அக்டோபர் 5-ம் தேதி, டெல்லி ஜாண்டேவாலனிலுள்ள டாக்டர் அம்பேத்கர் பவனில் சுமார் பத்தாயிரம் இந்துக்கள், புத்த மதத்துக்கு மாறினர். இந்த நிகழ்ச்சியில், டெல்லி மாநில சமூகநலத்துறை அமைச்சராக இருந்த ராஜேந்திர பால் கௌதம் கலந்துகொண்டார். அதற்குப் பிறகு பா.ஜ.க, ``ஆம் ஆத்மி கட்சி இந்துக்களின் உணர்வுகளைப் புண்படுத்துகிறது" எனக் குற்றம்சாட்டியிருந்தது. அதைத் தொடர்ந்து சமூகநலத்துறை அமைச்சராக இருந்த ராஜேந்திர பால் கௌதம் தனது பதவியை ராஜினாமா செய்தார். மேலும், அவர் டெல்லி காவல்துறையால் கடந்த 11-ம் தேதி விசாரணைக்கு அழைக்கப்பட்டார்.

அப்போது அவர்,"புத்த மதத்தில் எனக்கு நம்பிக்கையிருக்கிறது. இதில் மற்றவர்களுக்கு என்ன பிரச்னை... ஒருவர் விரும்பிய மதத்தைப் பின்பற்றும் உரிமையை நமது அரசியல் சாசனம் அனைவருக்கும் வழங்கியிருக்கிறது. நான் எந்த மதத்துக்கும் எதிராகப் பேசவில்லை. என்னைச் சுற்றி நடக்கும் முழு சர்ச்சையும் குஜராத்தில் பா.ஜ.க தோல்வியடையும் என பயந்துவிட்டதற்கான அடையாளம். எனக்கு எதிராக பா.ஜ.க வதந்திகளைப் பரப்புகிறது" எனத் தெரிவித்தார்.
இந்த நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், எம்.பி-யுமான திருமாவளவன், ராஜேந்திர பால் கௌதமை நேரில் சந்தித்து மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.
மேலும், இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ``அண்மையில் டெல்லியில் 10,000 பேர் பௌத்தம் தழுவிய நிகழ்வை முன்னின்று நடத்திய ஆம் ஆத்மி அமைச்சர் ராஜேந்திர பால் கௌதம், பா.ஜ.க எதிர்ப்பையடுத்து தனது பதவியை உதறினார். அவரைச் சந்தித்துப் பாராட்டினோம். நாளை (இன்று) அவரது இல்லத்திலிருந்து அம்பேத்கர் நினைவிடம் வரை நடக்கும் பேரணியில் பங்கேற்கிறோம்" எனப் பதிவிட்டிருக்கிறார்.