Published:Updated:

`ஜனாதிபதி கமல்ஹாசன்!' - பரமக்குடி விழாவில் பிரபு

``கமல்ஹாசன் தொழில்நுட்ப விஷயங்களை எல்லாம் தெரிஞ்சுகிட்டு என் தோள் மேல் முட்டி போட்டுக்கொண்டு அண்ணாந்து பார்க்கிறான்டா திரையுலகத்தை. எனக்கு தெரிஞ்சதைவிட அதிகமாவே தெரிஞ்சவர்' எனச் சொல்லி அண்ணனை அப்பா அடிக்கடி பாராட்டுவார்.''

கமல்ஹாசன் விழாவில் பிரபு
கமல்ஹாசன் விழாவில் பிரபு

கமல்ஹாசன் 65-வது பிறந்த நாளான இன்று அவரது சொந்த ஊரான பரமக்குடியில் நடந்த விழாவில் பங்கேற்ற நடிகர் பிரபு, ``இந்தியாவின் ஜனாதிபதியாக கமல்ஹாசன் வரணும்னு நம்ம தம்பிகள் எல்லாம் விரும்புறாங்க'' எனக் கூற, விழாவில் கூடியிருந்தவர்களின் கரவொலி அதிரவைத்தது.

கமல்ஹாசன் விழாவில் பிரபு
கமல்ஹாசன் விழாவில் பிரபு

பரமக்குடியில் கமல்ஹாசனின் 60 வருட திரையுலகப் பணியைக் கொண்டாடும் விழா நடந்தது. இந்த விழாவில் கமல்ஹாசனின் குடும்பத்தினருடன் நடிகர் பிரபுவும் பங்கேற்றார். இந்த விழாவில் பேசிய நடிகர் பிரபு, ``5 வயதிலிருந்து சினிமாவுக்கு வந்தாராம். 60 வருஷம் ஆயிடுச்சாம். இவர பாக்குறதுக்கு அப்படியா தெரியுது. இன்னும் மாஸ்டர் கமல்ஹாசனாகத்தான் தெரிகிறார். அண்ணா மேல அப்பாவுக்கு அளவு கடந்த பிரியம் உண்டு. அப்பா சொல்லுவாங்க, `எனக்கு திரையுலக வாரிசு கமல் மட்டும்தான்' என்பார். தொழில்நுட்ப விஷயங்களை எல்லாம் தெரிஞ்சுகிட்டு என் தோள் மேல் முட்டி போட்டுக்கொண்டு அண்ணாந்து பார்க்கிறான்டா திரையுலகத்தை. எனக்குத் தெரிஞ்சதைவிட அதிகமாவே தெரிஞ்சவர்' எனச் சொல்லி அண்ணனை அடிக்கடி பாராட்டுவார். எங்க குடும்பம் ரொம்ப பெருசு. பிள்ளைக் குட்டிகளும் 10 தினுசுன்னு எங்க வீட்ல பாடுன மாதிரி இன்றைக்கு அண்ணன பாக்குறதுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. நம்மல்லாம் அண்ணனை இப்படிப் பார்த்ததே இல்லையே. இன்னைக்கு அண்ணனோட எல்லா குடும்பத்தையும் பார்க்கும்போது எவ்வளவு சந்தோஷமா இருக்கு. எல்லாரும் கை தட்டுங்க தம்பி. அவரு மனசுக்குள்ள என்ன நினைச்சுகிட்டு இருக்கார்னு எனக்குத் தெரியும்.

``வஞ்சப் புகழ்ச்சிதான் `ஹேராம்' படமும்!" - கமல் டீகோடிங் @ விகடன் பிரஸ்மீட்!

அப்படிப்பட்ட மென்மையானவர், அன்பால அவர அடிச்சு துளச்சுடலாம். நீங்கள் எல்லாம் அவரிடம் எப்படி அன்பு காட்டுகிறீர்களோ அதுபோல் நானும் அன்பு காட்டுகிறேன். அன்புக்கு அடிமை என்றால் எங்க அண்ணன்தான். அந்த வகையிலே திருமதி சாருஹாசன் மண்ணி அவர்கள் சொன்னாங்க, அண்ணன ஜனாதிபதியாக பார்க்கணும்னு. நம்ம தம்பிகளுக்கு எல்லாம் அதேதான் ஆசை. அண்ணனை என்றைக்காவது ஒரு நாள் ஜனாதிபதியாக பாக்கணும்னு. அண்ணே இந்தக் குடும்பத்தோட இந்தத் தம்பியையும் அழைச்சதுக்கு ரொம்ப ரொம்ப நன்றி. நீங்க நல்லாயிருக்கணும்னு ஆண்டவன நாங்க வேண்டிக்கிறோம். எங்க அப்பாவ வேண்டிக்கிறோம். அண்ணா நீங்க நல்லாயிருங்க'' என்றார்.

கமல்ஹாசன் விழாவில் சாருஹாசன், சுஹாசினி
கமல்ஹாசன் விழாவில் சாருஹாசன், சுஹாசினி

தொடர்ந்து பேசிய சுஹாசினி, ``சினிமாவில் என்னை டெக்னிக்கல் சைடுல போகணும்னு சொல்லி ஃபிலிம் இன்ஸ்டிட்யூட்டுக்குப் பணம் கட்டி சேர்த்தது கமல்தான். என்னை மாதிரி தமிழ்ப்பெண்கள், இந்தியப் பெண்கள், தென்னிந்தியப் பெண்கள் ஏணியின் உச்சாணியில் இருக்க வேண்டும் என்பதுதான் கமலோட ஆசை. அது அவரோட சின்ன வயதில் இருந்து வந்த ஆசை. என்னோட தங்கை, அக்கா எல்லோருக்கும் தற்காப்பை சொல்லிக்கொடுத்தார். ஏதாவது பிரச்னை வந்தால் எப்படி சமாளிக்க வேண்டும் எனச் சொல்லித் தந்தவர். எங்க குடும்பத்துக்கு மட்டுமல்ல; இந்த நாட்டுக்கே இப்படிப்பட்டவர் வேண்டும். பெண்களுக்கு நீங்கள் என்னவேணும்லாம் செய்யலாம்னு நினைக்கிற முற்போக்குவாதியான கமல் போன்ற ஒருவர் வேண்டும். என் வாழ்க்கையில் எல்லாமே நீங்க கொடுத்ததுதான். மணி கூட (மணிரத்னம்) வாழ்க்கை கொடுத்தது நீங்கதான். உங்களை அவர் தேடி வந்தபோதுதான் என் வாழ்க்கைக்கு உள்ளும் அவர் வந்தார். நீங்க இல்லைன்னா என்னோட வாழ்க்கையில் எதுவும் இல்லை'' என்றவர் கமலின் காலில் விழுந்து ஆசி பெற்றதுடன், கமலை கட்டிப்பிடித்து கன்னத்தில் முத்தமிட்டார்.