முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை தமிழக காவல்துறை கைது செய்துள்ளதை கண்டித்து அ.தி.மு.க சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்பாட்டம் நடந்தது.

மதுரை சிம்மக்கல் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசும்போது, ``நெருக்கடியான சூழலில்தான் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் இயக்கத்தை துவக்கினார்.
இந்த இயக்கத்தை அழித்து விடலாம் என கலைஞர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார். ஆனால், அது பகல் கனவாகத்தான் முடிந்தது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
அண்ணா வழியில் புரட்சித்தலைவர் கழகத்தை வழிநடத்தி வந்துள்ளார். பிற மாநில அரசியல் கட்சிகள் மூக்கில் விரல் வைக்கும் வகையில் அ.தி.மு.க செயல்பட்டு வருகிறது.

அப்படி வரலாறு பேசும் கட்சிதான் அ.தி.மு.க. ஒன்றரைக் கோடி தொண்டர்களை கொண்ட இயக்கம். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோர் பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை கொண்டு வந்தனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
அந்த வழியில் 7.5 சதகிதம் மருத்துவக்கல்வி இட ஒதுக்கீட்டை அரசுப்பள்ளி மாணவர்களுக்கு ஈ.பி.எஸ் கொண்டுவந்தார். அதேபோல, ஜல்லிக்கட்டு தடையை நீக்கி தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நாயகனாக திகழ்கிறார் ஓ.பி.எஸ்.
ஆனால், தி.மு.க ஆட்சியில் வெளுத்து வாங்கும் இந்த வெயிலைப் போல் மக்களை வாட்டி வதைக்கின்றனர். அ.தி.மு.க அரசு நெருக்கடியை சந்திப்பது புதிதல்ல. எதையும் சந்திப்போம். அடக்கு முறையால் வெற்றி பெறலாம் என நினைக்க வேண்டாம். தி.மு.க-வை 10 ஆண்டுகள் வனவாசம் அனுப்பியதை மறக்க வேண்டாம். 2016-ல் யாருடைய உதவியும் இல்லாமல் அ.தி.மு.க வெற்றி பெற்றதை மறக்க வேண்டாம்.
ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் தலைமையிலான ஆட்சி கவிழ்ந்து விடும் என கணக்கு போட்டார்கள், ஜோதிடம் சொன்னார்கள். ஆனால், ஆட்சியை வெற்றிகரமாக நிறைவு செய்தோம். கொரோனா காலகட்டத்தில் மக்களை காப்பாற்றியது அ.தி.மு.க ஆட்சிதான்.

ஆட்சிக்கு வெளியில் இருந்து வாய் பேசிய ஸ்டாலின் ஆட்சிக்கட்டிலில் அமர்ந்த பின்பு எதையும் செய்யவில்லை. அ.தி.மு.க அடிக்க அடிக்க எழும், நாங்கள் பனங்காட்டு நரி எதற்கும் அஞ்சமாட்டோம். அ.தி.மு.க, தி.மு.க-வில் இணையும் என ஆரூடம் சொல்கிறார் தற்போதைய அமைச்சர் ஒருவர். அது ஒரு போதும் நடக்காது. இது ஜனநாயக இயக்கம். அ.தி.மு.க அழிந்துவிடும் என அழகிரி சொன்னார். ஆனால், அதற்குப் பின்பு இரண்டுமுறை ஆட்சிக்கட்டிலில் அ.தி.மு.க அமர்ந்தது. அதைப்போல்தான் தி.மு.க நினைப்பது பொய்யாகும். தேர்தல் முடிந்ததும் சோர்ந்து விட்டோம் என நினைத்திருப்பார்கள்.
ஒருபோதும், அ.தி.மு.க சோர்ந்து போகாது. இன்னும் வீரியமாக எழும். எனவே பொய் வழக்கு போடுவதை தி.மு.க அரசு உடனே நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் தமிழக மக்களே சரியான பாடத்தை புகட்டுவார்கள்" என்று பேசினார்.
இதேபோல, மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் சார்பில் டி.குன்னத்தூரில் ஆர்.பி.உதயகுமாரும், புறநகர் கிழக்கு மாவட்டம் சார்பில் திருப்பரங்குன்றத்தில் ராஜன் செல்லப்பா தலைமையிலும் ஆர்பாட்டம் நடந்தது.