Published:Updated:

வெளிச்சத்துக்கு வரும் ஆவின் முறைகேடு!

ஆவின்
பிரீமியம் ஸ்டோரி
ஆவின்

- பணி நியமனங்களில் பல கோடி ரூபாய் மோசடி...

வெளிச்சத்துக்கு வரும் ஆவின் முறைகேடு!

- பணி நியமனங்களில் பல கோடி ரூபாய் மோசடி...

Published:Updated:
ஆவின்
பிரீமியம் ஸ்டோரி
ஆவின்

கடந்த அ.தி.மு.க ஆட்சியில் கிணறு அல்ல... லேசாகப் பள்ளம் தோண்டினாலே ஊழல் விவகாரங்கள் ஊற்றெடுக்கின்றன. அந்த வகையில் இந்தமுறை சிக்கியிருப்பது தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு நிறுவனமான ஆவினில் நடந்த மோசடி!

கடந்த 2014-ம் ஆண்டு ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது ஆவின் பாலில் தண்ணீர் கலந்து ஊழல் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஒவ்வொரு டேங்கர் லாரியிலிருந்தும் சுமார் இரண்டாயிரம் லிட்டர் வரை பால் திருடப்பட்டு, அதே அளவு தண்ணீரை ஊற்றி மோசடியில் ஈடுபட்டனர். இது தொடர்பாக அ.தி.மு.க பிரமுகர் வைத்தியநாதன் உட்பட எட்டுப் பேர் அப்போது கைதுசெய்யப்பட்டனர். இந்தநிலையில்தான், கடந்த சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக ஆவின் பணி நியமனங்களில் முறைகேடுகள் நடந்திருப்பதும், தற்போதைய தி.மு.க அரசு அந்த விவகாரங்களை ரகசியமாக விசாரணை செய்து நடவடிக்கை எடுத்துவருவதும் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. ஆவின் நிறுவனத்தின் உள் விவரங்கள் அறிந்த சிலர் இந்த முறைகேடுகள் பற்றி நம்மிடம் விவரித்தார்கள்...

நாசர், ராஜேந்திர பாலாஜி
நாசர், ராஜேந்திர பாலாஜி

“கடந்த அ.தி.மு.க ஆட்சியின் இறுதிக்கட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட பணி நியமனங்களில்தான் இந்த முறைகேடுகள் நடந்திருக்கின்றன. இவற்றில் சில பணி நியமன ஆணைகளைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டதால், முன் தேதியிட்டு வழங்கியிருக்கிறார்கள். தமிழகத்தில் மொத்தம் 25 மாவட்டக் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றியங்கள் உள்ளன. இந்த ஒன்றியங்களின் பணி நியமனங்களை, தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றியே நியமிக்க வேண்டும். ஆனால் மதுரை, காஞ்சிபுரம்- திருவள்ளூர், திருப்பூர், நாமக்கல், திருச்சி, விருதுநகர், தேனி, தஞ்சாவூர் ஆகிய யூனியன்களில் 236 பணி நியமனங்கள் முறைகேடாக நடைபெற்றுள்ளன. உதாரணமாக, துணை மேலாளர் பணி இடத்துக்குத் தேர்வு செய்யப்பட்ட ஒருவர், எழுத்து தேர்வில் 29 மதிப்பெண்கள் பெற்றதாக மதிப்பீட்டு பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், நேர்முகக் குழு 31 மதிப்பெண்கள் கொடுத்து முறைகேடாகப் பணி நியமனம் செய்துள்ளது. இது ஒரு துளி உதாரணம்தான்...

சென்னை, ஈரோடு, நீலகிரி, திருவண்ணாமலை, சேலம், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் 460 முதுநிலைத் தொழிற்சாலை உதவியாளர் பணியிடங்களுக்கும், காலியாக இருக்கும் மேலாளர், எக்ஸிகியூட்டிவ், டெக்னீஷியன் உள்ளிட்ட 176 பணிகளுக்கும் கடந்த ஆண்டு நவம்பரில் கால்ஃபார் செய்து, தேர்வுகளை நடத்தி, பணிக்கு எடுத்திருக்கிறார்கள். ஒவ்வொரு பதவிக்கும் ஏற்றபடி சுமார் 10 லட்சம் ரூபாய் முதல் 2 லட்சம் ரூபாய் வரை லஞ்சம் கைமாறியிருக்கிறது.

ஒவ்வொரு மாவட்டத்திலும் இருக்கும் சில சீனியர் அதிகாரிகள், புரோக்கர்கள், துறையின் அமைச்சர் அலுவலகப் பிரமுகர்கள் எனப் பெரிய நெட்வொர்க்கே இந்த வசூல் வேட்டையில் ஈடுபட்டுள்ளது. குறிப்பாக, தலைமையகத்தின் ‘சூரிய’ பெயர்கொண்ட அதிகாரி ஒருவர்தான் இந்த வசூல் வேட்டையை முன்னின்று நடத்தி, அமைச்சர் அலுவலகத்துக்குப் பாலமாக இருந்திருக்கிறார். இந்த முறைகேடு தொடர்பாக ஆவின் நிறுவனத்தின் விஜிலென்ஸ் பிரிவுக்குச் சிலர் புகார் அளித்ததையொட்டி கடந்த இரு வாரங்களாக ரகசியமாக விசாரணை நடைபெற்று, சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன. சம்பந்தப்பட்ட பொது மேலாளரை சஸ்பெண்ட் செய்ய முயற்சிகள் நடந்தபோது, தி.மு.க-வின் கூட்டணிக் கட்சிப் பிரமுகர் ஒருவர் கொடுத்த அழுத்தத்தால் அந்த நடவடிக்கை தற்காலிகமாகக் கைவிடப்பட்டுள்ளது. விசாரணை நேர்மையாக நடைபெற்றால் டஜன் கணக்கான அதிகாரிகள், புரோக்கர்கள் தொடங்கி முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வரை சிக்குவார்கள்... ஆனால், என்ன காரணத்தாலோ முழு விவரங்களை தமிழக அரசு வெளியிடவில்லை” என்றார்கள்.

வெளிச்சத்துக்கு வரும் ஆவின் முறைகேடு!

மேற்கண்ட விஷயங்கள் உண்மையா என்பதை அறிய பால்வளத்துறை அமைச்சரான நாசரை நேரில் சந்தித்துக் கேட்டோம். “துறைரீதியான விசாரணை நடந்துவருகிறது...” என்று இழுத்தவரிடம்... வற்புறுத்திக் கேட்டபோது மடைதிறந்த வெள்ளமாகக் கொட்டித் தீர்த்துவிட்டார்...

“ஆமாம், ஆவின் பணி நியமனங்களில் முறைகேடுகள் நடந்ததாகப் புகார் வந்ததையடுத்து, விசாரணை கமிட்டி அமைத்து விசாரித்தோம். இதில் முறைகேடுகள் நடந்திருப்பது தெரியவந்திருக்கிறது. அனைத்துப் பணியிடங்களுக்கும் நடைபெற்ற எழுத்துத் தேர்வில் முறைகேடு செய்திருக்கிறார்கள். தகுதியான மற்றும் லஞ்சம் கொடுக்காத நபர்கள் பாதிக்கப்பட்டுவிடக் கூடாது என்பதற்காக, தேர்வு எழுதிய ஒவ்வொருவரிடமும் விசாரணை செய்து, முறைகேடுகள் நடந்ததாகக் கண்டறியப்பட்ட 598 பணியிடங்களை ரத்து செய்திருக்கிறோம். அதேசமயம், 38 ஓட்டுநர் பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு இல்லை என்பதால், அவற்றை ரத்து செய்யவில்லை. இப்படி, பணி நியமனங்களில் மட்டுமல்ல... கடந்த ஐந்தாண்டுகளில் தாத்தா வீட்டு சொத்துகளைப்போல ஆவினில் புகுந்து கோடிக்கணக்கில் கொள்ளையடித்திருக்கிறார்கள். அப்படிக் கண்டுபிடிக்கப்பட்ட ஓர் ஊழல் தொடர்பாக நான்கு அதிகாரிகள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உட்பட ஊழலில் உடந்தையாக இருந்த அனைவர் மீதும் நடவடிக்கை பாயும். விரைவில் தமிழக அரசு சார்பில் ஆவினில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக விரிவான அறிக்கை வெளியிடப்படும்” என்றார் தீர்க்கமாக!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism