தேனி மாவட்டம், கம்பத்தில் நாளை அ.தி.மு.க கட்சி நிர்வாகிகளான முன்னாள் எம்.எல்.ஏ ராமராஜ், கூடலூர் நகரச் செயலாளர் அருண்குமார் ஆகியோர் இல்லத் திருமண விழாவுக்கு அ.தி.மு.க இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வருகை தரவிருக்கிறார். அவருடன் முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள், எம்.பி-க்கள், கட்சியின் முன்னணி நிர்வாகிகள் பங்கேற்கவிருக்கின்றனர்.

இடைக்காலப் பொதுச் செயலாளராகப் பொறுப்பேற்ற பிறகு எடப்பாடி பழனிசாமி, முதன்முறையாக தேனி மாவட்டத்துக்கு வருகை தரவிருப்பதால், வரவேற்பு ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. வரவேற்புக்கான முன்னேற்பாடுகளைப் பார்வையிடுவதற்காக அந்தக் கட்சியின் பொருளாளரும், முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சீனிவாசன், முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், கே.சி.கருப்பணன் ஆகியோர் தேனி வந்திருந்தனர்.
அவர்கள் எடப்பாடியை வரவேற்கும் பகுதி, முக்கியப் பிரமுகர்கள், கட்சியினர், பொதுமக்களின் வாகன நிறுத்தப் பகுதி, மேடை அமைக்கப்படவிருக்கும் பகுதி, திருமண மண்டபம் வரை அனைத்துப் பகுதிகளுக்கும் நேரடியாகச் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த திண்டுக்கல் சீனிவாசன், ``ஈரோடு இடைத்தேர்தலில் கூட்டணிக் கட்சியினர் எடப்பாடி பழனிசாமிக்குத்தான் ஆதரவு தெரிவித்திருக்கின்றனர். சட்டம், தேர்தல் ஆணையம் அனைத்தும் அ.தி.மு.க எடப்பாடி தரப்பிடமே இருக்கிறது என்பதைத் தெளிவுபடுத்திவிட்டன. அதனால்தான், சின்னம் கிடைக்கவில்லை என்றால் வேறு சின்னத்தில் நிற்பதாக ஓ.பி.எஸ் கூறுகிறார்.

மின்கட்டண உயர்வு உட்பட அனைத்துக்கும் கண்டனம் தெரிவித்து போராட்டம் நடத்தக்கூடிய கட்சியாக, எடப்பாடியை தலைமையாகக் கொண்ட அ.தி.மு.க மட்டுமே இருக்கிறது. ஆனால் ஓ.பி.எஸ் இதுவரை ஏதேனும் ஆர்ப்பாட்டம், போராட்டம் அல்லது எதிர்த்தாவது ஒரு வார்த்தை பேசியிருக்கிறாரா... அதிகாரபூர்வமாக அனைத்து ஆவணங்களையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துவிட்டோம். ஆனால், ஒரு வெள்ளைப் பேப்பரை மட்டுமே ஓ.பி.எஸ் வைத்துக்கொண்டு பேசுகிறார். ஏற்கெனவே இரண்டு டிவிஷன் பென்ஞ்சுகள் எடப்பாடிக்கு ஆதரவாக தீர்ப்பளித்துவிட்டன. ஓ.பி.எஸ் மீண்டும் மேல்முறையீடு செய்திருக்கிறார். அதிலும் எங்களுக்குச் சாதகமாகத் தீர்ப்பு வரும்.
முன்பு திண்டுக்கல் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் எம்.ஜி.ஆர் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு மாபெரும் வெற்றி பெற்றதுபோல, ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க அமோக வெற்றி பெறும்.

ஒரு கட்சி என்றால் தேர்தலில் போட்டியிட வேண்டும். ஆனால், தேர்தலில் விட்டுக்கொடுப்போம் என ஒ.பி.எஸ் கூறுவது விந்தையாக இருக்கிறது. அ.தி.மு.க இரு அணிகள் இணைப்பு பேச்சுவார்த்தை என்பது பொய்யான தகவல். எங்களோடு ஓ.பி.எஸ்-ஸை ஒப்பிடுவதையே அவமானமாகக் கருதுகிறோம். யானையுடன் சுண்டெலியை ஒப்பிடக் கூடாது. யானையுடன் சுண்டெலியை ஒப்பிடுவது எப்படி சரியாகும். தி.மு.க ஆட்சியில் மக்களுக்குக் கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் 20 மாதங்களாக அல்வா கொடுத்து வருவது குறித்து இடைதேர்தலில் பிரசாரம் செய்யவிருக்கிறோம்" என்றார்.