Published:Updated:

`ராஜீவ் அறக்கட்டளை மீதான மத்திய அரசின் நடவடிக்கை' - அரசியல் பழிவாங்கலா?!

சோனியா காந்தி

சோனியா நிர்வகிக்கும் ராஜீவ் அறக்கட்டளையின், வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்ட (எஃப்சிஆர்ஏ) உரிமத்தை ரத்துசெய்து, மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதை அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என காங்கிரஸ் கட்சியினர் குற்றம்சாட்டிவருகின்றனர்.

`ராஜீவ் அறக்கட்டளை மீதான மத்திய அரசின் நடவடிக்கை' - அரசியல் பழிவாங்கலா?!

சோனியா நிர்வகிக்கும் ராஜீவ் அறக்கட்டளையின், வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்ட (எஃப்சிஆர்ஏ) உரிமத்தை ரத்துசெய்து, மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதை அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என காங்கிரஸ் கட்சியினர் குற்றம்சாட்டிவருகின்றனர்.

Published:Updated:
சோனியா காந்தி

காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி குடும்பத்தினர் ராஜீவ் காந்தி அறக்கட்டளை, ராஜீவ் காந்தி தொண்டு நிறுவனம், இந்திரா காந்தி நினைவு அறக்கட்டளை என மூன்று அறக்கட்டளைகளை நடத்திவந்தனர். இதில், ராஜீவ் காந்தி அறக்கட்டளை மற்றும் ராஜீவ் காந்தி தொண்டு நிறுவனத்தின் தலைவராக சோனியா காந்தியும், உறுப்பினர்களாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், பிரியங்கா காந்தி, ராகுல் காந்தி, ப.சிதம்பரம், மாண்டேக் சிங் அலுவாலியா, சுமன் துபே, அசோக் கங்குலி, பன்சி மேத்தா, தீப ஜோஷி ஆகியோர் உள்ளனர்.

இந்த இரண்டு அறக்கட்டளைகளும் வெளிநாடுகளிலிருந்து நன்கொடை பெற்றதில் விதிமீறல்கள் நடந்திருப்பதாக பாஜக-வினர் குற்றம்சாட்டிவந்தனர். மேலும் அவர்கள், வருமான வரி தாக்கல் செய்யும்போது ஆவணங்களில் முறைகேடு செய்ததாகவும், நிதியைத் தவறாகப் பயன்படுத்துதல், சீனாவிடம் இருந்து நன்கொடை வாங்கியதாகவும் குற்றம்சாட்டினர்.

பாஜக, காங்கிரஸ்
பாஜக, காங்கிரஸ்

ஆனால் இதற்கு காங்கிரஸ் கட்சியினர் மறுப்பு தெரிவித்துவந்தனர். இதற்கிடையில் இந்த விவகாரம் தொடர்பாக விசாரிக்க மத்திய அமைச்சகங்களுக்கு இடையிலான குழுவை மத்திய அரசு கடந்த 2020-ம் ஆண்டு அமைத்தது. அதன்படி அமலாக்கத்துறையின் சிறப்பு இயக்குநர் தலைமையில் விசாரணை நடந்துவந்தது. இந்நிலையில், வெளிநாட்டிலிருந்து நிதி மற்றும் நன்கொடை பெறுவதில் விதிமுறைகளை மீறியதாக ராஜீவ் காந்தி அறக்கட்டளையின், வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்ட (எஃப்சிஆர்ஏ) உரிமத்தை ரத்துசெய்து உத்தரவிடப்பட்டிருக்கிறது.

இது தொடர்பாக உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில், ``வெளிநாட்டு பங்களிப்பு (ஒழுங்குமுறை) சட்டத்தின் கீழ் ராஜீவ் காந்தி அறக்கட்டளை மற்றும் ராஜீவ் காந்தி தொண்டு நிறுவனத்தின் பதிவு ரத்துசெய்யப்படுகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதற்கு காங்கிரஸ் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர்.

மத்திய உள்துறை அமைச்சகம்
மத்திய உள்துறை அமைச்சகம்

இது குறித்து காங்கிரஸ் கட்சியினர் கூறுகையில், "ராகுல் காந்தி நடத்திவரும் பாரத் ஜோடோ யாத்திரைக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு ஏற்பட்டிருக்கிறது. பலரும் ஆதரவு தெரிவித்துவருகின்றனர். இது, பொதுமக்கள் நேரடியாகத் தங்களது குறைகளைத் தெரிவிப்பதற்கு வாய்ப்பாக அமைந்திருக்கிறது. இதேபோல் ஜனநாயக அடிப்படையில் காங்கிரஸ் தலைவருக்கான தேர்தல் நடந்திருக்கிறது. இதற்கும் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்திருக்கிறது. எனவேதான் தற்போது அறக்கட்டளையின் உரிமத்தை பா.ஜ.க அரசு ரத்து செய்திருக்கிறது" என்றனர்.

இது குறித்து நம்மிடம் பேசிய தமிழக பா.ஜ.க துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி, "ஏற்கெனவே, சோனியா காந்தி தலைமையில் இயங்கக்கூடிய இரண்டு அமைப்புகளும் அந்நியச் செலவாணி கட்டுப்பாட்டுச் சட்டத்தை மீறியிருக்கின்றன என நாம் மிகத் தெளிவாக குறிப்பிட்டிருந்தோம். இதில், ராஜீவ் காந்தி அறக்கட்டளை, தடைசெய்யப்பட்டுள்ள ஆராய்ச்சி நிறுவனத்திடமிருந்து ரூ.50 லட்சம் பணம் பெற்றிருக்கிறார்கள். இது தேச விரோத நடவடிக்கை.

நாராயணன் திருப்பதி
நாராயணன் திருப்பதி

இதேபோல ராஜீவ் காந்தி ஃபவுண்டேஷன் ரூ. 3 லட்சம் டாலரை சீனாவிலிருந்து 2005, 2006-ம் ஆண்டுகளில், இந்தியாவுக்குச் சற்றும் தொடர்பு இல்லாத காரணங்களுக்காகப் பெறப்பட்டிருக்கிறது. அதனால் இந்த உரிமம் ரத்து செய்யப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டியதுதான்.

பாரத் ஜோடோ யாத்திரை பிரபலமடைந்திருப்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகக் கூற முடியாது. பல ஆண்டுகளாகவே விசாரணை நடந்துவந்தது. அதன்மீது பல்வேறு ஆவணங்கள் தயார்செய்யப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. பாரத் ஜோடோ யாத்திரையால் காங்கிரஸுக்கும் மக்களுக்கும் எவ்விதமான பிரயோசனமும் கிடையாது” என்றார்.