Published:Updated:

சிறப்பாக முதுகில் குத்துபவர் ஓ.பி.எஸ்... - சசிகலா அரசியலில் தீயசக்தி!

நத்தம் விசுவநாதன்
பிரீமியம் ஸ்டோரி
நத்தம் விசுவநாதன்

வைத்திலிங்கம் முதல்வராகும் கற்பனையில் இருக்கிறார்! - பொளேர் நத்தம் விசுவநாதன்

சிறப்பாக முதுகில் குத்துபவர் ஓ.பி.எஸ்... - சசிகலா அரசியலில் தீயசக்தி!

வைத்திலிங்கம் முதல்வராகும் கற்பனையில் இருக்கிறார்! - பொளேர் நத்தம் விசுவநாதன்

Published:Updated:
நத்தம் விசுவநாதன்
பிரீமியம் ஸ்டோரி
நத்தம் விசுவநாதன்

‘அ.தி.மு.க-வில் ஒற்றைத் தலைமைக்காகக் கூட்டப்பட்ட பொதுக்குழு முடிவுகள் செல்லும்’ என்ற தீர்ப்பால், மீண்டும் துணை பொதுச்செயலாளராகியிருக்கிறார் நத்தம் விசுவநாதன். சென்னை ஆர்.ஏ.புரத்திலுள்ள வீட்டில் தனது பேரக் குழந்தைகளுடன் விளையாடிக்கொண்டிருந்த அவரை, ஒரு மாலைப்பொழுதில் சந்தித்து சில கேள்விகளை முன்வைத்தேன்...

“தர்ம யுத்தத்தின்போது ஓ.பி.எஸ்-ஸுக்குப் பக்கபலமாக இருந்த நீங்கள், எடப்பாடியின் தீவிர ஆதரவாளர் ஆனதற்கு என்ன காரணம்?”

“சசிகலாவும், அவரது குடும்பமும் இல்லாத கட்சியும் ஆட்சியும் வேண்டும். அம்மா மரணம் குறித்து நீதி விசாரணை வேண்டும் என்ற ஓ.பி.எஸ்-ஸின் கொள்கைக்காகவே அவரது பக்கம் நின்றோம். ஆனால், பதவி கிடைத்ததும் சசிகலாவைக் கட்சியில் இணைக்க வேண்டுமென்று தீர்மானம் போட்டார். இப்படி ஒரு சந்தர்ப்பவாதியை எனது வாழ்நாளில் பார்த்ததே இல்லை. தலைமைக்கான பண்போ, தகுதியோ, திறமையோ ஒரு துளிகூட ஓ.பி.எஸ்-ஸுக்குக் கிடையாது. கட்சியை எடப்பாடி ஒருவரால்தான் காப்பாற்ற முடியும். அதனால் அவருக்குப் பக்கபலமாக இருக்கிறேன்.”

சிறப்பாக முதுகில் குத்துபவர் ஓ.பி.எஸ்... - சசிகலா அரசியலில் தீயசக்தி!

“தகுதி இல்லாமலா ஜெயலலிதா அவரை இரண்டு முறை முதல்வராக்கினார்?”

“என்ன தகுதி... கிடைத்த வாய்ப்பைக்கூட ஒழுங்காகப் பயன்படுத்திக்கொள்ளவில்லையே... டி.டி.வி.தினகரன் மூலம் எப்படியோ சந்தர்ப்பச் சூழ்நிலையால் ஓ.பி.எஸ் மேலே வந்தார். அவ்வளவுதான். அடிக்கடி தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு அந்தர்பல்டி அடிப்பவர் அவர். முரண்பாடுகளின் மொத்த உருவம். எடப்பாடி முதல்வரானதும், ‘எனக்கு இல்லை... எனக்கு இல்லை...’ என்று `திருவிளையாடல்’ படத்தில் நாகேஷ் புலம்புவதுபோலப் புலம்பிக் கொண்டேயிருந்தார். பதவி வெறியிலிருந்து அவரால் வெளியே வர முடியவில்லை.”

“இவையெல்லாம் அவருடன் இருக்கும்போது உங்களுக்குத் தெரியவில்லையா அல்லது தெரிந்தும் சுயநலமாக இருந்தீர்களா?”

“சசிகலாவின் இரட்டை வேடத்தை அம்மாவால் கடைசிவரை கண்டுபிடிக்க முடியவில்லை. அம்மா எங்களில் யாரையாவது பாராட்டி விட்டால்போதும், அவரை அத்தோடு ‘க்ளோஸ்’ செய்துவிடுவார் சசிகலா. அவ்வளவு ஏன்... தினகரனின் பேச்சை அம்மா கேட்கத் தொடங்கியதும், சொந்த அக்கா மகன் என்றுகூடப் பாராமல், அவரையும் ‘காலி’ செய்தார். அப்படியானால், எங்கள் நிலைமையெல்லாம் எப்படி இருந்திருக்கும், நினைத்துப் பாருங்கள்... சசிகலாப் பற்றிப் புத்தகமே வெளியிடலாம். அந்தப் பூனைக்கு மணிகட்ட யார் வருவார்கள் என்று சசிகலாவால் பாதிக்கப்பட்ட எங்களைப் போன்றவர்கள் நினைத்த நேரத்தில்தான், ஓ.பி.எஸ் துணிந்து நின்றார். அதனால் அவரை ஆதரித்தோம். ஆனால், அவருக்குப் பதவி கிடைத்ததும், உடன் இருந்தவர்கள் எக்கேடும் கெட்டுப்போகட்டும் என முதுகில் குத்திவிட்டார். `சிறப்பாக முதுகில் குத்துபவர்’ என்ற பட்டத்தையே ஓ.பி.எஸ்-ஸுக்குக் கொடுக்கலாம்.”

“இப்படி ஓ.பி.எஸ்-ஸைக் கடுமையாக விமர்சித்ததற்குப் பரிசாகத்தான் துணைப் பொதுச்செயலாளர் பதவி கிடைத்ததோ?”

“இல்லைவே இல்லை. அம்மா இருக்கும்போதே ஓ.பி.எஸ்-ஸுக்கு அடுத்த இடத்தில் நான்தான் இருந்தேன். அதன்படிதான், எனக்கு துணைப் பொதுச்செயலாளர் பதவியை எடப்பாடி வழங்கியிருக்கிறார். தற்போதைய அ.தி.மு.க தலைமையில் மூன்று சமூகங்களுக்குத்தான் அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டிருப்பதாகக் கிளம்பிவிடுகிறார்கள். அ.தி.மு.க-வில் சாதியும் கிடையாது, மதமும் கிடையாது. உழைப்பு, அனுபவத்தை மையப்படுத்தித்தான் பதவிகள் வழங்கப்படும்.”

“ஓ.பி.எஸ் குறித்து நீங்கள் சொல்வது உண்மையென்றால், வைத்திலிங்கம் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கு அது தெரியாமல் இருக்குமா?”

“ஓ.பி.எஸ் ஒரு மண்குதிரை. அவர்மீது ஏறி அரசியல் ஆற்றைக் கடக்க முடியாது. இப்போது அவர் பக்கம் சேரும் நிர்வாகிகளின் நிலைமையைப் பார்த்தால் பாவமாக இருக்கிறது. ஆனால், வைத்திலிங்கத்துக்கு அது தெரியும். சசிகலாவை எப்படியாவது கட்சியில் சேர்த்துவிட, ஓ.பி.எஸ்-ஸை வைத்து காய்நகர்த்துகிறார் வைத்திலிங்கம். சசிகலா தலைமையின்கீழ் கட்சி வந்து, ஆட்சியைக் கைப்பற்றினால், முதல்வர் ஆகிவிடலாம் என்று வைத்திலிங்கம் அதீத கற்பனையில் இருக்கிறார். எடப்பாடி இருக்கும் வரை சசிகலாவால் கட்சிக்குள் வர முடியாது.”

“வருங்காலத்தில் ஓ.பி.எஸ்-ஸுடன் இணைந்து செயல்பட வாய்ப்பு இருக்கிறதா?”

“ஓ.பி.எஸ்-ஸை எடப்பாடி ஒருக்காலமும் கட்சியில் சேர்த்துக்கொள்ள மாட்டார் என்பது என் நம்பிக்கை. மீண்டும் அவர் இங்கு வந்தால், ஏதாவது குழப்பத்தை ஏற்படுத்தி கட்சியை ஒன்றுமில்லாமல் ஆக்கிவிடுவார். அவரைத் தவிர்த்து, அவர் தரப்பிலிருந்து யார் வந்தாலும் இணைத்துக்கொள்வோம்.”

“எல்லா அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்களும், கட்சிப் பிரச்னைகளுக்குள்ளேயே கிடந்தால், தொகுதியை யார் கவனிப்பது?”

“ஓராண்டு தி.மு.க ஆட்சிமீது மக்கள் கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள். இந்த நேரத்தில், அந்தப் பிரச்னை குறித்துப் பேசவிடாமல் எங்களைத் தடுத்து தி.மு.க-வுக்கு மறைமுகமாகப் பல நன்மைகளை ஓ.பி.எஸ் செய்கிறார். இருந்த போதிலும், மக்கள் பிரச்னை குறித்துத் தொடர்ந்து பேசித்தான் வருகிறோம்.”

“இவர்களைப் பற்றி ஒன்லைனில் கமென்ட் சொல்லுங்கள்?”

சிறப்பாக முதுகில் குத்துபவர் ஓ.பி.எஸ்... - சசிகலா அரசியலில் தீயசக்தி!

பிரதமர் மோடி - இந்தியாவின் பெருமையை உலக அளவில் உயர்த்தியவர்.

சிறப்பாக முதுகில் குத்துபவர் ஓ.பி.எஸ்... - சசிகலா அரசியலில் தீயசக்தி!

முதல்வர் ஸ்டாலின் - பொய்யைப் பலமுறை சொன்னால் அது உண்மையாகிவிடும் என்ற ‘கோயபல்ஸ் தத்துவத்தின்’மீது நம்பிக்கைகொண்டவர்.

சிறப்பாக முதுகில் குத்துபவர் ஓ.பி.எஸ்... - சசிகலா அரசியலில் தீயசக்தி!

எடப்பாடி - அ.தி.மு.க-வுக்குக் கிடைத்த வரப்பிரசாதம்.

சிறப்பாக முதுகில் குத்துபவர் ஓ.பி.எஸ்... - சசிகலா அரசியலில் தீயசக்தி!

ஓ.பி.எஸ் - அரசியலிலிருந்து அப்புறப்படுத்த வேண்டிய சுயநல சக்தி.

சிறப்பாக முதுகில் குத்துபவர் ஓ.பி.எஸ்... - சசிகலா அரசியலில் தீயசக்தி!

சசிகலா - அரசியலில் இருக்கவே கூடாத தீயசக்தி.