Published:Updated:

மு.க அழகிரி ஃபார்முலா... முடிவுக்கு வந்த ஓ.பி.எஸ் மௌன யுத்தம்!

ஓ.பி.எஸ் - இ.பி.எஸ்
ஓ.பி.எஸ் - இ.பி.எஸ்

`கட்சியில் இணை ஒருங்கிணைப்பாளர் பதவி, முதல்வர் வேட்பாளர் பதவி இரண்டையும் தன்வசம் வைத்திருக்கும் எடப்பாடி பழனிசாமி, இரண்டு குதிரைகளில் எத்தனை நாள்கள் சவாரி செய்ய முடியும்?' என்று ஒ.பி.எஸ். ஆதரவாளர்கள் கிண்டலாகப் பேசுகிறார்கள்.

சென்னை அடையாறிலுள்ள துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வீட்டில் டீ பார்ட்டிக்கு இன்று மாலை வரப்போகிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. அ.தி.மு.க-வில் பெரிய மாற்றங்கள் நடந்து முடிந்துவிட்டன. `இதில் யார் ஜெயித்தது, யார் விட்டுக்கொடுத்தது?’ என்ற காரசார விவாதங்கள் தொடங்கிவிட்டன. தேர்தல் செலவுகளை முதல்வர் பழனிசாமி தலையில் கட்டிவிட்டார் ஓ.பி.எஸ் என்கிறார்கள். `சசிகலா ரிலீஸ் ஆகி வரும்போது, கட்சியின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காணாமல்போகும். பொதுச்செயலாளர் பதவியில் சசிகலா அமரப்போகிறார். அவர் அமர்ந்தால், அவர் சொல்கிறவர்தான் முதல்வர் பதவியில் இருக்க முடியும். இப்போதைக்கு ஒ.பி.எஸ்-ன் ராஜதந்திரம் ஜெயித்துவிட்டது' என்றும் அ.தி.மு.க-வினர் பேசிக்கொள்கிறார்கள்.

அ.தி.மு.க - ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி
அ.தி.மு.க - ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி

`அடுத்த முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி, 11 பேர் வழிகாட்டுதல்குழு அமைப்பு' ஆகியவற்றை அ.தி.மு.க இன்று அறிவித்திருக்கிறது. குழுவில் 6-க்கு 5 என்கிற விகிதத்தில் ஓ.பி.எஸ்-ஸுக்கு பெர்த் கிடைத்திருப்பதைக் கொண்டாடுகிறார்கள், அவரின் ஆதரவாளர்கள். எடப்பாடியைப் பொறுத்தவரை, `வழிகாட்டுதல்குழு வேண்டாம்' என்ற முடிவிலிருந்து ஒரு ஸ்டெப் இறங்கி வந்திருக்கிறார். `கட்சியில் இணை ஒருங்கிணைப்பாளர் பதவி, முதல்வர் வேட்பாளர் பதவி இரண்டையும் தன்வசம் வைத்திருக்கும் எடப்பாடி பழனிசாமி, இரண்டு குதிரைகளில் எத்தனை நாள்கள் சவாரி செய்ய முடியும்?' என்று ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் கிண்டலாகப் பேசுகிறார்கள். தற்போது அமைக்கப்பட்டிருக்கும் வழிகாட்டுதல்குழுவில் இடம்பெறாத முக்கியப் பிரமுகர்களுக்கு அடுத்த சில நாள்களில் வேறு வகையில் வாய்ப்பு கொடுக்கவிருக்கிறார்கள். தொகுதிப் பங்கீடு பற்றிக் கூட்டணிக் கட்சியினரிடம் பேசும் குழு, அ.தி.மு.க-வுக்கான தேர்தல் பணிக்குழு ஆகிய இரண்டு குழுக்களில் பலர் நியமிக்கப்படவிருக்கிறார்கள்.

`ஓ.கே சொன்ன பன்னீர்... இறங்கிவந்த பழனிசாமி' - முடிவுக்கு வருகிறது அ.தி.மு.க பஞ்சாயத்து!

சசிகலா முதல்வராக முயன்றபோது, பன்னீரை ராஜினாமா செய்ய வேண்டாம் என பி.ஜே.பி மேலிடம் முதற்கொண்டு பலரும் சொன்னார்கள். ஆனால், அதைக் கேட்கவில்லை ஓ.பி.எஸ். பதவியை ராஜினாமா செய்தார். அதன் பிறகு, கூவத்தூரில் தனக்கு எம்.எல்.ஏ-க்கள் பலம் அதிகமாக இருப்பதாக டெல்லி பி.ஜே.பி மேலிடத்திடம் பொய்யான தகவல்களைச் சொல்லிக் குழப்பிவிட்டார் ஓ.பி.எஸ். பி.ஜே.பி மேலிடத் தலைவர்கள் அன்றைய காலகட்டத்தில் ஓ.பி.எஸ் மீது கொஞ்சம் கடுப்பில் இருந்தனர். சசிகலா சிறைக்குப் போன பிறகு, முதல்வர் இ.பி.எஸ்., கட்சியின் தலைமைப் பதவியான ஒருங்கிணைப்பாளர் பொறுப்பில் ஓ.பி.எஸ் மட்டுமே இருப்பார் என்றுதான் அவருடைய ஆதரவாளர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால், `இணை ஒருங்கிணைப்பாளர்’ என்ற பதவியை எடப்பாடி பழனிசாமிக்கு விட்டுக்கொடுத்துவிட்டார். இதெல்லாம் கடந்த காலத்தில் நடந்தவை என்றாலும், கடந்த சில நாள்களில், முக்குலத்தோர் சாதி லாபியை முடுக்கிவிட்டார் ஓ.பி.எஸ்.

சசிகலா
சசிகலா

தென்மாவட்டங்களில் கணிசமாக இருக்கும் தனது சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு, எடப்பாடி தரப்பினர் அரசியல்ரீதியாக நெருக்கடி கொடுத்ததாகக் குற்றம்சாட்டினார் ஓ.பி.எஸ். ஒவ்வொரு மாவட்டத்திலும் முக்குலத்தோர் பதவிவகிக்கும் கட்சிப் பதவிகளுக்குப் போட்டியாக, இன்னோர் அணியை எடப்பாடி தரப்பினர் கொம்புசீவிவிடுதாக லிஸ்ட் போட்டனர் ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள். கொங்கு அமைச்சர்கள் தென்மாவட்ட பாலிட்டிக்ஸில் மூக்கை நுழைப்பதை அறவே வெறுத்தார் ஓ.பி.எஸ். அவரின் மகன் ரவீந்திரநாத்துக்கு மத்திய அமைச்சர் பதவி தர விடாதது, முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் பதவி பறிப்புக்கு பிறகு, மீண்டும் தருவதாகச் சொன்ன அதே அமைச்சர் பதவியை இதுவரை தராதது என்று பல்வேறு குற்றச்சாட்டுகளை ஓ.பி.எஸ் தரப்பினர் எழுப்பினர். `ஆட்சியில் எந்த உத்தரவையும் எடப்பாடியால் போட முடிகிறது. அதுவே, கட்சியில் ஏதாவது உத்தரவு என்றால், என்னால் சுதந்திரமாக எடுக்க முடியவில்லை. அதில், எடப்பாடியும் கையெழுத்து போட வேண்டியிருக்கிறது. இதுதான் எனது வருத்தம்' என்று நெருக்கமானவர்களிடம் சொல்லிவந்தார் ஓ.பி.எஸ். `அதிகாரம் இல்லாத பதவி எதற்கு? பேசாமல், துணை முதல்வர் பதவியை முதலில் நான் ராஜினமா செய்துவிடவும் தயார்' என்கிற மூடில் இருந்தார் ஓ.பி.எஸ் என்கிறார்கள். அதையடுத்துதான், அ.தி.மு.க-வில் சமரசப் பேச்சுவார்த்தைகள் தொடங்கின.

`செயற்குழுக் கூட்டம் முதல் முதல்வர் வேட்பாளர் அறிவிப்பு வரை..! - அ.தி.மு.க-வில் என்ன நடந்தது?

கடந்த இரண்டு நாள்களாக, இ.பி.எஸ்., ஓ.பி.எஸ் தரப்பில் மாறி மாறிப் பஞ்சாயத்துக்கள் நடந்தன. அக்டோபர் 6-ம் தேதியன்று திடீரென ஓ.பி.எஸ் தரப்பினர் புது கோரிக்கை ஒன்றை முன்வைத்தனர். அதன்படி, `முதல்வர் வேட்பாளர் இ.பி.எஸ்... ஓ.கே. ஆனால், கட்சியின் தலைமைப் பதவியில் ஒருவர்தான் இருக்க வேண்டும். முடிவெடுப்பது, கையெழுத்து போடுவது இரண்டிலும் ஓ.பி.எஸ்தான் இருக்க வேண்டும். இதற்கு சம்மதிக்க வேண்டும்.

தற்போது இணை ஒருங்கிணைப்பாளர் பதவியிலிருக்கும் இ.பி.எஸ்-ஸை துணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு பதவி இறக்கம் செய்ய வேண்டும்’ இதுதான் ஒ.பி.எஸ் தரப்பினரின் புதிய கோரிக்கை. ஏற்கெனவே கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் ஆகிய இருவரும் இருக்கிறார்கள். அவர்களுடன் ஒருவராக இ.பி.எஸ்-ஸை துணை ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவராக நியமிக்க எண்ணினார் ஓ.பி.எஸ்.

அழகிரி
அழகிரி

இது தொடர்பாக, இ.பி.எஸ்-ஸிடம் கட்சியின் சீனியர்கள் சொன்னபோது, அவர் மறுத்துவிட்டார். `எதை வேண்டுமானாலும் விட்டுக்கொடுப்பேன். இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை விட்டுக்கொடுக்கவே மாட்டேன். அதைத் தெளிவாக ஓ.பி.எஸ்-ஸிடம் சொல்லிவிடுங்கள்' என்று தகவல் பாஸ் செய்தார். இதைக் கேட்ட ஓ.பி.எஸ் முதலில் அப்செட் ஆனார். அப்போது, இ.பி.எஸ் போன் மூலம் ஓ.பி.எஸ்-ஸிடம் பேசியதாகச் சொல்கிறார்கள். எனன நடந்ததோ, ஓ.பி.எஸ் தலையாட்டிவிட்டாராம்.

தென்மாவட்டத்தை சேர்ந்த ஓ.பி.எஸ்-ஸின் தீவிர ஆதரவாளர் ஒருவர் உற்சாகமாக நம்மிடம் பேசினார்.``தி.மு.க-வில் மு.க.அழகிரியின் அரசியல் தந்திரத்தையும், எங்கள் கட்சியில் ஓ.பி.எஸ்-ஸையும் இணைத்து எடப்பாடி பழனிசாமி ஆதரவு பிரமுகர்கள் பேசிவருகிறார்கள். மு.க.அழகிரி திடீரென போர்க்குரல் கொடுப்பார். ஸ்டாலினுக்கு எதிராக சொடக்குப்போட்டு சவால்விடுவார். `கட்சியில் எனக்கும் பங்கு உண்டு’ என்பார். `நானும் கருணாநிதி மகன்தான்’ என்பார். கட்சி டிரஸ்ட்டில் தனது மகனை நியமிக்க வேண்டும் என்பார். பேச்சு பேச்சாக இருக்கும். திடீரென காணமல் போய்விடுவார். அவர் பேசியது, `நடத்திக் காட்டுவேன்’ என்று சவால்விட்டது அத்தோடு அடங்கிப்போய்விடும். அ.தி.மு.க-வில் மு.க.அழகிரி பாணியில் ஓ.பி.எஸ். திடீரென போர்க்கொடி தூக்குவார். சபதம் போடுவார். மௌன விரதம் இருப்பார். க்ளைமாக்ஸில் அடங்கிப் போய்விடுவதையே வழக்கமாகவைத்திருக்கிறார். வழிகாட்டுதல்குழுவில் மெஜாரிட்டியாக இ.பி.எஸ் ஆட்கள்தான் இருக்கிறார்கள் ஓ.பி.எஸ் ஆட்களை எப்போது, எப்படி கவர் செய்ய வேண்டும் என்கிற யுக்தியை நன்றாகத் தெரிந்துவைத்திருப்பவர் இ.பி.எஸ். ஆக, இ.பி.எஸ் தற்காலிகமாக ஜெயித்துவிட்டார்; ஓ.பி.எஸ் மறுபடியும் யூ டர்ன் அடித்துவிட்டார் என்றுதான் நினைக்கிறோம்'' என்றார் அவர்.

அடுத்த கட்டுரைக்கு