Published:Updated:

`பாலகணபதியை தண்டிக்காமல் விட்டுவிட்டால்...’ - தூத்துக்குடி எஸ்.பி-யிடம் சசிகலா புஷ்பா கணவர் புகார்

சசிகலா புஷ்பா - கணவர் ராமசாமி

முன்னாள் எம்.பி சசிகலா புஷ்பாவிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட பா.ஜ.க நிர்வாகி பொன் பாலகணபதி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, அவரின் கணவர் ராமசாமி தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி-யிடம் இ-மெயில் மூலம் புகார் அளித்துள்ளார்.

`பாலகணபதியை தண்டிக்காமல் விட்டுவிட்டால்...’ - தூத்துக்குடி எஸ்.பி-யிடம் சசிகலா புஷ்பா கணவர் புகார்

முன்னாள் எம்.பி சசிகலா புஷ்பாவிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட பா.ஜ.க நிர்வாகி பொன் பாலகணபதி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, அவரின் கணவர் ராமசாமி தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி-யிடம் இ-மெயில் மூலம் புகார் அளித்துள்ளார்.

Published:Updated:
சசிகலா புஷ்பா - கணவர் ராமசாமி

இம்மானுவேல் சேகரனின் 65 -வது நினைவுதினம் கடந்த 11-ம் தேதி அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி ராமநாதபுரம் மாவட்டத்தின் பரமக்குடியிலுள்ள அவரின் நினைவிடத்தில் அரசியல் தலைவர்கள் பலர் அஞ்சலி செலுத்தினர். இந்த விழாவில் அனைத்துக் கட்சியினரும் கலந்துகொண்டனர். பா.ஜ.க சார்பில் மாநில துணைத் தலைவர் சசிகலா புஷ்பா, மாநில பொதுச் செயலாளர் பொன் பாலகணபதி, எம்.எல்.ஏ., நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர்  மலர் வளையம்வைத்து அஞ்சலி செலுத்தினர். அந்தக் கூட்டத்தில் சசிகலா புஷ்பாவுக்குப் பின்னால், பொன் பாலகணபதியும் வந்தார். அவர் அஞ்சலி செலுத்துவதுபோல் கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி, சசிகலா புஷ்பாவின் முடியைப் பிடித்து இழுத்தபடியே உரசிக்கொண்டே முன்னால் வந்தார் என்றும்,

தூத்துக்குடி
தூத்துக்குடி

பலமுறை பாலியல் சீண்டலில் ஈடுபட்டார் என்றும் குற்றம்சாட்டப்பட்டது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. பால கணபதிமீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பல தரப்பிலிருந்தும் கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த நிலையில், அவரைக் கட்சியிலிருந்து வெளியேற்றாத பா.ஜ.க.,  புதியதொரு குழுவில் பால கணபதிக்கு இடம் கொடுத்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த நிலையில், தன் மனைவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக பாஜக நிர்வாகி பொன் பால கணபதி மீது சசிகலா புஷ்பாவின் கணவர் ராமசாமி, தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி பாலாஜி சரவணனிடம் இ-மெயில் மூலமாகப் புகார் கொடுத்திருக்கிறார். அவர் அனுப்பிய புகாரில், “ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் நடந்த தியாகி இமானுவேல் சேகரனின் நினைவுநாளில்  கலந்துகொள்ள என் மனைவியும், பா.ஜ.க-வின் மாநில துணைத் தலைவருமான சசிகலா புஷ்பா கலந்துகொண்டார்.

சசிகலா புஷ்பா - கணவர் ராமசாமி
சசிகலா புஷ்பா - கணவர் ராமசாமி

சமூகத்தில் எல்லோராலும் மதிக்கப்படக்கூடிய இடத்தில் என் மனைவி இருக்கிறார். இந்த நிலையில், பரமக்குடி நிகழ்வில் கலந்துகொண்ட பா.ஜ.க நிர்வாகிகளில் ஒரே பெண் என் மனைவிதான். கூட்டம் அதிகமாக இருந்ததாலும், அந்தக் கூட்ட நெரிசலைச் சமாளிக்க முடியாத நிலையில் நின்றுகொண்டிருந்தார். அந்தக் கூட்ட நெரிசலைப் பயன்படுத்திக்கொண்ட பாலகணபதி, என் மனைவியிடம் தவறாக நடக்க முயன்றிருக்கிறார். என் மனைவியின் சேலையையும், உடலின் பல பகுதிகளிலும் தொடுதல் முயற்சியில் ஈடுபட்டார்.

இதை கவனித்த என் மனைவி, அவரின் கையைத் தட்டிவிட்டு, தவிர்த்திருக்கிறார். ஆனாலும், அவர் தொடர்ந்து தவறாக நடக்க முயன்றிருக்கார். அதனால், பா.ஜ.க.,  பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லாத கட்சி என நான் கூறவில்லை. உண்மையில் பா.ஜ.க மற்ற கட்சிகளுக்கு ஓர் எடுத்துக்காட்டாக விளங்கக்கூடிய ஒரு கட்சி. பாலகணபதி செய்த இந்தச் செயல் மூலமாக, கட்சியில் இருக்கும் பிற ஆண்கள் மீது பெண்கள் வைத்துள்ள நம்பிக்கை குறைகிறது. பொதுவாழ்வுக்காக மனைவியைச் சுதந்திரமாக அனுமதித்த என்னைப் போன்ற கணவர்களின் நம்பிக்கையை உடைக்கிறது.  இந்தச் செயலால் என் மனைவி மட்டுமல்லாமல் என் குடும்பத்தினரும் மன உளைச்சலில் ஆளாகியிருக்கிறோம்.

தமிழ்நாடு போலீஸ்
தமிழ்நாடு போலீஸ்

பாலகணபதியை தண்டிக்காமல் விட்டுவிட்டால் சமூகத்துக்குக் கேடு விளைவிக்கும். எனவே, பாலியல் சீண்டலில் ஈடுபட்ட பாலகணபதி மீது வழக்கு பதிவுசெய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து மாவட்ட எஸ்.பி பாலாஜி சரவணனிடம் பேசினோம். “சசிகலா புஷ்பாவின் கணவர் ராமசாமி இ-மெயில் மூலம் அளிக்கப்பட்ட புகாரை ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி காவல் நிலையத்துக்கு விசாரணைக்காக அனுப்பியிருக்கிறோம். விசாரணைக்குப் பிறகு நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.