திண்டுக்கல்: `என்ன கேட்டாலும் செஞ்சு கொடுப்பேன்!’ - பிரசாரத்தை ஆரம்பித்த அ.தி.மு.க வேட்பாளர்

அரசியல் கட்சிகளுக்குள் தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுகள் தொடர்ந்துகொண்டிருக்கும் சூழலில், அ.தி.மு.க-வின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலில் இடம்பெற்ற நிலக்கோட்டை தேன்மொழி, தனது பிரசாரத்தை இன்று தொடங்கினார்.
அ.தி.மு.க கூட்டணியின் தொகுதி உடன்பாடு குறித்து, கட்சிகளிடையே பலகட்டப் பேச்சுவார்த்தைகள் நடந்துவரும் சூழலில், கடந்த 5-ம் தேதி, அ.தி.மு.க-வின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதியில் ஓ.பன்னீர்செல்வமும், சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டமன்றத் தொகுதியில் பழனிசாமியும் என ஆறு பேர் அடங்கிய வேட்பாளர் பட்டியலில், திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை (தனி) சட்டமன்றத் தொகுதியின் வேட்பாளராக தேன்மொழி அறிவிக்கப்பட்டார்.

கடந்த சட்டமன்ற இடைத்தேர்தலில், நிலக்கோட்டை (தனி) சட்டமன்றத் தொகுதியில் அ.தி.மு.க சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர் தேன்மொழி. மேலும், முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதனின் ஆதரவுகொண்டவர்.

இந்தநிலையில், இன்று காலை தனது தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கினார் தேன்மொழி. முன்னதாக, வத்தலகுண்டு காளியம்மன் கோயிலுக்குச் சென்ற தேன்மொழி, அங்கே சிறப்பு பூஜையுடன் சாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து, அவரது ஆதரவாளர்களும், கட்சி நிர்வாகிகளும் அவருக்கு வாழ்த்துகள் தெரிவித்து, ஆளுயர மாலை அணிவித்தனர்.
கோயிலிலிருந்து பிரசாரத்தைத் தொடங்கிய தேன்மொழி, கோயில் வாசலில் பூ விற்பனை செய்துகொண்டிருந்த பெண் ஒருவரிடம், `அ.தி.மு.க-வுக்கு வாக்களியுங்கள்...’ என்றார். புன்னகையுடன் சரியெனச் சொன்ன அந்தப் பெண், மல்லிகைப்பூவை தேன்மொழியிடம் கொடுத்தார். அதைப் பெற்றுக்கொண்ட தேன்மொழி, `நீங்க என்ன கேட்டாலும் செஞ்சு கொடுப்பேன். இரட்டை இலைக்கு ஓட்டுப் போடுங்க...’ என்றார். தொடர்ந்து பிரசார வாகனத்தில் ஏறி, பிரசாரம் மேற்கொண்டார்.
தமிழக அரசியல் கட்சிகள், தொகுதிப் பங்கீடு, வேட்பாளர் இறுதி செய்தல் எனப் பரபரப்பாக இருக்கும் சூழலில், நிலக்கோட்டை (தனி) சட்டமன்த்ற தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் தேன்மொழி, தனது பிரசாரத்தை தொடங்கியிருப்பது, திண்டுக்கல் மாவட்ட அ.தி.மு.க-வினரை உற்சாகப்படுத்தியிருக்கிறது.