Published:Updated:

எம்.ஜி.ஆர் மாளிகை யாருக்கு?!

எம்.ஜி.ஆர் மாளிகை
பிரீமியம் ஸ்டோரி
எம்.ஜி.ஆர் மாளிகை

சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்கிற முறைதான் தற்போது கட்சியில் இருக்கிறது.

எம்.ஜி.ஆர் மாளிகை யாருக்கு?!

சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்கிற முறைதான் தற்போது கட்சியில் இருக்கிறது.

Published:Updated:
எம்.ஜி.ஆர் மாளிகை
பிரீமியம் ஸ்டோரி
எம்.ஜி.ஆர் மாளிகை

2022 ஜூலை 11-ம் தேதி நடந்த வன்முறையால் சீல் வைக்கப்பட்ட அ.தி.மு.க தலைமை அலுவலகமான எம்.ஜி.ஆர் மாளிகையின் சாவி, ஜூலை 21-ம் தேதி நீதிமன்ற உத்தரவுப்படி இ.பி.எஸ் தரப்பிடம் ஒப்படைக்கப்பட்டது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார் ஓ.பி.எஸ்.

இது ஒருபுறமிருக்க... ‘அ.தி.மு.க அலுவலகத்தில் பொருள்கள் கொள்ளையடிக்கப்பட்டது தொடர்பாக போலீஸில் புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை’ என்று சி.பி.ஐ விசாரணை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் கட்சியின் அமைப்புச் செயலாளர் சி.வி.சண்முகம். இந்த வழக்கு ஆகஸ்ட் 25-ம் தேதி விசாரணைக்கு வந்தபோது அரசுத் தரப்பில் ஆஜரான வக்கீல், ‘மனுதாரர் கொடுத்த புகாரின் அடிப்படையில் ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் உட்பட பலர்மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு உட்பட அ.தி.மு.க அலுவலகத்தில் நடந்த வன்முறை தொடர்பாக பதிவான வழக்குகள் என்று மொத்தம் நான்கு வழக்குகளை சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்றி டி.ஜி.பி உத்தரவு பிறப்பித்துள்ளார்’ என்று கூறினார். அப்போது, ‘தமிழ்நாடு போலீஸ் மீது நம்பிக்கை இல்லாததால், இந்த வழக்கை சி.பி.ஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும்’ என்று சி.வி.சண்முகம் தரப்பு வக்கீல் வாதிட்டார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ‘சி.பி.சி.ஐ.டி போலீஸார் இந்த வழக்குகளை விரைந்து விசாரித்து, செப்டம்பர் 19-ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்’ என்று உத்தரவிட்டார்.

எம்.ஜி.ஆர் மாளிகை யாருக்கு?!

அடுத்து என்ன நடக்கும் என்று இ.பி.எஸ் தரப்பிடம் பேசினோம். ``எம்.ஜி.ஆர் மாளிகை சாவியை எங்களிடம் ஒப்படைத்த தீர்ப்புக்குத் தடை கேட்ட ஓ.பி.எஸ் தரப்பின் கோரிக்கையை, நீதிபதி நிராகரித்துவிட்டார். பொதுக்குழு வழக்கின் தீர்ப்பை முன்வைத்து, தங்களையும் அலுவலகம் செல்ல அனுமதியளிக்க வேண்டும் என்ற அவர்களது கோரிக்கையையும் நீதிபதி ஏற்கவில்லை. அடுத்த வாரம் இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வருகிறது. அப்போது, ஏற்கெனவே வழக்கு பதிவு செய்யப்பட்டவர்களை மீண்டும் தலைமைக் கழகம் செல்ல அனுமதித்தால், வன்முறை வெடிக்கும் என்று வாதங்களை எடுத்துவைப்போம்... எம்.ஜி.ஆர் மாளிகையையும் நாங்களே தக்கவைத்துக்கொள்வோம்’’ என்றார்கள் நம்பிக்கையாக.

ஓ.பி.எஸ் தரப்பில் பேசியபோது, ``சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்கிற முறைதான் தற்போது கட்சியில் இருக்கிறது. ஒருங்கிணைப்பாளர் என்கிற முறையில் அண்ணன் ஓ.பி.எஸ் இப்போதே தலைமைக் கழகத்துக்குச் செல்வதற்கான உரிமை இருக்கிறது. ஆனாலும், உச்ச நீதிமன்றத்தில் நாங்கள் தொடர்ந்த வழக்கு நிலுவையில் இருப்பதால்தான் அமைதி காக்கிறோம். உச்ச நீதிமன்றத்திலும் எங்களுக்கு நியாயமான தீர்ப்புவரும் என்று நம்புகிறோம்’’ என்கிறார்கள்.

அ.தி.மு.க நாற்காலிச் சண்டையில், கட்சிக்காக எம்.ஜி.ஆர் தானமளித்த கட்டடமும் தள்ளாடிக்கொண்டிருக்கிறது!