Published:Updated:

`சதிசெய்த சந்திரபாபு நாயுடு, ஜெகன் அண்ணா கட்சியில ரீஎன்ட்ரி!' - அமைச்சர் ரோஜாவின் 'பவுன்ஸ் பேக்' கதை

ஜெகன் மோகன் ரெட்டியுடன் ரோஜா

'அரசியல்லயும் வெற்றியைப் பார்க்காம பின்வாங்கக் கூடாதுனு முடிவெடுத்தேன். கடந்த முறை நாங்க எதிர்க்கட்சி வரிசையில இருந்தோம். அப்போ என் நியாயமான கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாத சந்திரபாபு நாயுடு, என்னை ஒரு வருஷம் சஸ்பெண்டு செஞ்சார். அதுக்கெல்லாம் நான் அசரவேயில்லை.'

`சதிசெய்த சந்திரபாபு நாயுடு, ஜெகன் அண்ணா கட்சியில ரீஎன்ட்ரி!' - அமைச்சர் ரோஜாவின் 'பவுன்ஸ் பேக்' கதை

'அரசியல்லயும் வெற்றியைப் பார்க்காம பின்வாங்கக் கூடாதுனு முடிவெடுத்தேன். கடந்த முறை நாங்க எதிர்க்கட்சி வரிசையில இருந்தோம். அப்போ என் நியாயமான கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாத சந்திரபாபு நாயுடு, என்னை ஒரு வருஷம் சஸ்பெண்டு செஞ்சார். அதுக்கெல்லாம் நான் அசரவேயில்லை.'

Published:Updated:
ஜெகன் மோகன் ரெட்டியுடன் ரோஜா

சினிமாவிலிருந்து அரசியலுக்குச் செல்லும் பிரபலங்களில் வெகுசிலர் மட்டுமே, அனல் பறக்கும் அந்தக் களத்திலும் நட்சத்திர அந்தஸ்தைப் பெறுகின்றனர். அந்தப் பட்டியலில் முக்கிய இடம்பிடித்திருக்கும் நடிகை ரோஜா, தனி பிரிவினைக்குப் பிந்தைய ஆந்திர மாநில அரசியலில் அதிரடி அரசியல்வாதியாகக் கவனம் பெற்றவர். ஆந்திர முதல்வராக 2019-ல் ஜெகன் மோகன் ரெட்டி பதவியேற்றபோது, அவரின் அமைச்சரவையில் ரோஜா இடம்பெறுவார் எனப் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அப்போது ஏமாற்றமே கிடைத்த நிலையில், மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, ரோஜாவுக்கு அமைச்சர் பொறுப்பு கிடைத்திருக்கிறது.

அமைச்சர் ரோஜா
அமைச்சர் ரோஜா

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஜெகன் மோகன் ரெட்டியின் அமைச்சரவை நேற்று மாற்றியமைப்பட்டது. அதில், ரோஜா உள்ளிட்ட 13 புதுமுகங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. நகரி தொகுதி எம்.எல்.ஏ-வான ரோஜாவுக்கு, சுற்றுலா, கலை மற்றும் விளையாட்டு மேம்பாடு ஆகிய துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. பதவிப் பிரமாணத்துக்குப் பிறகு, 20 ஆண்டுக்கால அரசியல் வாழ்வில் பெருமித உயரத்தை எட்டிய மகிழ்ச்சி, ரோஜாவின் முகத்தில் எக்கச்சக்கமாகப் பிரதிபலித்தது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

சினிமா பிரபலத்தன்மை, அரசியல் பயணத்துக்கு விசிட்டிங் கார்டாக மட்டுமே அமையுமே தவிர, அந்த அடையாளத்தாலேயே அரசியலிலும் கோலோச்ச முடியாது. இதை அனுபவத்தில் உணர்ந்த ரோஜாவுக்கு, சினிமாவைப்போல அரசியல் பயணம் அவ்வளவு சுலபமானதாகவும் ஏறுமுகமாகவும் அமையவில்லை. தொடர் தோல்விகள் மற்றும் காழ்ப்புணர்ச்சிகளைத் தாண்டி, அரசியல் சதுரங்க விளையாட்டில் ரோஜா தன்னை நிலைநிறுத்திக்கொண்டது எப்படி?

நடிகை ரோஜா
நடிகை ரோஜா

1990-களில் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் ரோஜா முன்னணி நடிகையாக இருந்தார். அந்தப் புகழ் வெளிச்சத்தால், 1999-ல் ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியின் நட்சத்திரப் பேச்சாளராக, அரசியல் என்ட்ரியைத் தொடங்கினார். அப்போது நக்சலைட்டுகளின் ஆதிக்கம் அதிகமாக இருந்த சில பகுதிகளில், பாதுகாப்பு அச்சுறுத்தல்களை மீறி மாதக்கணக்கில் துணிச்சலாக ரோஜா மேற்கொண்ட சுற்றுப்பயணம், ஆந்திரா முழுவதும் பேசுபொருளானது. ரோஜாவின் அரசியல் இன்ஸ்பிரேஷன் ஜெயலலிதா. அ.தி.மு.க-வில் இணைந்து பணியாற்றுமாறு ஜெயலலிதா அழைப்பு விடுத்தும், தன் பூர்வீகமான ஆந்திரா அரசியலையே ரோஜா தேர்ந்தெடுத்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சந்திரபாபு நாயுடுவின் அழைப்பை ஏற்று, அவரின் தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்தார். அந்தக் கட்சியில் 10 ஆண்டுகள் பங்களிப்பு செய்த ரோஜா, உட்கட்சிப் பிரச்னையால் சட்டமன்றத் தேர்தலில் தான் போட்டியிட்ட முதல் இரண்டு முறையும் தோல்வியடைந்தார். 'அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை; நிரந்தர எதிரியும் இல்லை' என்பது அடிப்படை அரிச்சுவடி. தன்னை அரசியலில் அறிமுகப்படுத்திய சந்திரபாபு நாயுடுவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளாலும், அந்தக் கட்சியில் தனக்கு முக்கியத்துவம் கிடைக்காததாலும் அவரின் கட்சியிலிருந்து விலகினார். பெரும் அதிருப்தியுடன் அரசியலிலிருந்தே விலக முடிவெடுத்து ரோஜா பெரும் குழப்பத்திலிருந்த நேரம் அது.

Roja with Jagan Mohan Reddy
Roja with Jagan Mohan Reddy

தந்தையின் (ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி) மறைவுக்குப் பிறகு, 2009-ல் புதுக்கட்சி தொடங்கி அதிர்வலைகளை ஏற்படுத்தினார் ஜெகன் மோகன் ரெட்டி. அவரின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியில் இணைந்த ரோஜாவுக்கு, அதன்பிறகு, சுக்கிரனின் பார்வையால் அரசியலிலும் பிரபலமானார். 2014-ல் நகரித் தொகுதியின் எம்.எல்.ஏ-வாக வென்று, மக்கள் பிரதிநிதியாக முதல் வெற்றியை உணர்ச்சிப்பெருக்குடன் தொடங்கினார். 2019 தேர்தலில் மீண்டும் நகரி தொகுதியில் வென்ற ரோஜா, சொந்தத் தொகுதியிலேயே வீடு கட்டிக் குடியேறினார். சமீபத்தில் நகரி வீட்டில் ரோஜாவைச் சந்தித்துப் பேசியபோது, அரசியலில் 'பவுன்ஸ் பேக்' அடித்த கதையை உற்சாகத்துடன் பகிர்ந்தார்.

"சினிமாவிலிருந்து அரசியலுக்கு வந்தவங்க, ஒருமுறை தோல்வியைச் சந்திச்சாலே, 'இது நமக்குச் சரிப்பட்டு வராது'னு இந்த ஃபீல்டிலிருந்தே விலகிடுவாங்க. அந்த மாதிரி நானும் முடிவெடுப்பேன்னு நினைச்சுதான், சந்திரபாயு நாயுடுவின் கட்சியில நான் இருந்தப்போ, என்னைத் திட்டமிட்டு தோற்கடிக்க வெச்சாங்க. சுதந்திரமா வேலை செய்ய விடாம, சந்திரபாபு நாயுடு கட்சிக்காரங்க ரொம்பவே என்னைச் சீண்டினாங்க. சினிமாவுல சக்சஸ் மட்டுமே அதிகமா பார்த்திருந்தேன். ஆனா, அரசியல்ல அதுக்கு நேரெதிரா நீண்ட காலத்துக்கு தோல்வியை மட்டுமே பார்த்தேன். 'சினிமா நடிகையால வெயில்ல நின்னு பிரசாரம் செய்ய முடியாது. மெனக்கெட்டு வேலை செய்ய முடியாது'னு பலரும் பேசினதையெல்லம் பொய்யாக்கினேன்.

Actress Roja
Actress Roja

மனதளவுல என்னை முடக்கணும்னு, என் கேரக்டரையும் நடத்தையையும் தப்பா பேசி காயப்படுத்தினாங்க. நான் பெண்ணா இருக்கிறதாலேயே அரசியல்ல என்னை வளரவிடக் கூடாதுனு எனக்கு எதிரா நிறைய சூழ்ச்சிகள் செஞ்சாங்க. எந்த விஷயத்துல என்னைச் சீண்டினாலும், அதுல வெற்றியடைஞ்சே ஆகணும்னு எனக்குள்ள வெறி வரும். சினிமாவுக்கு நான் வந்த புதுசுல, 'உனக்கு டான்ஸ் தெரியலை; உன் வாய்ஸ் சரியில்லை'னு நிறைய புறக்கணிப்புகளைப் பார்த்தேன். அதையெல்லாம் சமாளிச்சு தமிழ் மற்றும் தெலுங்கு சூப்பர் ஸ்டார்கள் பலருடனும் ஜோடியா நடிச்சேன்.

சினிமாவுக்கு வர்றதுக்கு முன்னாடி எனக்குச் சுத்தமா டான்ஸ் தெரியாது. ஆனா, 'என்கூட நடிச்ச ஹீரோயின்ஸ்லயே பெஸ்ட் டான்ஸர் நீங்கதான்'னு பிரபுதேவாவே பாராட்டுற அளவுக்கு என் திறமையை வளர்த்துகிட்டேன். அந்த மாதிரி, ஜெகன் அண்ணாவோட கட்சியில சேர்ந்து அரசியல்ல ரீ-என்ட்ரியை ஆரம்பிக்கிறப்போவே, இனி என்ன நடந்தாலும் அரசியல்லயும் வெற்றியைப் பார்க்காம பின்வாங்கக் கூடாதுனு முடிவெடுத்தேன். கடந்த முறை நாங்க எதிர்க்கட்சி வரிசையில இருந்தோம். அப்போ என் நியாயமான கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாத சந்திரபாபு நாயுடு, என்னை ஒரு வருஷம் சஸ்பெண்டு செஞ்சார். அதுக்கெல்லாம் நான் அசரவேயில்லை.

ஜெகன் மோகன் ரெட்டியுடன் ரோஜா
ஜெகன் மோகன் ரெட்டியுடன் ரோஜா

சட்டமன்றத்துல என்னைப் பார்க்கும்போதெல்லாம், 'ஒரு நல்ல ஆள விட்டுட்டோமே'னு சந்திரபாபு நாயுடு நினைக்கிற மாதிரி வேலை செய்யணும்னு முடிவெடுத்தேன். அதையும் இப்போ சாத்தியமாக்கியிருக்கேன். அரசியல்ல இப்பவும் எனக்கெதிரா குடைச்சல் கொடுக்கிறாங்க. ஆனா, என்னை அடக்க நினைச்சா, 'பவுன்ஸ் பேக்' ஆகி இன்னும் வேகமா எதிர்வினையாற்றுவேன்" என்று சரவெடியாக வெடித்தார்.

ஆரம்பகாலத்தில் உரக்கப் பேசாத ரோஜா, அரசியல்வாதியாக மைக் பிடித்தாலே ஸ்பீக்கர் அதிரும் வகையில் பேசுவது அவரே எதிர்பார்க்காத ஆச்சர்யம். "சினிமாவுல வேலை செஞ்சப்போ நான் ரொம்பவே ஜாலியா, சாஃப்ட்டாதான் பேசுவேன். அரசியல் களம், நம்மோட இன்னொரு முகத்தை வெளிப்படுத்த வைக்கும். எதிர்க்கட்சிகளுக்குத் தக்க பதிலடி கொடுக்க, அதிரடியா பேச வேண்டியதா இருக்கு. 'நாங்க பார்த்த ரோஜாவா இது...?'னு ரம்யா கிருஷ்ணன் உட்பட என் சினிமா ஃபிரெண்ட்ஸ் பலரும் தமாஷா சொல்லுவாங்க. 'நீயா ரோஜா இப்படியெல்லாம் பேசுறே?'னு அப்பப்போ நானே ஆச்சர்யப்படுவேன்" என்று கலகலத்த ரோஜா, ஆந்திர மாநில தொழிற்சாலைகள் உள்கட்டமைப்பு வாரியத் தலைவராக இரண்டு ஆண்டுகள் பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.

குடும்பத்தினருடன் ரோஜா
குடும்பத்தினருடன் ரோஜா

ரோஜாவுடனான சந்திப்பு முடிந்து விடைபெற்றபோது, "மக்களின் எதிர்பார்ப்புப்படி நல்ல தகவல் சீக்கிரமே வரும்" என்று தனக்கு அமைச்சர் பொறுப்பு கிடைக்க வாய்ப்புள்ளது குறித்து பீடிகையுடன் கூறினார். அது நிஜமாகிவிட்டது. அரசியல் வருகைக்குப் பிறகு, சினிமாவில் நடிப்பதைக் குறைத்துக்கொண்ட ரோஜா, "அமைச்சர் பொறுப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து வேலை செய்யவிருப்பதால, இனி சினிமா மற்றும் சின்னத்திரையில நான் வேலை செய்ய மாட்டேன்" என்று கூறியிருக்கிறார்.

நடிகையாகவும், அரசியல்வாதியாகவும் ஸ்கோர் செய்த ரோஜா, அமைச்சராகவும் ஸ்கோர் செய்வாரா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism