Published:Updated:

``ஓபிஎஸ் ஒரு நிலையாக இருக்க மாட்டார்!" - தஞ்சைக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் ஆரூடம்

ஆர்.காமராஜ் ( ம.அரவிந்த் )

``சட்டமன்றத்தில் ஜெயலலிதாவின் தொண்டர்களான அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் அப்புறப்படுத்தப்பட்டபோது, அதை ரசித்த ஓ.பி.எஸ் எப்படி அ.தி.மு.க-வின் தலைவராக முடியும்?" - அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ்

``ஓபிஎஸ் ஒரு நிலையாக இருக்க மாட்டார்!" - தஞ்சைக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் ஆரூடம்

``சட்டமன்றத்தில் ஜெயலலிதாவின் தொண்டர்களான அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் அப்புறப்படுத்தப்பட்டபோது, அதை ரசித்த ஓ.பி.எஸ் எப்படி அ.தி.மு.க-வின் தலைவராக முடியும்?" - அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ்

Published:Updated:
ஆர்.காமராஜ் ( ம.அரவிந்த் )

தஞ்சாவூர் சாந்தி தியேட்டர் அருகே அ.தி.மு.க பொன்விழா நிறைவு மற்றும் 51-ம் ஆண்டு தொடக்கவிழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொள்வதற்காக வந்த முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜுக்கு முன்னாள் மருத்துவக் கல்லூரிப் பகுதி கழகச் செயலாளரான சரவணன் ஆளுயுர மாலை அணிவித்ததுடன், நான்கு அடி உயரம்கொண்ட பித்தளை வேல் ஒன்றையும் நினைவுப்பரிசாகக் கொடுத்து வரவேற்றார்.

ஆர்.காமராஜுக்கு மாலை அணிவிக்கும் நிர்வாகிகள்
ஆர்.காமராஜுக்கு மாலை அணிவிக்கும் நிர்வாகிகள்

முன்னதாக, கூட்டத்தில் கலந்துகொண்ட பெண்களுக்கு நிகழ்ச்சியின் முடிவில் மேடையிலேயே இலவசப் புடவை கொடுப்பதற்கான டோக்கனை நிர்வாகிகள் வழங்கினர். இதைத் தொடர்ந்து பேசிய தலைமைக் கழகப் பேச்சாளர் ஒருவர், ``மறைந்த ஜெயலலிதா, பாம்புக் கூட்டம் ஒன்றை வளர்த்துவந்தார். அந்தப் பாம்புக் கூட்டம் அவரைக் கடித்து, கொன்றுவிட்டது" என்றார். பின்னர் பேசிய ஆர்.காமராஜ், ``எம்.ஜி.ஆர் அ.தி.மு.க-வைத் தொடங்கியபோது, `நூறு நாள் ஓடுமா...' என கருணாநிதி உள்ளிட்ட பலரும் கேலி, கிண்டல் செய்தனர். ஆனால், இன்றைக்கு 51-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறோம்.

தஞ்சையில் அ.தி.மு.க பொதுக்கூட்டம்
தஞ்சையில் அ.தி.மு.க பொதுக்கூட்டம்

32 ஆண்டுகள் ஆட்சியில் இருந்திருக்கிறோம். நாளைக்கே தேர்தல் வந்தாலும் ஆட்சியைப் பிடிக்கும் வலிமையுடன் இருக்கிறோம். மறைந்த அம்மா பல்வேறு நலத்திட்டங்களை வழங்கியிருக்கிறார். விலையில்லா அரிசி கொடுத்து, பசி போக்கியவர் ஜெயலலிதா... அதை `இலவசம்’ என அவர் சொல்லவில்லை. ஆனால், இன்றைக்கு அமைச்சர் பொன்முடி உள்ளிட்டவர்கள் `ஓசி, ஓசி’ என மக்களைக் கேவலப்படுத்துகின்றனர். அம்மா மறைவுக்குப் பிறகு ஆட்சிக்கு வந்த எடப்பாடி பழனிசாமியை எளிதாக நினைத்து `ஒரு வாரம் ஆட்சி நீடிக்குமா?’ என்றனர். அவருக்கு எதிராகப் பல போராட்டங்கள் நடந்தன, அத்தனையையும் வென்று காட்டி ஆட்சி நடத்தி முடித்தார்.

`தாங்கிக்கொள்ள முடியவில்லை, தூக்கம் வர வில்லை, விடிஞ்சு எழுந்திரிச்சா என்ன நடக்க போகுதுனு தெரியலை’ என்கிறார் இன்றைய முதலமைச்சர் ஸ்டாலின். தி.மு.க ஆட்சியில் விடிஞ்சா அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள் என்ன பேசப்போகிறார்கள் என மக்கள் பயந்துகொண்டிருக்கின்றனர். அதேபோல் முதலமைச்சர் ஸ்டாலினும் பயப்படுகிறார்.

பெண்களுக்குப் புடவை வழங்கிய ஆர்.காமராஜ்
பெண்களுக்குப் புடவை வழங்கிய ஆர்.காமராஜ்

ஆயிரம் போராட்டங்களைச் சந்தித்தாலும், ஆயிரக்கணக்கான திட்டங்களைக் கொண்டு வந்தவர் எடப்பாடி பழனிசாமி. தி.மு.க ஆட்சிக்கு வந்து 16 மாதங்கள் ஆகிவிட்டன. ஆனால் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய திட்டங்கள் எதையும் நிறைவேற்றவில்லை. காலை உணவு திட்டத்தை தொடங்கிவைத்த ஸ்டாலின், `பசி போக்குகிற வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதற்காக எந்தவிதமான தியாகத்தையும் செய்வேன்' என்கிறார். எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும்தான் உண்மையாகப் பசியைப் போக்கிய தலைவர்கள்.

குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1,000 தருவதாகச் சொன்னார்கள், செய்யவில்லை. எதைக் கேட்டாலும் நிதியில்லை என நிதியமைச்சர் சொல்கிறார். சொன்னது எதையும் செய்யாத ஓர் ஆட்சியை ஸ்டாலின் நடத்திக்கொண்டிருக்கிறார். மத்தாப்பூ நல்ல வெளிச்சத்துடன் பல வண்ணங்களில் ஒளி தரக்கூடியது. ஆனால் கொஞ்ச நேரத்தில் அணைந்துவிடும். அகல் விளக்கு இருளை விலக்கி நிலையான வெளிச்சத்தைத் தரும். தி.மு.க மத்தாப்பூ, அ.தி.மு.க அகல் விளக்கு.

அ.தி.மு.க கூட்டத்தில் பேசும் ஆர்.காமராஜ்
அ.தி.மு.க கூட்டத்தில் பேசும் ஆர்.காமராஜ்

அ.தி.மு.க-வில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா காலத்திலிருந்தே பிரச்னை இருக்கிறது. கருத்து வேறுபாட்டால் பிரிந்து சென்றவர்கள் மீண்டும் அ.தி.மு.க-வில் சேர்ந்தது அப்போதிலிருந்தே நடந்திருக்கிறது. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு எடப்பாடி முதலமைச்சரானார். அப்போது ஓ.பி.எஸ் நடத்திய தர்மயுத்தம் என்னவானது... நிலையான முடிவை ஒரே ஒரு நாள்கூட ஓ.பி.எஸ் எடுத்தது கிடையாது. பின்னர் அவரும் வந்து சேர்ந்தார்.

அ.தி.மு.க நிர்வாகிகள், தொண்டர்கள் யாரை ஆதரிக்கிறார்களோ அவர்களே கட்சியில் வென்றிருக்கின்றனர். அதேபோல் எடப்பாடி பழனிசாமி வென்று தி.மு.க-வை எதிர்க்கக்கூடிய சக்திவாய்ந்த தலைவராக இருக்கிறார். அ.தி.மு.க ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்கள் முடக்கப்படுகின்றன. தி.மு.க-வின் மக்கள் விரோதச் செயலை எதிர்ப்பதில் உறுதியாக இருக்கிறோம். எதிர்க்கட்சி துணைத் தலைவரை மாற்றக் கோரி ஒருமனதாகக் கடிதம் கொடுத்தும் சபாநாயகர் அதைச் செய்யவில்லை.

புடவை வாங்க திரண்ட பெண்கள்
புடவை வாங்க திரண்ட பெண்கள்

கடந்த 17-ம் தேதி அ.தி.மு.க பொன்விழா நாளில் வேண்டுமென்றே முதலமைச்சர் ஸ்டாலின் சட்டமன்றத்தைக் கூட்டினார். நாங்கள் கலந்துகொள்ளவில்லை. அடுத்த நாள் சபாநாயகரைச் சந்தித்து சட்டப்படி துணைத் தலைவரை அறிவிக்க வலியுறுத்தி கோரிக்கை வைத்தோம். பேசுவதற்கும் வாய்ப்பு மறுக்கப்பட சட்டமன்றத்தில் தர்ணா போராட்டம் நடத்தினோம்.

காவலர்களை வைத்து ஒவ்வொருவராகத் தூக்கிச் சென்று எங்களை அப்புறப்படுத்தினர். அதை ஓ.பி.எஸ்., வைத்திலிங்கம் இருவரும் சட்டமன்றத்தில் அமர்ந்தபடி ரசித்துக்கொண்டிருந்தனர். ஜெயலலிதாவின் தொண்டர்களான 62 எம்.எல்.ஏ-க்களை தூக்கிச் செல்வதை ரசித்த ஓ.பி.எஸ்., எப்படி அ.தி.மு.க-வின் தலைவராக முடியும்... அது எந்த வகையில் நியாயம்... அதை கேட்பதற்கு ஓ.பி.எஸ்-ஸுக்கு என்ன தகுதி, உரிமையிருக்கிறது?

ஆர்.காமராஜ்
ஆர்.காமராஜ்

எவ்வளவு மோசமான செயல் இது... இதை என்னால் நினைத்துப் பார்க்க முடியவில்லை. உரிமை பறிக்கப்பட்டதைக் கண்டித்து தடையை மீறி உண்ணாவிரதம் இருந்தோம், எங்களைக் கைதுசெய்தனர். அதன் பின்னர் அனைத்து ஊர்களிலும் தொண்டர்கள் கைதுசெய்யப்பட்டனர். சட்டமன்றத்தில் அம்மா துரைமுருகனால் அவமானப்படுத்தப்பட்டபோது எப்படியான எழுச்சி இருந்ததோ, அதே எழுச்சி அன்று இருந்தது. அதுவே எங்களின் பலம். அதே பலத்தோடு தி.மு.க-வைத் தோற்கடிப்போம்" என்றார்.