Published:Updated:

மதுரை: `விஜயகாந்த் பிறந்தநாள் பேனரை அகற்றிய அ.தி.மு.க-வினர்?’ - கொதிக்கும் தே.மு.தி.க

தே.மு.தி.க-வினர்
தே.மு.தி.க-வினர் ( ஈ.ஜெ.நந்தகுமார் )

``அ.தி.மு.க கூட்டணியில் இணக்கமாக இருக்கிறோம். ஆனால், அ.தி.மு.க-வினர் எங்கள் தலைவர் பேனரை வைக்கவிடக் கூடாது என்ற மனநிலையில் இருக்கிறார்கள். இது எங்களுக்கு அதிர்ச்சியாக இருக்கிறது.’’

`யார் அடுத்த முதல்வர்?’ என்பதில் அ.தி.மு.க-வில் பிரச்னை ஏற்பட்டுள்ள நிலையில், கூட்டணிக் கட்சியோடும் அ.தி.மு.க-வினர் மோதல் போக்கைத் தொடங்கியுள்ளனர். விஜயகாந்த் பிறந்தநாள் விழாவுக்காக மதுரையில் வைக்கப்பட்ட பேனரை அ.தி.மு.க-வினர் அப்புறப்படுத்தியிருக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தே.மு.தி.க நிர்வாகிகள்
தே.மு.தி.க நிர்வாகிகள்
ஈ.ஜெ.நந்தகுமார்

விஜயகாந்த் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, மதுரை முழுவதும் தே.மு.தி.க-வினர் சுவர் விளம்பரம் செய்துவருகின்றனர். மதுரை மாநகர் தெற்கு மாவட்ட இளைஞர் அணி சார்பாக பழங்காநத்தம் ரவுண்டானா பகுதியில் பேனர் வைத்ததற்கு, அப்பகுதி அ.தி.மு.க-வினர், அந்த இடத்தில் தாங்கள் பேனர் வைக்க வேண்டும் என்று நேற்று எதிர்ப்பு தெரிவித்தனர். அதையும் மீறி பேனர் வைக்கப்பட்ட நிலையில், அது தொடர்பாக சுப்ரமணியபுரம் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தனர்

இதையடுத்து, தே.மு.தி.க மாநகர் தெற்கு மாவட்டச் செயலாளர் சிவமுத்துக்குமார், அவைத் தலைவர் ராமர், இளைஞரணி மாவட்டச் செயலாளர் மணிகண்டன் உள்ளிட்ட நிர்வாகிகள் வந்தனர். பேனர் வைக்கப்பட்ட இடத்தைப் பார்த்துவிட்டு தே.மு.தி.க நிர்வாகிகள் காவல்துறை அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

தே.மு.தி.க நிர்வாகிகள்
தே.மு.தி.க நிர்வாகிகள்
ஈ.ஜெ.நந்தகுமார்

ஆனால், பேச்சுவார்த்தை இரவு நடந்துகொண்டிருக்கும்போதே, பேனர் அகற்றப்பட்டது. அதனால், இன்று தே.மு.தி.க நிர்வாகிகள் சுப்பரமணியபுரம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். `அ.தி.மு.க-வினர் அங்கு பேனர் வைத்தால், அதை அகற்றுவதில்லை. நாங்கள் வைத்தால் உடனே அகற்றிவிடுவதா?’ என்று காவல்துறையினரிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு போலீஸார், `நாங்கள் அகற்றவில்லை. மாநகராட்சி அதிகாரிகள் அகற்றினார்கள். இனிமேல் யாருக்கும் இங்கு பேனர் வைக்க அனுமதி இல்லை’ என்று தெரிவித்தனர்.

தி.மு.க - தே.மு.தி.க கூட்டணி? `ஹாலிவுட் அட்ரஸ்' போலி நிறுவனங்களுடன் அரசு ஒப்பந்தம்?- கழுகார் அப்டேட்ஸ்!

அதன் பிறகு தே.மு.தி.க-வினர் சமாதானமாகினர். இதையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய தே.மு.தி.க மாவட்டச் செயலாளர் சிவமுத்துக்குமார், ``பொதுவாக அ.தி.மு.க-வினர் பேனர் வைப்பதை மாநகராட்சி, காவல்துறை அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை. இதே இடத்தில் அ.தி.மு.க-வினர் 10 நாள்கள் பேனர் வைத்திருண்ட்தனர். அப்போது மாநகராட்சி அதிகாரிகள் அகற்றவில்லை. ஆனால், நாங்கள் வைத்த பேனரை, ஒரே நாளில் அகற்றுகிறார்கள்.

அ.தி.மு.க கூட்டணியில் இணக்கமாக இருக்கிறோம். ஆனால், அ.தி.மு.க-வினர் எங்கள் தலைவர் பேனரை வைக்கவிடக் கூடாது என்ற மனநிலையில் உள்ளனர். இது எங்களுக்கு அதிர்ச்சியாக இருக்கிறது. இது அராஜகத்தன்மை. தே.மு.தி.க தொண்டனின் உணர்வைப் புண்படுத்தும் செயலை நிறுத்திக்கொள்ள வேண்டும்'' என்றார்.

தேமுதிக நிர்வாகிகள்
தேமுதிக நிர்வாகிகள்
ஈ.ஜெ.நந்தகுமார்

வரும் சட்டமன்றத் தேர்தலில், மதுரை மாவட்டத்தில் பல தொகுதிகளை தே.மு.தி.க குறிவைத்து வேலை செய்கிறது. இதைத் தடுக்கும்விதமாக அவர்களை பேனர் வைக்கவிடாமல் அ.தி.மு.க-வினர் தங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தியிருப்பதாகவும், இது கூட்டணியில் விரிசலை ஏற்படுத்தும் என்றும் சொல்கிறார்கள்.

அடுத்த கட்டுரைக்கு