Published:Updated:

ஸ்டாலின்... எடப்பாடி... கமல்... விஜய்... சீமான்... கலந்துகட்டும் கஸ்தூரி!

எப்படியும் இந்த இட ஒதுக்கீடு ரத்தாகிவிடும் என்பது, இந்த இட ஒதுக்கீட்டைக் கொடுத்த முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றாகவே தெரியும்.

பிரீமியம் ஸ்டோரி

‘தமிழ்நாடு தினம், கோயில் நகை உருக்குதல், கரன்ட் கட், 10.5% இட ஒதுக்கீடு...’ எனத் தமிழக அரசியலில் எதைத் தொட்டாலும் சர்ச்சைப் பட்டாசுகள் வெடித்துச் சிதறுகின்றன. இந்த நிலையில், அரசியல், சினிமா, விளையாட்டு என ஆல்ரவுண்டர் விமர்சகராக வலம்வரும் நடிகை கஸ்தூரியிடம் நிகழ்கால அரசியல் குறித்துப் பேசினோம்...

“அண்மையில், தமிழக அரசின் ‘தமிழ்நாடு தினம்’ குறித்த அறிவிப்பு, பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறதே?’’

‘‘கடந்தகாலத்தில், ‘தமிழ்ப் புத்தாண்டு’ தினத்தை வைத்து கருணாநிதி ஓர் அரசியல் செய்துவந்தார். அவருடைய மகனும் தன் பங்குக்கு, ‘தமிழ்நாடு தினத்தை நிறுவிய தலைவர் மு.க.ஸ்டாலின்’ என்ற பெயரைப் பதியவைக்க முயன்றுவருகிறார். கடந்த அ.தி.மு.க ஆட்சியில், தமிழ்நாட்டின் ஊர்ப் பெயர்களையெல்லாம் ஆங்கிலத்தில் மாற்றி காமெடி செய்தார்கள். அதே போன்ற ‘தேவையில்லாத ஆணி’தான் இந்தத் தமிழ்நாடு தினம் விஷயமும். தமிழ்நாட்டின் பிறப்பு குறித்த ஆராய்ச்சி இப்போது தேவையா? பிறப்பைவைத்து பிரிவினை அரசியல் செய்யும் இந்த அரசியல் வியாபாரிகள், இன்னும் எத்தனை காலத்துக்குத்தான் இப்படியே குழப்பிக் கொண்டிருப்பார்கள்?’’

“பிறப்பைவைத்து அரசியல் செய்வது மதவாதிகள்தானே... நீங்கள் ஏன் பிரச்னையை திசை திருப்புகிறீர்கள்?’’

“பிறப்பைவைத்து மட்டுமல்ல... மதத்தை வைத்து அரசியல் செய்துவருவதும் அரசியல்வாதிகள்தான். இங்கே திராவிடக் கட்சிகள் ‘சமூகநீதி’ என்ற பெயரில், குறிப்பிட்ட சமூகத்துக்கு எதிராகப் பெரும் பான்மையான மக்களின் வாக்குகளைக் கவர்ந்தார்கள். தேசிய அளவில் பா.ஜ.க-வோ சிறுபான்மை மக்களுக்கு எதிராக ‘இந்து மதக் காவலர்கள்’ என்ற பெயரில், பெரும்பான்மை மக்களின் வாக்குகளைக் கவர்கிறார்கள். ஆக, திருப்பி அடிக்கத் திராணியில்லாத மக்களை அடித்து வளர்வதுதான் இவர்களது அரசியல் தந்திரம்!’’

“வன்னியர்களுக்கான 10.5% உள் இட ஒதுக்கீட்டை உயர் நீதிமன்றம் ரத்து செய்திருப்பதை எப்படிப் பார்க்கிறீர்கள்?’’

“எப்படியும் இந்த இட ஒதுக்கீடு ரத்தாகிவிடும் என்பது, இந்த இட ஒதுக்கீட்டைக் கொடுத்த முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றாகவே தெரியும். பா.ம.க-வைக் கூட்டணிக்குள் சேர்க்கவும், தேர்தல் சமயத்தில் பா.ம.க-வுக்கான வாக்குகளைக் கவரவும்தான் இந்த உள் இட ஒதுக்கீடே கொடுக்கப்பட்டது. ஆக, ‘10.5% இட ஒதுக்கீட்டால் வன்னியர்களுக்கு எந்தப் பிரயோஜனமும் இருக்காது’ என்பது பா.ம.க-வுக்கும் அ.தி.மு.க-வுக்கும் ஏற்கெனவே தெரியும் என்றாலும்கூட, ‘இந்த இட ஒதுக்கீட்டால் பா.ம.க., அ.தி.மு.க-வுக்குமே எந்தப் பிரயோஜனமும் இருக்காது’ என்பதைத் தேர்தலுக்குப் பிறகு உணர்ந்துகொண்டார்கள். இது அவர்களே எதிர்பாராதது.’’

“தமிழ்நாட்டில், ஏற்கெனவே உள் இட ஒதுக்கீடு நடைமுறை இருந்துவரும்போது, 10.5% உள் இட ஒதுக்கீட்டை மட்டும் ரத்து செய்திருப்பதை என்னவென்று புரிந்துகொள்வது?’’

“தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில், ஆட்சி மாறிப்போய்விட்டது. எனவே 10.5% இட ஒதுக்கீடும் ரத்தாகிவிட்டது... ஆக, இது டைமிங் பிராப்ளம். ‘எதன் அடிப்படையில் இந்த உள் இட ஒதுக்கீடு அளவு நிர்ணயம் செய்யப்பட்டது’ என்ற கேள்வியைக் கேட்டுத்தான் ரத்து செய்திருக்கிறது நீதிமன்றம். இந்தக் கேள்விக்கான பதிலை மேல்முறையீட்டில் எப்படிச் சொல்லப் போகிறார்கள் என்பதைப் பொறுத்துத்தான், அங்கேயும் தீர்ப்பு கிடைக்கும்!’’

ஸ்டாலின்... எடப்பாடி... கமல்... விஜய்... சீமான்... கலந்துகட்டும் கஸ்தூரி!

“ ‘அண்ணாத்த’ படத்தை வெளியிடுவதாலேயே, தியேட்டர்களில் 100% இருக்கை என ஊரடங்கு தளர்வு செய்யப்பட்டிருப்பதாகப் புகார் கிளம்பியுள்ளதே?’’

“100 சதவிகித உண்மையும் அதுதான். ஒருவேளை ‘அண்ணாத்த’ படம் பொங்கலுக்கு வெளியாவதாக இருந்தால், டிசம்பர் 31-ம் தேதியன்று தளர்வை அறிவித்திருப்பார்கள். அவ்வளவுதான். இதில் ஆச்சர்யப்படுவதற்கு என்ன இருக்கிறது?’’

“1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான பள்ளிக்கூடங்களே திறந்துவிட்ட நிலையில், தியேட்டர் திறப்பில் அரசியல் நோக்கம் எனச் சொல்வது நியாயம்தானா?’’

“அது எப்படி, மிகச் சரியாக ‘அண்ணாத்த’ படம் ரிலீஸாவதற்கு நான்கு நாள்களுக்கு முன்பாக 100% இருக்கை எனத் தளர்வு அறிவிக்கப்படுகிறது என்றுதான் கேட்கிறோம். எனவே, ‘அசுரன்’ படத்தில் பசுபதி சொல்வதுபோல், நீங்க நம்பலன்னாலும் அதுதான் நெசம்!”

“அமைச்சர் செந்தில் பாலாஜியை விமர்சிக்கும் நீங்கள், அண்மையில் அமைச்சரின் சவாலில் பின்வாங்கிவிட்ட அண்ணாமலை குறித்து விமர்சிப்பதில்லையே ஏன்?’’

“ஆளுங்கட்சியினரும் எதிர்க்கட்சியினரும் அவரவருக்கு ஏற்றவகையில் அரசியல் செய்துகொண்டிருக்கிறார்கள். அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக, சில நாள்களுக்கு முன்பு அண்ணாமலை சில எக்ஸெல் ஷீட்களை வெளியிட்டார். அதைக்கூடத்தான் நான் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. எனவே, அவர் பின்வாங்கியதையும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை!”

“தமிழக அரசியலில், கமல்ஹாசன்-விஜய் இருவரது அரசியல் நிலைப்பாடுகளை எப்படி விமர்சிப்பீர்கள்?’’

“நான் `பிக் பாஸ்’ நிகழ்ச்சியைக்கூட பார்ப்பதில்லை. இந்த நிலையில், கமல்ஹாசனின் அரசியலை எப்படிப் பார்க்கிறீர்கள் எனக் கேள்வி கேட்கிறீர்கள். விஜய், தான் அரசியலுக்கு வருவதாக இன்னும் நேரடியாக அறிவிக்கவில்லை. அதேசமயம் அவரது மக்கள் இயக்கத்தினர், ஊராட்சித் தேர்தலில் குறிப்பிட்ட வெற்றி பெற்றிருக்கிறார்கள். பொதுவாக இளைஞர்கள் எப்போதுமே எழுச்சியாக வேலை செய்வார்கள். அரசியலைப் பொறுத்தவரையில், அந்த இளைஞர்கள் சீமான் பக்கம்தான் இருக்கிறார்கள். ஆனால், விஜய் பக்கமும் இளைஞர்கள் இருக்கிறார்கள் என்பதை இந்தத் தேர்தல் நிரூபித்திருக்கிறது. மேற்கொண்டு இதை எப்படி வளர்த்தெடுக்கப்போகிறார் என்பது விஜய்யின் கைகளில்தான் இருக்கிறது. இப்போதைய சூழலில், விஜய் அரசியலுக்கு வருவதாகத் தெரியவில்லை!’’

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு