மயிலாடுதுறையில் எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க-வின் நிரந்தரப் பொதுச்செயலாளராகவேண்டி அந்தக் கட்சியினர் குரு பூர்ணிமா பௌர்ணமி சிறப்பு யாக பூஜை நடத்தினர்.

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே காரைமேட்டில் ஒளிலாயம் சித்தர் பீடம் அமைந்திருக்கிறது. இங்கு 18 சித்தர்கள் தனித்தனி சந்நிதிகளில் அருள்பாலிக்கின்றனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
நேற்று பௌர்ணமியை முன்னிட்டு குரு பூர்ணிமா சிறப்பு பௌர்ணமி யாகம் நடைபெற்றது. அப்போது, ``முன்னாள் முதல்வரும், அ.தி.மு.க இடைக்காலப் பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கட்சியின் நிரந்தரப் பொதுச்செயலாளராகப் பொறுப்பேற்க வேண்டும். அனைத்து வழக்குகளும் நீங்கி இரட்டை இலையும், கட்சி அலுவலகம் என எந்தச் சிக்கலும் இல்லாமல் தொண்டர்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும். தமிழ்நாட்டில் அ.தி.மு.க ஆட்சி மலர வேண்டும்" என அ.தி.மு.க-வினர் சிறப்பு யாக பூஜை நடத்தினர்.

முன்னதாக சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனை வழிபாடு செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து 108 வேதிகை, மூலிகைப் பொருள்கள் கொண்டு சிறப்பு பெளர்ணமி யாகம் நடத்தப்பட்டு, பூர்ணாஹுதி, மகா தீபாராதனை காட்டப்பட்டது.
இந்த யாகத்துக்கான ஏற்பாடுகளை மயிலாடுதுறை மாவட்ட அ.தி.மு.க முன்னாள் தகவல் தொழில்நுட்பப் பிரிவினர் செய்திருந்தனர்.