவது, மைத்ராதேவி எடியின் காதலை ஏற்கிறார். ‘அப்பாவிடம் பேசுங்கள்...’ என்று செய்தி அனுப்புகிறார். ஆனால், வீரபத்ரர்தான் சம்மதிக்கவில்லை. எடியின் வசதிவாய்ப்பு அவருக்கு இடிக்கிறது. எடி அசரக்கூடிய ஆளா என்ன?! ‘வீட்டோடு மாப்பிள்ளை’ எனும் அஸ்திரத்தை எடுத்து வீசுகிறார். வீரபத்ரர் வீழ்கிறார். 1967 மார்ச் 5-ம் தேதி, மைத்ராதேவியைக் கைப்பற்றினார் எடி. அப்படியே அவரின் சொத்துகளையும்!

எடியூரப்பா
எடியூரப்பா

அதுதான் சொத்து வந்துவிட்டதே... அதனால், அடுத்து ஒரு சொந்தத் தொழில் ஆரம்பிப்போமே எனக் களமிறங்குகிறார், எடி. ஆனால், அதுவும் அவருக்குப் போரடிக்கிறது. எனவே, மீண்டும் அரசியல் பக்கம் திரும்புகிறார். ஜனசங்கத்தில் இணைந்து சிகாரிபுராவின் முனிசிபல் சேர்மேன் ஆகிறார். அவசரநிலை காலத்தில் சிறையில் அடைக்கப்பட்டவர்களில் எடியூரப்பாவும் ஒருவர். பெங்களூரு, பெல்லாரி என இரண்டு சிறைச்சாலைகளிலும் மொத்தம் 45 நாள்கள் சிறையில் இருந்தார். எடியூரப்பா பின்னாளில் அடைந்த அத்தனை அரசியல் உச்சங்களுக்கும் அந்த அவசரநிலை அளித்த பிரபல்யம்தான் பிரதானக் காரணம். எவருக்கேனும் கடைசிக்காலத்தில் எடியூரப்பா மனமுருகி நன்றி சொல்ல வேண்டுமென்றால், இந்திராவுக்குச் சொல்லலாம்.

எடியூரப்பா - மைத்ராதேவி தம்பதிக்கு, ராகவேந்திரா, விஜயேந்திரா என இரண்டு மகன்கள். அருணாதேவி, பத்மாதேவி, உமாதேவி என மூன்று மகள்கள். இவர்களின் பெயர்களை இப்படி விரிவாகச் சொல்வதற்கு ஒரு காரணம் இருக்கிறது. அதாவது, இவர்கள்தான் எடியூரப்பா ஊழல் புகாரில் சிறைக்குச் செல்ல முக்கியக் காரணமாக இருந்தவர்கள். இவர்கள் பெயரில்தான் பெங்களூரு முதல் சிமோகா வரை நிலங்களை ஆக்கிரமித்து விளையாடினார், எடி. கூடவே, ரெட்டி சகோதரர்களுக்கு உதவியதும் அவருக்கு வினையானது. அது, எடிக்குக் கடினமான காலம். அவர் வீட்டுக்கு அருகில் நிரந்தரமாகவே ஓபி வேன்களை நிறுத்திவைத்து செய்திவேட்டை நடத்தின, ஊடகங்கள். ‘பதில் சொல்லியே பல் உதிர்ந்து போகும்போல’ என்று எடியூரப்பா துயரப்படாத நாளே இல்லை.

எடியூரப்பா, அமித் ஷா, சதானந்த கவுடா
எடியூரப்பா, அமித் ஷா, சதானந்த கவுடா

`மரியாதையாகப் பதவி விலகிவிடுங்கள்’ எனும் அளவுக்கு மட்டுமே, அப்போது அவருக்குக் கருணை காட்டியது தாமரைக் கட்சியின் தலைமை. இதே மாதிரி ஒரு நிலை, எடியூரப்பாவுக்கு 2004-ம் ஆண்டும் ஏற்பட்டது. அது கொஞ்சம் கொடூரமானது. அந்த ஆண்டுதான், எடியூரப்பாவின் மனைவி மைத்ராதேவி மர்மமான முறையில் தண்ணீர்த் தொட்டியில் பிணமாகக் கிடந்தார். ’அது கொலையா அல்லது தற்கொலையா’ என்பது இன்றுவரை விலகாத மர்மம். அதேபோல, மைத்ராதேவியின் சகோதரர்களை எடியூரப்பா படுத்தியபாடும், ஒரு திகில் நாவலுக்கு உண்டான கதையம்சம் கொண்டது. அதுவரை எடியூரப்பாவை ’எத்தன்’ என்று மட்டுமே மதிப்பிட்டு வந்த கர்நாடக மக்கள், அவர் ’எதற்கும் துணிந்தவர்’ என்பதை அன்று உணர்ந்தார்கள்.

இந்தியாவின் பிறமாநில அரசியல் களங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டது கர்நாடகா அரசியல் களம். கால்வைக்கும் இடமெல்லாம் துரோகச் சகதி உள்ளிழுக்கும். காங்கிரஸ் முதலமைச்சர் தரம்சிங்கை குமாரசாமியோடு கூட்டுச்சேர்ந்து வீழ்த்தியபோதுதான், எடியூரப்பாவின் பெயர் கர்நாடகத்தின் கடைக்கோடி கிராமம் வரைக்கும் பிரபலமானது. அன்றிலிருந்து இன்றுவரை, அவர்தான் கர்நாடக பா.ஜ.க-வின் முகம், முதுகெலும்பு, மூளைநரம்பு எல்லாம். 2012-ம் ஆண்டு அவர் தனிக்கட்சி தொடங்கியபோது, கர்நாடகத்தில் வரலாறு காணாத வாக்குவீழ்ச்சியைச் சந்தித்தது பா.ஜ.க. அதனால்தான், கட்சி விதிகளையெல்லாம் தளர்த்தி எடியை மீண்டும் முதல்வராக்கி மகிழ்ந்திருக்கிறார், அமித் ஷா.

எடியூரப்பா
எடியூரப்பா

உண்மையில், ’ஆபரேஷன் கமலா’வை ஜனவரி மாதமே ஆரம்பித்துவிட்டார், எடி. அப்போதே, மூன்று காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் மும்பைக்கு அனுப்பப்பட்டனர். ஆனால், காங்கிரஸ் சுதாரிக்கத் தவறியது. ’அவர்கள் என் நண்பர்கள். அவர்களை எடியால் வளைக்கமுடியாது’ என்று உறுதியாக நம்பினார், சிவக்குமார். ஆனால், ’அவர் பழைய எடியல்ல. அமித் ஷாவைப் பக்கபலமாக வைத்திருக்கும் புதிய எடி’ என்பதை அவர் மறந்தார். கடைசியில், கர்நாடகத்திலும் காங்கிரஸைக் காலிசெய்து விட்டார்கள். இன்னொருபுறம், ’ஆபரேஷன் கமலா’வில் என்ன நடந்தது, எம்.எல்.ஏ-க்களை எப்படி வளைத்தார்கள் என்பது இப்போதுவரை மர்மம்தான்.

இப்போதும் எடியூரப்பாவை நோக்கி வீசப்படும் முதல் கேள்வி, ‘சார்... ஆபரேஷன் கமலான்னா என்ன?’ என்பதுதான். ஆனால் அவரோ, ‘ அதைத்தான் நானும் கேட்கிறேன்... அப்படின்னா என்ன?’ என்று திருப்பிக் கேட்டுவிட்டு நகர்கிறார். செய்தியாளர்கள் அடுத்தகேள்விக்கு லீட் எடுக்க முடியாமல் ஆஃப் ஆகி விடுகிறார்கள். அதையும் மீறி விடாமல் கேள்வி கேட்பவர்களிடம், ‘மோடியின் நல்லாட்சியைப் பார்த்து எங்கள் கட்சிக்கு வருகிறார்கள்’ என்று பதில் சொல்லி அனுப்புகிறார், எடி. சிவக்குமார் அதிலேதான் அதிகம் காண்டானார்.

எடியூரப்பா
எடியூரப்பா

‘கண்ணுக்கு முன்னாலேயே அனைத்தையும் செய்துவிட்டு, எப்படி நடிக்க முடிகிறது உங்களால்...’ என்று சட்டமன்றத்தில் மனம் நொந்து கேட்டார். எடியூரப்பா வழக்கம்போல ஒரு வணக்கத்தை வைத்துவிட்டு, அமர்ந்துகொண்டார். ’ஓர் ஆட்சியாளனுக்கு இருக்கவேண்டிய அடிப்படைத் தகுதி அறம்’ என்கிறார், வள்ளுவர். அரசியல் வாழ்க்கையின் அந்திமக் காலத்தில் இருக்கும்போதுகூட எடியூரப்பாவுக்கு அது வாய்க்கவில்லை என்பது, அதிக வருத்தத்தைத் தருகிறது.

எல்லாம் போகட்டும். எடியின் கடைசி ஆட்சிக்காலம் இது. இதிலேனும் எடியூரப்பா கொஞ்சம் அறத்தோடு ஆட்சிசெய்தால் தேவலாம் என்று தோன்றுகிறது. சமீபத்திய சட்டமன்றக் கூட்டத்தில், ‘எதிர்க்கட்சியினர் எதற்கும் அஞ்சவேண்டாம். நான் எவரையும் பழிவாங்கப் போவதில்லை. மறப்போம்... மன்னிப்போம் கொள்கையில் எனக்கு அதிக நம்பிக்கையுண்டு. எனவே, எதிர்க்கட்சியினர் அச்சம் விலக்கவேண்டும். சேர்ந்து செயல்படுவோம் வாருங்கள்...’ என அழைப்புவிடுத்தார், அவர். ’அடடா... எடியா இது’ என ஆச்சர்யமாக இருந்தது. ஆனால், இரண்டே நாள்களில் அந்த நம்பிக்கையை அடித்து நொறுக்கியிருக்கிறார், எடி. ‘அவர் மாறவே இல்லை. அத்தனையும் நடிப்பு’ என்று கர்நாடக இளைஞர்கள் குமுறுகிறார்கள். அதாவது, ஆட்சிக்கு வந்ததுமே ’திப்பு ஜெயந்தி’ கொண்டாட்டங்களை ரத்து செய்யும் ஆணையை வெளியிட்டிருக்கிறார், எடி. அவர் அறிவித்த ‘நவகர் நாடகம்’ எந்தத் திசையில் செல்லப்போகிறது என்பது, அந்த ஆணை மூலம் தெளிவாகியிருக்கிறது.

வைரமுத்துவின் மாஜி மந்திரியின் பகல் கவிதை, ‘இனியேனும் மனிதனாவது...’ என்ற வரிகளுடன் முடியும். எடியூரப்பாவின் கவனத்துக்கு!

அடுத்த கட்டுரைக்கு