Published:Updated:

தஞ்சாவூர்: வைத்திலிங்கத்தின் மீது அதிருப்தி; திமுகவில் இணையவுள்ள அதிமுக முன்னாள் எம்.பி?!

திமுக அலுவலகத்தில் பரசுராமன்
திமுக அலுவலகத்தில் பரசுராமன்

அதிமுக கொடி கட்டிய காரில் பரசுராமன் இன்று கலைஞர் அறிவாலயம் வந்து சந்திரசேகரனைச் சந்தித்தார். ஸ்டாலின் முன்னிலையில் தனது ஆதரவாளர்கள் சுமார் 3,000 பேருடன் கட்சியில் இணைவதற்கு நேரம் கேட்டார்.

தஞ்சாவூரைச் சேர்ந்த அ.தி.மு.க முன்னாள் எம்.பி பரசுராமன் சில தினங்களுக்கு முன் தளபதி ஸ்டாலின் சிறப்பாக ஆட்சி செய்வதாக பாராட்டிப் பேசியது அக்கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியது. அந்த எம்.பி தி.மு.க.,வில் இணையப்போவதாக தவல்கள் வெளியான நிலையில் ஸ்டாலினைச் சந்திப்பதற்காக இன்று தஞ்சாவூர் கலைஞர் அறிவாலயத்திற்கு சென்று தி.மு.க.,மத்திய மாவட்ட பொறுப்பாளரை சந்தித்து நேரம் கேட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்டாலின்
ஸ்டாலின்

தஞ்சாவூர் நாடாளுமன்ற தொகுதியின் முன்னாள் அ.தி.மு.க எம்.பியான பரசுராமன் கட்சியில் தெற்கு மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலராகவும் இருக்கிறார். இவர் துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கத்தின் தீவிர ஆதரவாளராக இருந்தவர். அதற்கு பிரதிபலனாக புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள நீலகிரி ஊராட்சி மன்றத் தலைவராக இருந்த பரசுராமனுக்கு 2014 நாடாளுமன்றத் தேர்தலில் தஞ்சாவூர் தொகுதியில் போட்டியிட சீட் வாங்கிக் கொடுத்தார் வைத்திலிங்கம்.

பரசுராமனும் தி.மு.கவின் சீனியர்களில் ஒருவரான டி.ஆர்.பாலுவை தோல்வியடையச் செய்து எம்.பியாகி அரசியல் ஆர்வலர்களை வியப்பில் ஆழ்த்தினார். அதன் பிறகு பரசுராமனுக்கும், வைத்திலிங்கத்திற்கும் இருந்த நெருக்கம் அதிகரித்தது. ரியல் எஸ்டேட் தொழிலில் கொடிகட்டி பறந்தார் பரசுராமன். வைத்திலிங்கம்மீது தான் வைத்திருந்த விசுவாசத்தைக் காட்ட அவரது அம்மா தங்கம் பெயரில் ஒரு நகரை உருவாக்கி லே அவுட் தயார் செய்து பிளாட் விற்பனை செய்தார்.

திமுக நிர்வாகிகளுடன் அதிமுக முன்னாள் எம்.பி பரசுராமன்
திமுக நிர்வாகிகளுடன் அதிமுக முன்னாள் எம்.பி பரசுராமன்

இருவரும் இணைந்து பல்வேறு தொழில்கள் செய்து வந்ததாக கூறப்பட்டது. சொல்லப்போனால் பரசுராமன் வைத்திலிங்கத்தின் பினாமி என்ற பலமான பேச்சுக்களும் எழுந்தன. இந்நிலையில் கடந்த இரண்டு வருடங்களாகவே கொடுக்க வாங்கல் பிரச்னையில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகச் சொல்லப்படுகிறது. தனக்கு வர வேண்டிய பெரும் தொகையினை பெரும் அழுத்தம் கொடுத்து பரசுராமனிடமிருந்து பெற்றுக் கொண்டார் வைத்திலிங்கம். அதன் பிறகு ஓரளவிற்கு பிரச்னை அமுங்கியது என்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தஞ்சாவூர் தொகுதியில் போட்டியிட பரசுராமன் சீட் கேட்டதாகச் சொல்லப்படுகிறது. அவருக்கு கொடுத்தால் நிச்சயம் வெற்றி பெறுவார் என அ.தி.மு.க விசுவாசிகள் கூறியுள்ளனர். ஆனால் வைத்திலிங்கம் பரசுராமனிற்கு சீட் கொடுக்கவில்லை. அந்த அதிருப்தியில் தேர்தலில் போட்டியிட்ட அறிவுடை நம்பிக்கு பிரச்சாரம் செய்யாமல் ஒதுங்கியுள்ளார் பரசுராமன்.

தி.மு.க-வின் மகளிரணி மாஸ் திட்டம் முதல் செந்தில் பாலாஜியின் பழைய பாசம் வரை..! - கழுகார் அப்டேட்ஸ்
வைத்திலிங்கம் உடன் பரசுராமன்
வைத்திலிங்கம் உடன் பரசுராமன்

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய பரசுராமன், "தி.மு.க ஆட்சி சிறப்பாக இருக்கிறது தளபதி ஸ்டாலின் ஆட்சி சூப்பர்" எனப் பாராட்டி பேசினார். அதன் பிறகும் அ.தி.மு.க சார்பில் லோக்கலில் வைத்திலிங்கம் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டார் பரசுராமன். அப்போதே தி.மு.க-வில் பரசுராமன் இணையப்போவதாகப் பேசப்பட்டது. அ.தி.மு.கவின் தீவிர விசுவாசிகளான சிலர் "வெயிட் பண்ணுங்க அவசரப்படாதீங்க" என பரசுராமனிடம் சமாதானம் செய்துள்ளனர்.

"வைத்திலிங்கம் நடவடிக்கை சரியில்லை கட்சியினை வளர்க்கக்கூடிய எண்ணம் அவருக்கு துளியும் இல்லை. தன்னை சுற்றி இருந்துகொண்டு ஆதாயம் அடையும் ஒரு சிலரையே கட்சியாக நினைக்கிறார் வைத்திலிங்கம். மரியாதை இல்லாத இடத்தில் எதற்கு இருக்கணும்" என அவர்களிடம் பரசுராமன் திருப்பிக் கேட்க பதில் சொல்லமுடியாமல் அனைவரும் அமைதி காத்துள்ளனர்.

இந்நிலையில் தஞ்சாவூரில் உள்ள திமுக கட்சி அலுவலகமான கலைஞர் அறிவாலயத்திற்கு தனது ஆதரவாளர்களுடன் வந்தார் பரசுராமன். தி.மு.க.,மத்திய மாவட்ட பொறுப்பாளரும், திருவையாறு எம்.எல்.ஏ.வுமான சந்திரசேரனைச் சந்தித்தார். அப்போது தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ.ராமசந்திரனும் உடன் இருந்தார். சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக அந்த சந்திப்பு நடைபெற்றது. முறைப்படி முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.கவில் தன்னை இணைத்துக்கொள்ள ஸ்டாலினைச் சந்திக்க நேரம் கேட்பதற்காக வந்ததாகக் கூறப்பட்டது.

முதல்வர் ஸ்டாலினிடம் கேட்டு விட்டு, பதில் அளிப்பதாக பரசுராமனிடம் சந்திரசேகரன் தெரிவித்தார். இது குறித்து சிலரிடம் பேசினோம், "கடந்த வாரம் சென்னை சென்ற பரசுராமன் தி.மு.கவில் உள்ள முக்கியஸ்தரை சந்தித்து தான் தி.மு.கவில் இணைய விரும்புவதாக தெரிவித்தார். இதனை அந்த முக்கியப்புள்ளி ஸ்டாலினிடம் தெரிவித்துள்ளார். அவரும் ஓ.கே சொல்ல பின்னர் "துரை.சந்திரசேகரனை போய் மரியாதை நிமித்தமாகப் பாருங்க" எனக் கூறி அனுப்பியுள்ளார்.

பரசுராமன்
பரசுராமன்

அ.தி.மு.க கொடி கட்டிய காரில் பரசுராமன் இன்று கலைஞர் அறிவாலயம் வந்து சந்திரசேகரனை சந்தித்தார். தனது ஆதரவாளர்கள் சுமார் 3,000 பேருடன் கட்சியில் இணைய இருப்பதாகவும் கூறியிருக்கிறார். இதே போல் கொடிமரத்து மூலை பகுதியில் வசிக்கும் அ.தி.மு.க முக்கிய நிர்வாகி ஒருவரும் தி.மு.கவில் இணைய இருக்கிறார். வைத்திலிங்கத்தில் செயல்பாடுகளால் அதிருப்தி அடைந்தவர்கள் தி.மு.கவிற்குள் வருவதை விரும்புகின்றனர். இன்னும் பலர் தி.மு.கவிற்கு வருவதற்காக பேசிக்கொள்கிறார்கள்" எனத் தெரிவித்தனர்.

அடுத்த கட்டுரைக்கு