Published:Updated:

`பேபி மப்ளர்மேன்' முதல் ஆட்டோ டிரைவர் வரை... கெஜ்ரிவால் பதவியேற்பில் பங்கேற்கும் ஆம் ஆத்மிக்கள்!

மினியன் கெஜ்ரிவால் அவ்யன் தோமர்
மினியன் கெஜ்ரிவால் அவ்யன் தோமர்

சாமானிய முதல்வராக அறியப்படும் அரவிந்த் கெஜ்ரிவால் நாளை பதவியேற்றுக்கொள்கிறார். பதவியேற்பு விழாவில் 50 சாமானிய மனிதர்கள் கலந்துகொள்கிறார்கள்.

டெல்லியில் பாரதிய ஜனதா கட்சிக்கு கடும் அதிர்ச்சி கொடுத்து கெஜ்ரிவால், மீண்டும் வெற்றி பெற்றுள்ளார். 70 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சிக்கு 63 தொகுதிகளில் டெபாசிட் கூட கிடைக்கவில்லை. தேசிய கட்சிகளைத் துரத்தியடிக்க, கெஜ்ரிவாலுக்கு மக்கள் நலத் திட்டங்களே கைகொடுத்தன. 'எங்கள் செயல்பாடுகளைப் பார்த்து மக்கள் எங்களைத் தேர்ந்தெடுத்தால் போதும். மலிவான அரசியலில் ஈடுபட நாங்கள் விரும்பவில்லை 'எனக் கெஜ்ரிவால் வெளிப்படையாகவே தெரிவித்தார்.

கெஜ்ரிவால்
கெஜ்ரிவால்

அதற்கேற்ற வகையில் ஏழைகள், பெண்களைக் கவரும் வகையில், பல்வேறு திட்டங்களைக் கொண்டு வந்து, மக்கள் மனங்களை வென்றார் கெஜ்ரிவால். நாளை (16.2.2020 ஞாயிற்றுக்கிழமை) காலை டெல்லி ராம்லீலா மைதானத்தில் கெஜ்ரிவாலின் பதவியேற்பு விழா நடைபெறுகிறது. மதியம் 12.15 மணியளவில் அவர் டெல்லி முதல் அமைச்சராகப் பதவியேற்றுக்கொள்கிறார். விழாவில் துப்புரவுத் தொழிலாளி, டாக்டர்கள், பஸ் டிரைவர், ஆட்டோ டிரைவர், இன்ஜினீயர், ஆர்கிடெக், பஸ் கண்டக்டர்கள், தீயணைப்புத்துறை வீரர்கள், ஆசிரியர்கள், பியூன்கள் எனச் சமுகத்தின் பல மட்ட சாமானிய மக்களும் பங்கேற்கின்றனர். இதில், ஸ்பெஷலாக பேபிமப்ளர் மேனுக்கும் அழைப்பு போயிருக்கிறது.

டெல்லி சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான தினத்தில் ஆம் ஆத்மி கட்சித் தொண்டர்கள் வெற்றியை ஆடிப்பாடி கொண்டாடினார்கள். அப்போது, ஆம் ஆத்மி கட்சித் தொண்டர் ராகுல் தோமரின் ஒன்றரை வயதுக் குழந்தை அவ்யன் தோமர் கூட்டத்தினரை வெகுவாகக் கவர்ந்தான். காரணம்... கெஜ்ரிவால் போல வேடமிட்டு காதுப் பகுதியில் மப்ளர் கட்டிக்கொண்டு குட்டி மீசை வைத்து கண்ணாடி அணிந்து பெற்றோர் அவனை அழைத்து வந்திருந்தனர். மீடியாக்கள், 'பேபி மப்ளர்மேன்' என்ற வர்ணணையுடன் அவ்யன் தோமர் பற்றி செய்தி வெளியிட்டன. இணையத்தில் அவ்யன் தோமரின் புகைப்படங்களும் வைரலாகின.

ஆம் ஆத்மி கட்சித் தொண்டர்களை வெகுவாகக் கவர்ந்த மினி மப்ளர் மேனும் நாளை நடைபெறவுள்ள கெஜ்ரிவாலின் பதவியேற்பு விழாவில் பங்கேற்கிறான். இதற்காக, அவ்யன் தோமர் பெற்றோருக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளதாக ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது. டெல்லி நகரமெங்கும் மினி மப்ளர் மேனுடன் கெஜ்ரிவால் இருப்பது போன்ற நோட்டீஸ்களும் ஒட்டுப்பட்டுள்ளன. சாமானிய மனிதர்கள் நிறைந்திருக்க அவர்கள் முன்னிலையில் டெல்லி முதல்வராக நாளை கெஜ்ரிவால் பதவியேற்றுக்கொள்கிறார். அவருடன் முதல் கட்டமாக 6 அமைச்சர்களும் பதவியேற்கின்றனர்.

கெஜ்ரிவால்
கெஜ்ரிவால்

டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிஷோடியா கூறுகையில், ''கடந்த ஐந்து ஆண்டுகளில் எங்களுடன் இருந்து பணியாற்றியவர்களில் முக்கியமான 50 பேருக்கு அழைப்பு விடுத்துள்ளோம். டெல்லியை முன்னேற்றும் பணியில் அக்கறை காட்டியவர்கள் நாளை எங்களுடன் முதல் வரிசையில் அமர்ந்திருப்பார்கள். மக்களின் முன்னேற்றத்துக்காக இவர்களுடன் இணைந்து நாங்கள் தொடர்ந்து பணியாற்றுவோம்'' என்றார்.

பிரதமர் மோடிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆனால், நாளை அவருக்கு வாரணாசி தொகுதியில் நிகழ்ச்சி இருப்பதால் கெஜ்ரிவால் பதவியேற்பு விழாவில் பங்கேற்க மாட்டார். பிற மாநில முதல்வர்கள் மற்றும் டெல்லி எம்.பி-க்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நாளை இரவு நடைபெறவுள்ள டின்னரில் அனைத்து அமைச்சர்களும் பங்கேற்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த டின்னர் நிகழ்ச்சியின் போது, டெல்லியை சர்வதேச நகரங்களுக்கு இணையாக மாற்றுவது குறித்து விவாதிக்கப்பட இருக்கிறது.

கெஜ்ரிவால் பதவியேற்பு விழாவுக்கு டெல்லியைச் சேர்ந்த பிற கட்சித் தலைவர்கள், பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. ஆம் ஆத்மி கட்சியின் பதவியேற்பு விழாவில், சர்ச்சையும் இல்லாமல் இல்லை. பெண்களுக்கு இலவச போக்குவரத்து என வாரி வழங்கி பெண்கள் ஓட்டுகளால் ஆட்சியைப் பிடித்த ஆம் ஆத்மி கட்சி சார்பாக இந்த முறை 9 பெண்கள் டெல்லி சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டனர்.

ஆதிஷி
ஆதிஷி

அதில், 8 பேர் வெற்றி பெற்றுள்ளனர். இதில் நட்சத்திர வேட்பாளராகக் கருதப்பட்ட ஆதிஷி, டெல்லி கல்காஜி தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். இவர் உட்பட ஆம் ஆத்மியின் எந்தப் பெண் எம்.எல்.ஏ-வுக்கும் கெஜ்ரிவாலின் அமைச்சரவையில் இடம் கிடைக்கவில்லை. சாமானிய குடும்பத்து மனிதராகப் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் முதல்வராகப் பார்க்கப்படும் கெஜ்ரிவால், தன் அமைச்சரவையில் பெண்களுக்கு இடமாளிக்காதது கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

பின் செல்ல