Published:Updated:

``மார்ச் மாத டார்க்கெட்!'' -அ.தி.மு.க.வின் தலைமை சிக்னலுக்காகக் காத்திருக்கும் நடிகர் பவர் ஸ்டார்

நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன்
நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன்

அ.தி.மு.க.வில் மீண்டும் மார்ச் மாதத்துக்குள் சேர்ந்துவிடுவேன் என்று நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் தெரிவித்தார்.

நாடாளுமன்றத் தேர்தலில் நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன், தென்சென்னை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார். அதன்பிறகு சினிமா சூட்டிங்கில் பிஸியாகிவிட்டார். இந்தநிலையில் பிப்ரவரி 24-ம் தேதி சென்னை நந்தியம்பாக்கத்தில் உள்ள பாரத மாதா சேவை இல்லத்தில் அ.தி.மு.க சிறுபான்மைப் பிரிவு சார்பில் நடந்த ஜெயலலிதா பிறந்த நாள் விழாவில் கலந்துகொண்டார். பின்னர், சென்னை அண்ணாசாலை தர்காவில் நேற்று ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி ஜெ.எம்.பஷீர் ஏற்பாட்டில் நடந்த பிரியாணி வழங்கும் விழாவிலும் பவர் ஸ்டார் சீனிவாசன் பங்கேற்றார்.

பிரியாணி வழங்கும் எம்.பி. முகமதுஜான்
பிரியாணி வழங்கும் எம்.பி. முகமதுஜான்

விழாவில் பேசிய பவர்ஸ்டார் சீனிவாசன், ``இந்த நாள் ஒரு பொன்நாள் என்றுதான் சொல்ல வேண்டும். உலகப் புகழ் பெற்ற தர்காவில் ஜெயலலிதா பிறந்தநாளில் அன்னதானம் செய்வது மகிழ்ச்சியாக இருக்கிறது. என்னுடைய நண்பர்களுக்கு வாழ்த்துகளைச் சொல்கிறேன்" என்றார். தொடர்ந்து பவர் ஸ்டார் சீனிவாசனுடன் அங்கிருந்தவர்கள் செல்ஃபி எடுத்துக் கொண்டனர்.

பிரியாணி வழங்கும் விழா நடந்த அண்ணாசாலை தர்காவில் வழக்கத்தை விட கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இதுகுறித்து போலீஸாரிடம் கேட்டதற்கு, ``நாடாளுமன்றத்தில் சிஏஏ மசோதாவுக்கு ஆதரவாக அ.தி.மு.க. எம்.பி-க்கள் வாக்களித்தனர். அதனால் அ.தி.மு.க.வில் உள்ள இஸ்லாமிய நிர்வாகிகள் மீது அதிருப்தி ஏற்பட்டுள்ளது. வேலூர் அ.தி.மு.க. எம்.பி-யான முகமது ஜான் ஜமாத்திலிருந்து நீக்கப்பட்டார். சென்னை அண்ணாசாலையில் உள்ள தர்காவில் ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி நடந்த பிரியாணி வழங்கும் விழாவில் முகமது ஜான் எம்.பி பங்கேற்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்க சில முஸ்லிம் அமைப்புகள் முடிவு செய்திருந்தன.

Vikatan
பவர் ஸ்டார் சீனிவாசன்
பவர் ஸ்டார் சீனிவாசன்

இதுகுறித்து உளவுத்துறை மூலம் காவல்துறைக்குத் தகவல் கிடைத்ததும் தர்காவில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. முகமதுஜான் எம்.பிக்கு எதிர்ப்பு தெரிவிக்க முடிவு செய்திருந்த முஸ்லிம் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் யாரும் விழா முடியும் வரை வரவில்லை" என்றனர்.

2,000 பேருக்கு பிரியாணி வழங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அதைவித அதிகளவில் மக்கள் கூடியதால் பிரியாணி பலருக்குக் கிடைக்கவில்லை. அவர்களுக்கு அருகில் உள்ள கடையிலிருந்து பிரியாணி வழங்கப்பட்டுள்ளது.

பவர் ஸ்டார் சீனிவாசனிடம் பேசினோம். ``நான் சில ஆண்டுகளுக்கு முன் அ.தி.மு.க மருத்துவ அணியில் பதவியில் இருந்தேன். பின்னர் அ.தி.மு.கவிலிருந்து மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே தலைமையிலான இந்திய குடியரசு கட்சியில் சேர்ந்தேன். அந்தக் கட்சி சார்பில் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தென்சென்னை தொகுதியில் போட்டியிட்டேன். மீண்டும் அ.தி.மு.கவில் சேர மூவ் பண்ணிக்கொண்டிருக்கிறேன். அதனால்தான் ஜெயலலிதா பிறந்த நாள் விழாவில் பங்கேற்றேன். மார்ச் மாதத்துக்குள் சேர்ந்துவிடுவேன். தற்போது சூட்டிங்கில் இருக்கிறேன். பிறகு விரிவாக உங்களிடம் பேசுகிறேன்" என்றார் சுருக்கமாக.

நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன்
நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன்

நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசனை அ.தி.மு.கவில் மீண்டும் சேர்ப்பது தொடர்பாக கட்சி தலைமையில் ஆலோசனை நடந்துவருகிறது. ஆனால், தற்போது கட்சியில் முக்கியப் பொறுப்பில் இருக்கும் ஒருவர், இன்னும் கிரீன் சிக்னல் கொடுக்கவில்லை. அவரின் சம்மதத்துக்குப்பிறகுதான் அ.தி.மு.கவிலிருந்து பவர் ஸ்டார் சீனிவாசனுக்கு அழைப்பு வரும் என்கின்றனர் உள்விவரம் தெரிந்தவர்கள்.

அடுத்த கட்டுரைக்கு