Published:Updated:

`நான் என்ன புது மாப்பிள்ளையா?' - இரான் குங்குமப்பூ பரிசைக் கலாய்த்த ஓ.பி.எஸ்

இரானுக்குச் சென்றுவிட்டு சென்னை திரும்பிய அ.தி.மு.க பிரமுகர் ஜெ.எம்.பஷீர், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு குங்குமப்பூவும் ட்ரை ப்ரூட்ஸும் கொடுத்துள்ளார்.

துணை முதல்வருடன் ஜெ.எம்.பஷீர்
துணை முதல்வருடன் ஜெ.எம்.பஷீர்

அ.தி.மு.க பிரமுகர் ஜெ.எம்.பஷீர் சமீபத்தில் இரான் நாட்டுக்குச் சென்றார். அவர் சென்னை திரும்பியதும் ஷேக்குகள் அணியும் உடையுடன் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தைச் சந்தித்தார். அதைக் கவனித்த துணை முதல்வர், இரானுக்குச் சென்றதால் கெட்அப்பை மாற்றிவிட்டீர்களே' என்று கேட்டுள்ளார். அதற்கு, ஜெ.எம்.பஷீர், `சென்னையில் ஷியா மற்றும் சன்னி பிரிவு முஸ்லீம்களின் யூனிட்டி ஆஃப் மூவ்மென்ட் நடத்திய மாநாட்டில் நீங்கள் பங்கேற்றது குறித்து இரான் நாட்டில் உள்ளவர்கள் பெருமையாகக் குறிப்பிட்டார்கள். தமிழகத்தில் முஸ்லீம்கள் மகிழ்ச்சியாகவும் ஒற்றுமையாகவும் இருப்பதற்கு இந்த அரசுதான் காரணம் எனக் கூறி நன்றி தெரிவித்தார்கள்" என்றார்.

இரான் அமைச்சருடன் ஜெ.எம்.பஷீர்
இரான் அமைச்சருடன் ஜெ.எம்.பஷீர்

இதன்பிறகு, ஜெ.எம்.பஷீர் தன் கையிலிருந்த பார்சலை ஓ.பன்னீர்செல்வத்திடம் கொடுத்தார். அதில் இரான் நாட்டின் குங்குமப்பூவும் ட்ரை ஃப்ரூட்ஸுகளும் இருந்தன. அதைப் பார்த்த ஓ.பன்னீர்செல்வம், `நான் என்ன புதுமாப்பிள்ளையா?' என்று கேட்டுள்ளார். அதற்கு ஜெ.எம்.பஷீர், `நீங்கள் புதுமாப்பிள்ளை இல்லை. தங்கத் தமிழ்மகன்' என்று கூறியுள்ளார். அதைக்கேட்டு அனைவரும் சிரித்துள்ளனர்.

`சைலன்ட் எடப்பாடி; கொந்தளித்த ஓ.பி.எஸ் டீம்!' - பொதுக்குழுவில் அனல்பறந்த சசிகலா விவகாரம்

ஜெ.எம்.பஷீரிடம் பேசினோம். ``இரான் நாட்டின் துணைப் பிரதமர் மாசூத் மிர்சாஹி உட்பட சில அமைச்சர்கள், தமிழகத்தில் தொழில் செய்வது தொடர்பாக ஆலோசனை நடத்துவதற்காக எனக்கு அழைப்பு விடுத்தனர். இதையடுத்து, யூனிட்டி மூவ்மென்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் முஸ்ரத் அலிகானும் நானும் இரான் நாட்டுக்குச் சென்றோம்.

ஆலோசனை கூட்டத்தில்
ஆலோசனை கூட்டத்தில்

அங்கு இந்தியாவில் தயாரிக்கப்படும் வாகன டயர்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. இந்தியாவிலிருந்து டயரை ஏற்றுமதி செய்தால் அந்த நாட்டிலிருந்து சிமென்ட்டைக் குறைந்தவிலைக்கு இறக்குமதி செய்வது தொடர்பாக ஆலோசனை நடந்தது. இந்தத் தகவலைத் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திடம் கூறினேன்.

விரைவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியையும் சந்திக்க உள்ளேன். இரான் நாட்டின் குங்குமப்பூ பிரசித்திபெற்றது. அதனால்தான் ஓ.பன்னீர்செல்வத்துக்கு குங்குமப்பூவும் ட்ரை ஃப்ரூட்ஸ்களையும் கொடுத்தேன். முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் குங்குமப்பூ, ட்ரை ஃப்ரூட்ஸ் கொடுக்கவுள்ளேன். இரான் நாட்டிலிருந்து தார் தயாரிக்கும் மூலப்பொருள்களைத் தமிழகத்துக்குக் கொண்டுவர முயற்சி செய்துள்ளேன். அவ்வாறு தார் தயாரிக்கும் பிட்மின் என்ற மூலப்பொருள் தமிழகத்துக்குக் கிடைத்தால் இங்கு தரமான தார்ச்சாலையை அமைக்கலாம்" என்றார்.