ஜெயலலிதா ஸ்டைலைப் பின்பற்றும் எடப்பாடி - தயார்நிலையில் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்!

தேர்தலின்போது மற்றகட்சிகளைவிட ஜெயலலிதா முதலில் வேட்பாளர் பட்டியலை வெளியிடுவார். அதைப்போல ஓ.பன்னீர்செல்வமும் எடப்பாடி பழனிசாமியும் அ.தி.மு.க-வின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிடவிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 6-ம் தேதி நடத்தப்படுகிறது. மே 2-ம் தேதி தேர்தல் முடிவு வெளியாகிறது. ஜெயலலிதா இருந்தவரையில் முதலில் வேட்பாளர் பட்டியலை வெளியிடுவது அவரது வழக்கம். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி என இரட்டைத் தலைமையின் கீழ் அ.தி.மு.க செயல்பட்டுவருகிறது. அதனால் கட்சி தொடர்பான முடிவுகளை எடுப்பதில் இழுபறி ஏற்பட்டுவந்தது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போதுகூட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிடுவதில் அ.தி.மு.க-வில் சிக்கல் எழுந்தது. அதனால் காலதாமதமாகவே பட்டியல் வெளியானது.

அ.தி.மு.க சார்பில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்த 8,000-க்கும் மேற்பட்டவர்களிடம் நேற்று கட்சித் தலைமை அலுவலகத்தில் நேர்காணல் நடத்தப்பட்டது. அதற்கு முன்பே உளவுத்துறை கொடுத்த தகவல்களைவைத்து, ஒரு பட்டியலை கட்சித் தலைமை தயாராகவைத்திருக்கிறது. ஜெயலலிதா இல்லாமல் சந்திக்கும் தேர்தல் என்பதால், வேட்பாளர் பட்டியல் வெளியிடும்போது ஏற்படும் அதிருப்திகளைச் சமாளிக்க கட்சித் தலைமை யோசித்துவருகிறது. அதனால் ஜெயலலிதா ஸ்டைலில் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை இன்று வெளியிட கட்சித் தலைமை முடிவு செய்திருக்கிறது. அதில், முதல்வர், துணை முதல்வர், சிறுபான்மைப் பிரிவினர் போட்டியிடும் இரண்டு தொகுதிகள், ஒரு பெண் வேட்பாளர் என ஐந்து பேரின் பெயர்கள் வெளியிடப்படவிருக்கின்றன. கூட்டணிக் கட்சிப் பேச்சுவார்த்தை முடிவானதும், அடுத்தகட்ட பட்டியல் வெளியிடப்படும் என கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.