Published:Updated:

‘மாநிலங்களவைப் பொறுப்பு’ முடிவில் கருத்து சொல்ல விரும்பவில்லை!

ஜெயக்குமார்
பிரீமியம் ஸ்டோரி
ஜெயக்குமார்

சசிகலாவைப் பெரிதாக எடுத்துக்கொள்ளத் தேவையில்லை! - காங்கிரஸ், பா.ஜ.க-வை மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்! - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அப்செட்

‘மாநிலங்களவைப் பொறுப்பு’ முடிவில் கருத்து சொல்ல விரும்பவில்லை!

சசிகலாவைப் பெரிதாக எடுத்துக்கொள்ளத் தேவையில்லை! - காங்கிரஸ், பா.ஜ.க-வை மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்! - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அப்செட்

Published:Updated:
ஜெயக்குமார்
பிரீமியம் ஸ்டோரி
ஜெயக்குமார்

மாநிலங்களவை உறுப்பினர் தேர்வில் ஏற்பட்ட காலதாமதம், பிரதமர் மோடி பங்கேற்ற நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலினின் பேச்சு, `என் தலைமையின்கீழ் அ.தி.மு.க விரைவில் வரும்’ என்ற சசிகலாவின் பேச்சு உள்ளிட்ட விஷயங்கள் குறித்து அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமாரிடம் கேள்விகளை முன்வைத்தேன்…

“பிரதமர் மோடி பங்கேற்ற நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேசியது குறித்து உங்கள் பார்வை என்ன?”

“மக்கள், மாநில நலன்கள் குறித்துத்தான் ஸ்டாலின் பேசினார் என்றாலும்கூட... எதை, எங்கே, எப்போது, எப்படிப் பேச வேண்டும் என்ற மரபு இருக்கிறது. அதைத்தான் இடம், பொருள், ஏவல் அறிந்து செயல்படுவது என்பார்கள். அது ஸ்டாலினுக்குத் தெரியவில்லை. ‘பிரதமர் முன்னாடியே எவ்வளவு தைரியமாகப் பேசுகிறேன் பாருங்கள்’ என்று சுயவிளம்பரம் செய்துகொள்ள நடத்திய அப்பட்டமான அரசியல் நாடகமாகவே ஸ்டாலினின் அன்றைய பேச்சு இருந்தது.”

“பிரதமர் மோடியைச் சந்தித்த அ.தி.மு.க தலைவர்கள், அ.தி.மு.க-வின் உட்கட்சிப் பிரச்னைகள் குறித்துப் பேசியதாகத் தகவல்கள் வந்தனவே?”

“முற்றிலும் தவறான தகவல். இ.பி.எஸ்., ஓ.பி.எஸ்., வேலுமணி, தங்கமணி, கே.பி.முனுசாமி நான் உட்பட அனைவரும் ஒன்றாகத்தான் பிரதமரைச் சந்தித்துப் பேசினோம். அப்போது ‘தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு கெட்டுவிட்டது. எதிர்க்கட்சிகள், பத்திரிகைகள் என யார் விமர்சனம் செய்தாலும் அடக்குமுறைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். காவல்துறையை ஏவல் துறையாகப் பயன்படுத்தி தி.மு.க அரசு மாநிலத்தில் அட்டூழியத்தில் ஈடுபட்டுவருகிறது’ என்பதையெல்லாம் எடுத்துச் சொன்னோம்.”

“மாநிலங்களவை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதில், அ.தி.மு.க-வில் ஏன் இவ்வளவு காலதாமதம்?”

“தி.மு.க சர்வாதிகாரத்தை நோக்கிச் செல்லும் கட்சி. ஆனால் அ.தி.மு.க ஜனநாயகத்தின் அடிப் படையில் இயங்கும் இயக்கம். அந்தவகையில் எல்லோரையும் கலந்தாலோசித்து ஒரு முடிவை எடுக்க வேண்டும் என முயலும்போது, கொஞ்சம் நேரம் எடுக்கத்தான் செய்யும். ஆனால், உரிய காலத்தில் மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடுபவர்களை அறிவித்துவிட்டோம் இல்லையா...”

“இ.பி.எஸ் – ஓ.பி.எஸ் இருவருக்குள்ளும் பங்கைப் பிரிப்பதிலும், சமூகரீதியிலான பிரதிநிதித்துவம் கொடுப்பதிலும் ஏற்பட்ட சிக்கல்தான் தாமதத்துக்குக் காரணம் என்கிறார்களே?”

“கட்சியில் வழங்கப்படும் எந்த அங்கீகாரமும் சமூகம் சார்ந்தோ, ஆள் பார்த்தோ கொடுக்கப்படுவதில்லை. கட்சிக்கு ஆற்றிய பணி, கட்சிமீது ஒருவருக்கு இருக்கும் பிடிப்பு உள்ளிட்ட பின்னணியில்தான் அங்கீகாரம் கொடுக்கப்படும். அப்படித்தான் இப்போது இருவருக்கும் அங்கீகாரம் கிடைத்துள்ளது.”

“உங்களுக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி கொடுக்கப்படவில்லை என்ற வருத்தம் இல்லையா?”

“கட்சியில் யாருக்கு என்ன பொறுப்பு கொடுக்கப்பட வேண்டும் என்பது தலைமை எடுக்கவேண்டிய முடிவு. அப்படிக் கட்சி எடுக்கும் முடிவில், மேற்கொண்டு நான் எந்தக் கருத்தும் சொல்ல முடியாது. சொல்லவும் விரும்பவில்லை.”

“மாநிலங்களவைத் தேர்தலில், பா.ம.க., பா.ஜ.க-விடம் ஆதரவு கேட்டீர்களே?”

“கூட்டணி தர்மத்தின் அடிப்படையில் அவர் களுக்கான மரியாதையைக் கொடுக்க வேண்டும் என்ற பண்பாடு கருதி, மரியாதைக்காகத்தான் அவர்களைச் சென்று பார்த்தோம். அந்தச் சந்திப்பின்போது ‘எங்களுக்கு நான்கு சட்டமன்ற இடங்களில் வெற்றியைக் கொடுத்திருக்கிறீர்கள். அந்த வெற்றிக்கான ஆதரவை அப்படியே உங்களுக்குத் தருகிறோம்’ என அண்ணாமலை சொன்னார்.”

 ‘மாநிலங்களவைப் பொறுப்பு’ முடிவில் கருத்து சொல்ல விரும்பவில்லை!

‘‘ ‘விரைவில் எனது தலைமையின் கீழ் அ.தி.மு.க செயல்படும்’ எனச் சசிகலா பேசியிருக்கிறாரே?”

“ஒரு திரைப்படத்தில் ‘திரும்பத் திரும்பப் பேசுற நீ’ என்று ஒரு வசனம் வருமே... அப்படித்தான் சசிகலாவும் ஒரே கருத்தைத் திரும்பத் திரும்பப் பேசிக்கொண்டிருக்கிறார். மக்களும் தொண்டர்களும் எங்கள் பக்கம்தான் இருக்கிறார்கள். சசிகலாவின் நம்பிக்கைக்கு நீதிமன்றங்களும் தேர்தல் ஆணையமும் எப்போதோ முற்றுப்புள்ளிவைத்துவிட்டன. எனவே, அவர் பேசுவதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளத் தேவையில்லை.”

“மக்கள் உங்கள் பக்கம் என்றால், ஏன் தொடர் தோல்விகளைச் சந்தித்துவருகிறீர்கள்?”

“வெற்றி, தோல்வி என்பவை நாணயத்தின் இரண்டு பக்கங்கள். தமிழ்நாட்டை அதிக முறை ஆட்சி செய்தது அ.தி.மு.க-தான். எங்களைவிட மிகப்பெரிய தோல்விகளை தி.மு.க சந்தித்திருக் கிறது. எனவே, வெற்றி, தோல்வியை வைத்து ஓர் இயக்கத்தின் வளர்ச்சி, வீழ்ச்சியைக் கணிக்க முடியாது.”

“தமிழ்நாட்டு அரசியல் சூழல், இனி பா.ஜ.க – தி.மு.க என்றுதான் இருக்கும் என அதன் மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசிவருவது குறித்து..?”

“தங்கள் கட்சியை வளர்த்து, நாட்டைப் பிடிக்க வேண்டும் என்ற ஆசை அனைத்துக் கட்சியினருக்கும் இருக்கும்தானே... அப்படியான ஆசையில் 150 இடங்களைப் பிடிப்போம், 200 இடங்களைப் பிடிப்போம் என அவர்கள் கருத்து சொல்லலாம். ஆனால், அந்த ஆசையை மக்கள்தான் நிறைவேற்ற வேண்டும். நடைமுறையில் அதற்குச் சாத்தியமில்லை... வாய்ப்புமில்லை. தமிழ்நாட்டில் காங்கிரஸ், பா.ஜ.க என எந்த தேசியக் கட்சியாக இருந்தாலும் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்!”

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism