Published:Updated:

`எடப்பாடியாரே மீண்டும் முதல்வராகணும்!'- ஆகம விதிகளை மீறி ஆண்டாள் கோயிலில் நடந்த யாகம்

யாகத்தில் ஜெயலலிதா உருவப்படம்
யாகத்தில் ஜெயலலிதா உருவப்படம்

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில், `எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்வராக வேண்டும்’ என அ.தி.மு.க இளைஞர் பாசறை மாநிலத் துணைப் பொதுச்செயலாளர் விஷ்ணு பிரபு, குடும்பத்துடன் யாகம் செய்தார். ஆகம விதிகளை மீறிய இந்த யாகம் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.

தமிழகத்தில் அனைத்துக் கட்சிகளுமே சட்டமன்றத் தேர்தலை எதிர்நோக்கி ஆலோசனைகள் நடத்திவருகின்றன. அ.தி.மு.க-வைப் பொறுத்தவரை முதல்வர் வேட்பாளர் யார் என்பதில் குழப்பமான சூழல் நிலவிவருகிறது. ஆனால், ஓ.பி.எஸ் மற்றும் இ.பி.எஸ் அணியைச் சேர்ந்த மாவட்டச் செயலாளர்கள், அமைச்சர்கள் குரல் எழுப்பிவருகின்றனர். இந்தநிலையில், விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் மீண்டும் எடப்பாடி பழனிசாமியே முதல்வராக வர வேண்டும் என அ.தி.மு.க இளைஞர் பாசறையின் மாநிலத் துணைப் பொதுச்செயலாளர் விஷ்ணுபிரபு, தன் குடும்பத்துடன் வந்து ரகசிய யாகம் நடத்திச் சென்றிருக்கிறார்.

மைதானத்தில் இறங்கிய ஹெலிகாப்டர்
மைதானத்தில் இறங்கிய ஹெலிகாப்டர்

கடந்த 10 நாள்களில் தேனி எம்.பி ரவீந்திரநாத் சுவாமி தரிசனம் செய்தார். அதன் பிறகு, அ.தி.மு.க செயற்குழுக் கூட்டத்துக்கு முன்னர் கடந்த 12-ம் தேதி துணை முதல்வர் ஓ.பி.எஸ் ஆண்டாள் கோயிலிலும், தன் குலதெய்வக் கோயிலான வனப்பேச்சி அம்மன் கோயிலிலும் சுவாமி தரிசனம் செய்தார்.

இந்தநிலையில், அ.தி.மு.க மாநில இளைஞர் பாசறை துணைப் பொதுச்செயலாளர் விஷ்ணுபிரபு, எடப்பாடி பழனிசாமியே மீண்டும் முதல்வராக வேண்டி ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயிலில் வளாகத்திலுள்ள சக்கரத்தாழ்வார் சந்நிதியில், எதிரிகளைச் சமாளித்து வெற்றியைத் தரக்கூடிய `சுதர்சன ஹோமம்’ என்றழைக்கப்படும் சிறப்பு யாகத்தைச் செய்தார். இதற்காக, கோவையிலிருந்து தனி ஹெலிகாப்டரில் ஸ்ரீவில்லிபுத்தூரிலுள்ள தனியார் பள்ளி மைதானத்தில் வந்திறங்கினார்.

கோயில் வளாகத்தில் விஷ்ணுபிரபு
கோயில் வளாகத்தில் விஷ்ணுபிரபு

பின்னர், அங்கிருந்து காரில் ஆண்டாள் கோயிலுக்குச் சென்றார். சுமார் இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக இந்த யாகம் நடைபெற்றது. யாகம் நடைபெறும் பகுதியில் பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. இந்த பூஜையில் விஷ்ணுபிரபு குடும்பத்துடன் கலந்துகொண்டார். ஆனால், இந்தச் சிறப்பு பூஜையில் ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் சந்திரபிரபா மற்றும் உள்ளூர் கட்சி நிர்வாகிகள் யாரும் கலந்துகொள்ளவில்லை.

`முதல்வர் வேட்பாளர் லிஸ்ட்...' - அ.தி.மு.க-வில் அடுத்த பஞ்சாயத்து ஆரம்பம்!

ஆகம விதிகளை மீறி மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உருவப்படத்தை கோயில் வளாகத்துக்குள் எடுத்து வந்தது மட்டுமன்றி, யாகத்திலும் வைத்து பூஜை செய்தது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. சுதர்சன ஹோமத்தின் பலன்கள் குறித்து சில அர்ச்சகர்களிடம் பேசினோம். ``மகாவிஷ்ணு, தன் வலது கையில் ஏந்தியிருக்கும் சுதர்சனச் சக்கரம் தீமையானவற்றை அழிக்கும் ஆற்றல் வாய்ந்த திருமாலின் ஆயுதமாகக் கருதப்படுகிறது.

ஹெலிகாப்டர்
ஹெலிகாப்டர்

சுதர்சனச் சக்கரத்தின் முழுமையான அருளைப் பெற செய்யப்படுவதே சுதர்சன ஹோமம். ஏகாதசி, துவாதசி, பெணர்ணமி நாள்கள், புதன் மற்றும் சனிக்கிழமைகளில் செய்தால் பலன்கள் வேகமாகவும் அதிகமாகவும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. எதிர்ப்புகள், எதிரிகளின் தொல்லை, தடைகள் நீக்கம் ஏற்பட்டு வேண்டுதலில் வெற்றி கிடைக்கும் என்பது நம்பிக்கை” என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு