Election bannerElection banner
Published:Updated:

`எனக்கு கிடைச்ச ஒவ்வொரு வாக்கும் ஆச்சர்யம்தான்... ஏன்னா?' - தோல்வி குறித்து மயில்சாமி

மயில்சாமி
மயில்சாமி ( Photo: Vikatan / Srinivasulu )

``இந்த அரசாங்கம் மக்களுக்கு நல்லது செய்தால் நாம் ஏன் போட்டியிட வேண்டும். நமக்கும் வேறு வேலை இருக்கிறதல்லவா?"

திரை பிரபலங்கள் தேர்தலில் போட்டியிட்டால் எளிதாக வென்றுவிடலாம் என்ற எண்ணத்தை இந்தத் தேர்தல் வேரறுத்திருக்கிறது. மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனில் ஆரம்பித்து பா.ஜ.க சார்பாகப் போட்டியிட்ட குஷ்பு வரை பல பிரபலங்கள் தோல்வியைச் சந்தித்திருக்கின்றனர். கட்சி ரீதியாகப் போட்டியிட்ட பிரபலங்கள் மட்டுமல்லாது தொண்டாமுத்தூர் தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட்ட மன்சூர் அலிகானும், விருகம்பாக்கம் தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட்ட நடிகர் மயில்சாமியும் படுதோல்வியடைந்திருக்கின்றனர்.

ஜெயலலிதாவின் மரணத்துக்கு முன்பு வரை அ.தி.மு.க-வில் இருந்த நடிகர் மயில்சாமி, ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு, அ.தி.மு.கவிலிருந்து ஒதுங்கி அமைதியாக இருந்தார். இந்நிலையில், சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டதும் விருகம்பாக்கம் தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிடப் போவதாக அறிவித்து களத்தில் குதித்தார் மயில்சாமி.

மன்சூர் அலிகான், மயில்சாமி
மன்சூர் அலிகான், மயில்சாமி

விருகம்பாக்கம் தொகுதியில் தி.மு.க சார்பாக ஏ.எம்.வி.பிரபாகர் ராஜாவும் அ.தி.மு.க சார்பாக விருகை ரவியும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பாக கவிஞர் சினேகனும், நாம் தமிழர் கட்சியின் சார்பாக ராஜேந்திரனும், தே.மு.தி.க சார்பாகப் பார்த்தசாரதியும் போட்டியிட்டனர். இவர்களை எதிர்த்து நடிகர் மயில்சாமி சுயேச்சையாகப் போட்டியிட்டார்.

இறுதியில், இங்கு தி.மு.க சார்பாகப் போட்டியிட்ட ஏ.எம்.வி.பிரபாகர் ராஜா 74,351 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். அ.தி.மு.க சார்பாகப் போட்டியிட்ட விருகை ரவி 55,984 வாக்குகளும், மக்கள் நீதி மய்யத்தின் சார்பாகப் போட்டியிட்ட சினேகன் 16,939 வாக்குகளும், நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் ராஜேந்திரன் 10,185 வாக்குகளும், தே.மு.தி.க வேட்பாளர் பார்த்தசாரதி 1,585 வாக்குகளும் பெற்றிருந்தனர். மயில்சாமிக்கு 1,435 வாக்குகள் மட்டுமே கிடைத்தன. இதுகுறித்து அவரிடம் பேசினோம்.

``1,435 பேர் என்னைத் தேடி வாக்களித்திருக்கிறார்கள். என் பெயர் இரண்டாவது வாக்குப் பெட்டியில் கடைசியிலிருந்தது. ஆனாலும் 1,435 பேரும் என்னைத் தேடி வாக்களிச்சிருக்காங்கன்னா அது எவ்வளவு பெரிய விஷயம்? உண்மையிலேயே சந்தோஷப்படுகிறேன். விஜயகாந்த்தின் தே.மு.தி.க கட்சியின் சார்பாகப் போட்டியிட்ட வேட்பாளருக்கே எனக்குச் சமமான வாக்குகள்தான் விழுந்திருக்கு. அப்படியிருக்கும்போது எந்தக் கட்சியையும் சாராமல் சுயேச்சையாகப் போட்டியிட்ட எனக்குச் சந்தோஷம்தான்.

வந்ததும் ஓட்டுப் போட்டுட்டுப் போறதுக்கும், தேடிப் பார்த்து வாக்களிக்கிறதுக்கும் வித்தியாசம் இருக்கிறது. முதல் பெட்டியிலேயே பெயர் இருக்கும் வேட்பாளர்களுக்குக் கட்சி ரீதியாக வாக்களித்திருப்பார்கள். ஆனால், நமக்கு கட்சியெல்லாம் கிடையாது. ஆகையால், வாக்கு குறைவு நிறைவு என்ற பேச்சுக்கெல்லாம் இடமில்லை. எனக்கு ஆயிரம் வாக்குகள் விழுந்தாலும் அது எதிர்ப்பு வாக்குகள் என்று நான் முன்பே சொல்லியிருந்தேன். பணம் கொடுக்காமல் எனக்கு விழுந்த ஓட்டு ஒவ்வொன்றும் உண்மையான தூய்மையான ஓட்டு.

நடிகர் மயில்சாமி
நடிகர் மயில்சாமி

ஒட்டுமொத்தமாக இந்தத் தேர்தல் முடிவைப் பார்க்கும்போது மக்கள் மாற்றத்தை விரும்பியிருக்கின்றனர் என்பது தெரிகிறது. ஒரு சில இடங்களில் செல்வாக்கு உள்ளவர்கள் வெற்றி பெற்றிருப்பார்கள். மக்கள் செல்வாக்கு உள்ளவர்கள் எப்போது தேர்தல் வைத்தாலும் வெற்றிபெற்று வருவார்கள். அது கட்சிக்கு அப்பாற்பட்டது” என்றவரிடம், அடுத்த தேர்தலிலும் போட்டியிடுவீர்களா? உங்கள் அரசியல் எதிர்காலம் எப்படியிருக்கும் எனக் கேட்டதற்கு, ``அது புதிய அரசு மக்களை எப்படிப் பார்த்துக்கொள்கிறது என்பதைப் பொறுத்தது. இந்த அரசாங்கம் மக்களுக்கு நல்லது செய்தால் நாம் ஏன் போட்டியிட வேண்டும். நமக்கும் வேறு வேலை இருக்கிறதல்லவா?” என்றார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு