Published:Updated:

`கருணாநிதி நினைவிடம், சிலை அமைக்க அனுமதி வழங்கியது அ.தி.மு.க அரசு!’ - ஆர்.பி.உதயகுமார்

ஆர்.பி.உதயகுமார்
ஆர்.பி.உதயகுமார்

``மதுரை சிம்மக்கல்லில் கருணாநிதிக்கு சிலை அமைக்க பெருமிதத்துடன் அனுமதி வழங்கியிருக்கிறது அ.தி.மு.க அரசு. மு.க.ஸ்டாலின் இதை மறந்துவிடக் கூடாது’’- ஆர்.பி.உதயகுமார்.

மதுரை மாவட்டம், சிவரக்கோட்டையில் மருதுபாண்டியர் சிலை அமைப்பதற்கான பூமி பூஜை விழாவை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கிவைத்தார். அந்த நிகழ்ச்சியில் அவர் பேசும்போது, ``ஆங்கில ஏகாதிபத்தியத்தை எதிர்த்து தாய்மண்ணைக் காக்கவும், விசுவாசத்துக்கும் எடுத்துக்காட்டாகத் திகழ்ந்த நமது முப்பாட்டனார்கள் மாமன்னர் மருதுபாண்டியர்களுக்குச் சிலை அமைப்பதில் மதுரை புறநகர் மேற்கு மாவட்டக் கழகம் பெருமைகொள்கிறது.

ஆர்.பி.உதயகுமார்
ஆர்.பி.உதயகுமார்

இதன் மூலம் மதுரை மட்டுமல்லாமல், தென் தமிழகத்தின் வரலாற்றுச் சின்னமாக இந்த இடம் திகழும். மருது சகோதரர்கள் தியாகத்தை வருங்கால இளைய சமுதாயத்துக்கு எடுத்துக் கூறும் வகையிலும் இந்த நிகழ்வு திகழும்.

சிலை அமைக்க அரசாணை பெற்றிருக்கிறோம். பத்து நாள்களில் சிலை அமைக்கப்படும். முதலமைச்சர், துணை முதலமைச்சர், உள்ளாட்சித்துறை, சட்டத்துறை அமைச்சர்களிடம் இந்தச் சிலை அமைக்க பத்து நிமிடங்களில் கையெழுத்து வாங்கப்பட்டது. அதேபோல், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருக்கு புகழ் சேர்த்த மூக்கையாத் தேவருக்கு உசிலம்பட்டியில் பிரதான சாலையில் திருவுருவச்சிலை அமைக்கப்பட்டுவருகிறது.

மருது பாண்டியர் சிலை அமைக்க பூமி பூஜை
மருது பாண்டியர் சிலை அமைக்க பூமி பூஜை

பிரிட்டிஷ் அரசின் கைரேகைச் சட்டத்தை எதிர்த்து அதற்காக உயிர்நீத்த தியாகிகளின் தியாகத்தைப் போற்றும் வகையில் அந்நிகழ்வின் 100-வது ஆண்டு நினைவுநாளில் பெருங்காமநல்லூரில் ஐந்து ஏக்கர் பரப்பில் ஒன்றரைக் கோடி ரூபாய் செலவில் நினைவு மண்டபம் கட்ட பூமி பூஜை நடைபெறவிருக்கிறது. அதேபோல், திருமலை நாயக்கருக்கு சிலைவைக்க அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. `ஆனையூர், வலையங்குளம் பகுதிகளில் முத்தரையர் சிலை அமைக்கப்படும்’ என்று முதலமைச்சர் அறிவித்திருக்கிறார்.

இதன் மூலம் சாதி, மதம் பார்க்காமல் நாட்டுக்காக உழைத்த தியாகிகளுக்கு மரியாதை செலுத்தி அவர்களுக்குப் புகழ் மேல் புகழ் சேர்த்துவருகிறது அம்மா அரசு. தமிழகத்துக்குப் புகழ் சேர்த்த டாக்டர் அப்துல் கலாம் மறைந்த செய்தி கேட்டவுடன், `ஒரு மணி நேரத்துக்குள் நினைவிட அரசாணை கோப்பு தயாராக இருக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டார் ஜெயலலிதா. அதன்படி ராமேஸ்வரத்தில் அப்துல் கலாம் நினைவிடம் அமைக்க ஒரு மணி நேரத்தில் அரசாணை வெளியிடப்பட்டு உலகத்தின் கவனத்தை ஈர்த்தார்.

ஆர்.பி.உதயகுமார்
ஆர்.பி.உதயகுமார்

இன்றைக்கும் மக்கள் உணர்வுக்கு மதிப்பளிக்கும் வகையில் அம்மா அரசு செயல்படுகிறது. இந்தப் பகுதியில் ராணி மங்கம்மாள் காலத்தில் தூர்வாரப்பட்ட கவுண்டா நதி, தற்போது எடப்பாடியார் ஆட்சியில் தூர்வாரப்பட்டு நீர் நிறைந்திருக்கிறது. குராயூரில் தடுப்பணை கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. கள்ளிக்குடி புதிய தாலுகாவாகவும், திருமங்கலம் புதிய வருவாய்க் கோட்டமாகவும் உருவாக்கப்பட்டிருக்கின்றன.

தி.மு.க ஆட்சியில் இந்தப் பகுதி விவசாய நிலம் 1,500 ஏக்கரை சிப்காட் திட்டத்துக்காக எடுத்தனர். விவசாயிகள் தொடர்ந்து போராடி உச்ச நீதிமன்றம் வரை சென்றனர். நான் அதை முதலமைச்சரிடம் வலியுறுத்தி, அந்த அரசாணையை ரத்துசெய்யவைத்தேன். மதுரை சிம்மக்கல்லில் கருணாநிதிக்கு சிலை அமைக்க பெருமிதத்துடன் அனுமதி வழங்கியிருக்கிறது அ.தி.மு.க அரசு. மு.க.ஸ்டாலின் இதை மறந்துவிடக் கூடாது.

ஆர்.பி.உதயகுமார்
ஆர்.பி.உதயகுமார்

அதுமட்டுமல்லாமல் மெரினா கடற்கரையில் முதலமைச்சராக இருப்பவர்கள் மறைந்தால்தான் அடக்கம் செய்ய அனுமதிக்கப்படும். ஆனால், தி.மு.க தொண்டர்களின் உணர்வுக்கு மதிப்பளித்து கருணாநிதியை அடக்கம் செய்ய அனுமதி வழங்க முதலமைச்சர் எனக்கு உத்தரவிட்டார். தி.மு.க ஆட்சியில் இப்படி அனுமதி வழங்குவார்களா என்பதை ஸ்டாலின் புரிந்துகொள்ள வேண்டும்’’ என்றார்.

அடுத்த கட்டுரைக்கு