Published:Updated:

அ.தி.மு.க குடும்ப அரசியலை நோக்கி நகரும்! - கள்ளக்குறிச்சி விவகாரத்தில், தி.மு.க எதையோ மறைக்கிறது!

கஸ்தூரி
பிரீமியம் ஸ்டோரி
கஸ்தூரி

- தமிழக பா.ஜ.க செயலற்றிருக்கிறது! - நடிகை கஸ்தூரி பொளேர்

அ.தி.மு.க குடும்ப அரசியலை நோக்கி நகரும்! - கள்ளக்குறிச்சி விவகாரத்தில், தி.மு.க எதையோ மறைக்கிறது!

- தமிழக பா.ஜ.க செயலற்றிருக்கிறது! - நடிகை கஸ்தூரி பொளேர்

Published:Updated:
கஸ்தூரி
பிரீமியம் ஸ்டோரி
கஸ்தூரி

தமிழ்நாட்டில் தி.மு.க - அ.தி.மு.க... மத்தியில் காங்கிரஸ் - பா.ஜ.க... என அனைத்துக் கட்சிகளையும் ட்விட்டரில் ரவுண்டு கட்டி அடித்துவருபவர் நடிகை கஸ்தூரி. அவரிடம் தமிழ்நாடு அரசியல் சூழல் குறித்து சில கேள்விகளை முன்வைத்தேன்...

“சமீபகாலமாக தி.மு.க-வைக் கடுமையாக விமர்சிக்கிறீர்களே... ஏன்?”

“நான் தமிழ்நாடு அரசின் செயல்பாட்டைத் தான் விமர்சிக்கிறேன், தி.மு.க-வை இல்லை. தமிழ்நாடு பட்ஜெட்டை முதல் ஆளாகப் பாராட்டினேன். ஒரு தமிழச்சி என்ற முறையில், அரசின் தவறுகளைச் சுட்டிக்காட்டுவது என் தார்மிக உரிமை. அதற்காக வரும் தனிநபர் தாக்குதலைச் சகித்துக்கொள்ளவே முடியவில்லை. பெரியார், அண்ணா, கலைஞர் பெயரைச் சொல்லி தரம் தாழ்ந்து பேசுபவர்களை, நானும் திட்டவேண்டிய சூழல் ஏற்படுகிறது. அதைத்தான் செய்கிறேன்.”

“அரசை விமர்சிப்பது கடமையென்றால், மத்திய அரசை நீங்கள் விமர்சிக்கத் தயக்கம் காட்டுவது ஏன்?”

“இல்லவே இல்லை... மத்தியில் ஆளும் பி.ஜே.பி., ஜி.எஸ்.டி வரியைக் கொண்டுவரும்போது பத்தி பத்தியாக எழுதிப் புலம்பியிருக்கிறேன். அதை தி.மு.க-காரர்கள் படிக்கக்கூட இல்லை. ஆனால், தி.மு.க-வை விமர்சித்தால் வந்து கம்பு சுற்றுகிறார்கள். ரௌடிகளைக் கும்பல் சேர்த்துக்கொண்டு, ஆட்சியை விமர்சிப்பவர்களை மிரட்டுகிறார்கள். விமர்சனங்களைக் காதுகொடுத்துக் கேட்காமல், ‘வசவாளர்கள்’ என்று ஸ்டாலின் கடக்கச் சொல்கிறார். இது ஆட்சிக்கு நல்லதில்லை.”

“தி.மு.க-வின் திராவிட மாடலைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?”

“ `சொல்வது ஒன்று செய்வது ஒன்று’ என்பதுதான் திராவிட மாடல். நீட் தேர்வு விலக்கு உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகள் எதையுமே நிறைவேற்றவில்லை. மதுவுக்கு எதிராகக் கறுப்புச் சட்டை போட்டு, பதாகை ஏந்தி போராட்டம் செய்த ஸ்டாலின், இப்போது டாஸ்மாக் வருமானத்தைவைத்து மட்டும்தான் அரசை நடத்துகிறார். எதிர்க்கட்சியாக இருந்து எதிர்த்த சென்னை - சேலம் எட்டுவழிச் சாலை உள்ளிட்ட பல திட்டங்களை இப்போது நிறைவேற்றத் துடிக்கிறார். ஸ்டெர்லைட் போராட்டத்தில் கலவரம் வெடித்தால், அது மக்கள் கலவரம். ஆனால், கள்ளக்குறிச்சியில் கலவரம் வெடித்தால், அது சமூக விரோதிகளால் நடந்தது என்று பேசுகிறார்கள். இந்த போலித்தனத்தை என்னால் சகித்துக்கொள்ளவே முடியவில்லை. கள்ளக்குறிச்சி மாணவி தற்கொலை விவகாரத்தில், பள்ளி நிர்வாகத்துக்கு தி.மு.க அரசு முட்டுக்கொடுத்து, எதையோ மறைக்கிறது.”

“நீட் தேர்வு விலக்கு தொடர்பான மசோதாவை, மத்திய அரசுதானே கிடப்பில் போட்டிருக்கிறது?”

“ ‘வெட்கம், மானம், சூடு, சொரணை இருந்தால் நீட் தேர்வை ஒழித்துவிடலாம். அந்த ரகசியம் எங்களுக்குத் தெரியும்’ என்று சொல்லித்தானே உதய் அண்ணா வாக்குச் சேகரித்தார். நீட் இப்போதும் நடக்கிறது. அப்படியென்றால், அவர் சொன்னதெல்லாம் அவருக்கு இல்லை என்று எடுத்துக்கொள்ளலாமா... ‘கோபேக் மோடி’ என்று எதிர்த்தவர்கள், இன்று எல்லாவற்றுக்கும் ‘வெல்கம்... வெல்கம்’ என்று சிவப்புக் கம்பளமாக தங்கள் முதுகைக் காட்டுகிறார்கள்.”

அ.தி.மு.க குடும்ப அரசியலை நோக்கி நகரும்! - கள்ளக்குறிச்சி விவகாரத்தில், தி.மு.க எதையோ மறைக்கிறது!

“பால், அரிசி, மருத்துவமனை ஐ.சி.யூ அறை ஆகியவற்றுக்கும் ஜி.எஸ்.டி விதித்திருக்கிறதே மத்திய அரசு?”

“முற்றிலும் மக்கள் விரோதச் செயல். உயிருக்குப் போராடும் நிலையில், ஐ.சி.யூ-வில் சேர்ந்த நோயாளி, ஜி.எஸ்.டி-யோடு பில்லைப் பார்த்தால், அவர் உயிர் அப்போதே போய்விடும். அரசே மக்களுக்கு எதிரியாக இருப்பது அப்பட்டமான துரோகம். வரி விதிப்புக்கு நொண்டிச்சாக்கு சொல்வதை நிறுத்த வேண்டும். அதேநேரத்தில், தமிழ்நாட்டுக்குப் பல நல்லதையும் பா.ஜ.க அரசு செய்கிறது.”

“ஆனால், மின்சார விலையை ஏற்ற வேண்டும் என்று மத்திய அரசு மிரட்டியதாக அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியிருக்கிறாரே?”

“இதில் பாதி உண்மை, பாதி பொய். உதய் மின் திட்டத்தில் இணைந்த மாநில அரசு, மத்திய அரசுக்குக் குறிப்பிட்ட தொகையை வழங்க வேண்டும். ஆனால், தமிழ்நாடு அரசு மின்சாரத்துறையின் கடன் சுமையைக் காரணம் காட்டி அதைக் கொடுக்க மறுக்கிறது. அதை முறையாகக் கொடுக்க வேண்டும் என்றுதான் மத்திய அரசு கூறியிருக்கிறதே தவிர, அதை மக்களிடமிருந்து வாங்கிக் கொடுக்கச் சொல்லவில்லை. இதைத் தெளிவுபடுத்தவேண்டிய தமிழ்நாடு பா.ஜ.க செயலற்றிருக்கிறது.”

“ஆனால், தமிழ்நாடு பா.ஜ.க., ‘நாங்கள்தான் எதிர்க்கட்சி’ என்று கூறிவருகிறதே?”

“(பலமாகச் சிரிக்கிறார்.) அவர்கள் இன்னும் மக்களிடமே செல்லவில்லை. அண்ணாமலை நன்றாகப் பணியாற்றினாலும், அவர்களின் சகாக்கள் சரியில்லை.”

“அ.தி.மு.க-வின் இடைக்காலப் பொதுச்செயலாளராக எடப்பாடி தேர்வுசெய்யப்பட்டிருக்கிறாரே?”

“அம்மா மறைந்த பின்னர், கட்சியின் விசுவாசிகளால் ஜீரணிக்க முடியாத பல விஷயங்கள் அ.தி.மு.க-வில் நடக்கின்றன. அவற்றில் ஒன்றுதான், அம்மாவை நிரந்தரப் பொதுச்செயலாளர் என்பதிலிருந்து மாற்றியிருப்பதும். கட்சியைவிட தனிமனிதர்கள் பெரிதாகிவிட்டார்கள். தனிநபர் முக்கியத்துவத்தில் தி.மு.க இருந்ததால்தான், அங்கு இப்போது ‘சின்னவர்’ ஒருவர் உருவாகியிருக்கிறார். ரத்த பாசத்துக்காக பா.ம.க-விலும் ம.தி.மு.க-விலும் வாரிசுகளுக்கு முடிசூடப்பட்டுள்ளது. அதேபோல, அ.தி.மு.க-வும் குடும்ப அரசியலை நோக்கி நகரும்.”

“ ‘அரசு விழாக்களில் மதம் சார்ந்த பூஜைகள் செய்யக் கூடாது’ என்று தருமபுரி எம்.பி செந்தில்குமார் பேசியிருக்கிறாரே?”

“எல்லா மதங்களையும் மதிப்பதுதான் சமத்துவம். தி.மு.க அதை ஒருபோதும் செய்யாது. காசுக்காக பூஜை செய்யவந்த புரோகிதரை, மிக தரக்குறைவாகப் பேசியதை ஏற்றுக்கொள்ளவே முடியாது. முன்னாள் பிரதமர் கொலை வழக்கில் தொடர்பிருப்பதாகக் கூறப்படும் நபர்களை மனிதாபிமானத்தோடு அணுகும் தி.மு.க., பிராமணர்களை மட்டும் விலங்குகள்போல நடத்துகிறது. பிராமணர்கள் எதிர்ப்பு, இந்து மத அவமதிப்பு ஆகியவைதான் திராவிட மாடலில் மறைந்திருக்கும் முகம்!”