Published:Updated:

`சைலன்ட் எடப்பாடி; கொந்தளித்த ஓ.பி.எஸ் டீம்!' - பொதுக்குழுவில் அனல்பறந்த சசிகலா விவகாரம்

முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களுக்கும் துணை முதல்வர் பன்னீர்செல்வத்துக்குமிடையிலான உரசலை நேற்று பொதுக்குழுவில் காணமுடிந்தது.

அ.தி.மு.க பொதுக்குழு
அ.தி.மு.க பொதுக்குழு

`` சசிகலாவை நீக்கும் எண்ணம் எடப்பாடிக்குக் கொஞ்சம்கூட இல்லை. எடப்பாடி ஆதரவாளர்கள், ஓ.பி.எஸ் ஆதரவாளர்களைக் கொஞ்சம்கூட மதிப்பதில்லை" என்ற குமுறலும் பொதுக்குழுவில் அரங்கேறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

அ.தி.மு.க பொதுக்குழு
அ.தி.மு.க பொதுக்குழு

நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அ.தி.மு.க-வின் வெற்றியைத் தொடர்ந்து மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பொதுக்குழுக் கூட்டம் சென்னை வானகரத்தில் நடந்து முடிந்திருக்கிறது. பொதுக்குழுவில் 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரின் காலத்தில் பொதுக்குழுக் கூட்டமென்றால் தொண்டர்கள் ஏக குஷியாகிவிடுவார்கள். காரணம் முக்கியமான தீர்மானங்கள், வாக்குறுதிகள் ஆகியவை நிச்சயம் பொதுக்குழுவில் இடம்பெறும். அவை தமிழகம் மட்டுமல்லாமல் இந்திய அளவிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளராகவும் முதல்வராகவும் இருந்த ஜெயலலிதா 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி மரணமடைந்தார். அதைத் தொடர்ந்து புதிய பொதுச் செயலாளராக சசிகலாவை நியமிக்க அதேமாதம் 29-ம் தேதி அ.தி.மு.க பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் கூடியது. பின்னர், அவரை நீக்குவதற்காகக் கடந்த 2017-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 12-ம் தேதி மீண்டும் பொதுக்குழு கூடியது. பின்னர், 2018-ம் ஆண்டு ஆகஸ்டு 23-ம் தேதி செயற்குழு மட்டும் கூடியது.

அ.தி.மு.க
அ.தி.மு.க

2 ஆண்டுகளாகப் பொதுக்குழுக் கூட்டம் நடைபெறாமல் இருந்த நிலையில், சென்னையை அடுத்த வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் நேற்று பொதுக்குழு கூட்டம் நடந்தது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களுக்கும் துணை முதல்வர் பன்னீர்செல்வத்துக்கும் இடையிலான உரசலை நேற்று பொதுக்குழுவில் காணமுடிந்தது.

பொதுக்குழுவில் பேசிய அமைச்சர் தங்கமணி, ``தமிழகம் அமைதிப் பூங்காவாக உள்ளது. தமிழக மக்களைக் காப்பாற்றும் தலைவராக உருவாகியுள்ளார் எடப்பாடி. இதில் எந்தவித மாற்றமுமில்லை. இடைத்தேர்தலில் தி.மு.க வசம் இருந்த தொகுதிகளைக் கைப்பற்றியுள்ளோம். அதே உழைப்பால் உள்ளாட்சித் தேர்தல், சட்டப்பேரவைத் தேர்தல் ஆகியவற்றில் தொண்டர்கள் உழைத்தால் கண்டிப்பாக 2021-ல் 234 தொகுதிகளிலும் மாற்றத்தை ஏற்படுத்த முடியும்" என்றார்.

பொதுக்குழு
பொதுக்குழு

மேலும், `` நீங்கள் யாருக்காகவும் எதற்காகவும் பயப்பட வேண்டாம். உங்கள் பின்னால் முதல்வர் இருக்கிறார். துணிந்து செயல்படுங்கள்" என்றார்.

தங்கமணியின் பேச்சைத் தொடர்ந்து, `` அப்போ ஓ.பி.எஸ் இந்தக் கட்சியில் இல்லையா. ஏன் அவர் பெயரை முழுமையாகச் சொல்ல மறுக்கிறீர்கள்" எனக் கொந்தளிக்கத் தொடங்கியுள்ளனர் சிலர். தங்கமணியைத் தொடர்ந்து ஓ.பி.எஸ் ஆதரவாளரான கே.பி.முனுசாமி பேசினார். அவரின் பேச்சிலும் முரண்பாடு தென்பட்டது.

`` தொண்டர்கள், அ.தி.மு.க தலைமையை மிகவும் கவனமாகக் கையாள வேண்டும். தலைமைக்கு உரிய மரியாதை கொடுத்துச் செயல்படுங்கள். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளரை உயர்த்திப் பேச வேண்டும். அப்போதுதான் எதிர்காலத்தில் கட்சியைக் கட்டுக்கோப்பாக வைத்திருக்க முடியும். சசிகலா வெளியில் வந்தால் சேர்த்துக்கொள்வோமா என்று உங்களுக்குள் சந்தேகம் எழலாம். அவர் வந்தாலும் கண்டிப்பாகச் சேர்க்க மாட்டோம்.

அ.தி.மு.க பொதுக்குழு
அ.தி.மு.க பொதுக்குழு

இந்தக் கட்சியை அழிக்க நினைத்தவர்களை எப்படிச் சேர்த்துக்கொள்வது. கண்டிப்பாக ஏற்றுக்கொள்ள மாட்டோம்" என்று தடலாடியாகப் பேசியதோடு, "கழக நிர்வாகிகள் தி.மு.க நிர்வாகிகளோடு தொழில் மற்றும் டெண்டர் விஷயங்களில் சமரசம் செய்துகொண்டு செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். இது தவறான செயல். இது தொண்டர்களுக்குச் செய்யும் துரோகம். எனவே, உங்களை மாற்றிக்கொள்ளுங்கள்" என்று சூசகமாகப் பேசியுள்ளார்.

பொதுக்குழுவில் கலந்துகொண்ட அ.தி.மு.க நிர்வாகிகளிடம் பேசினோம். "எடப்பாடி, ஓ.பி.எஸ் ஆகியோர் மட்டும்தான் இணைந்திருக்கிறார்கள். ஆனால், கட்சிக்குள் இருக்கும் முக்கிய நிர்வாகிகள் பலரும் மனதளவில் இணையாமல் இருக்கிறார்கள். இதே நிலையில்தான் தொண்டர்களும் இருக்கிறார்கள். அதேபோல் எடப்பாடி ஆதரவாளர்கள் தமிழகத்தில் அதிக அளவில் டெண்டர்களை எடுத்து வேலை செய்துகொண்டிருக்கிறார்கள். டெண்டர்களில் நடக்கும் குறைபாடுகள் வெளியில் தெரியாமல் இருப்பதற்காக எதிர்க்கட்சியான தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சியினருக்கும் பணிகளைப் பிரித்துக் கொடுக்கிறார்கள்.

ஓ.பி.எஸ்
ஓ.பி.எஸ்

இதனால், ஓ.பி.எஸ் ஆதரவாளர்களுக்குச் சரிவர டெண்டர் கொடுப்பதில்லை என்பதில்தான் பிரச்னையே ஆரம்பமாகிறது. தவிர, சசிகலாவை அ.தி.மு.க-வில் சேர்த்துக் கொள்ள மாட்டோம் என்று ஓ.பி.எஸ்ஸும் அவரின் ஆதரவாளர்களும் அடிக்கடி சொல்லி வருகிறார்கள். ஆனால், எடப்பாடிக்கு அந்தக் கருத்தில் கொஞ்சம்கூட விருப்பமில்லையாம். ஓ.பி.எஸ் மற்றும் பி.ஜே.பி-யினர் கொடுக்கும் அழுத்தத்தால் சிலவற்றை மேடையில் பேசுகிறார்.

கடந்த நான்கு மாதத்துக்கு முன்புகூட முதல்வர் எடப்பாடியின் மனைவி சிறையில் இருக்கும் சசிகலாவைச் சந்தித்து ஒரு மணிநேரம் பேசியதாகச் சொல்லப்படுகிறது. அதிலிருந்துதான் எடப்பாடி சைலன்டாகிவிட்டதாகவும் தகவல் வருகிறது. இந்த அசைன்மென்டை ஏற்பாடு செய்ததே அ.ம.மு.க-வைச் சேர்ந்த புகழேந்திதான் என்கிறார்கள். சசிகலா வெளியே வந்தால் இவர்கள் சேர்ந்துகொள்வார்கள். ஓ.பி.எஸ் அணியினரைத் தனித்து விட்டுவிடுவார்கள் என்ற பயத்தில்தான் எல்லா மேடைகளிலும் இதைப் பற்றியே பேசிவருகிறார்கள்" என்றதோடு முடித்துக் கொண்டனர்.