Published:Updated:

‘‘ரேஷன் அரிசியில் நிவாரணம் வழங்குகிறது அ.தி.மு.க!’’ - அப்பாவு...

‘‘தன் தவறுகளை மறைக்க அவதூறு பரப்புகிறார்!’’ - இன்பதுரை

பிரீமியம் ஸ்டோரி
‘‘பொது விநியோகத் திட்டத்தின் மூலம் வழங்கப்படும் அரிசியைத் திருடி, தங்களின் சொந்தச் செலவில் கொரோனா நிவாரண உதவி வழங்குவதுபோன்று அ.தி.மு.க-வினர் நாடகமாடு கின்றனர்’’ என்று தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ-வான அப்பாவு எழுப்பியுள்ள குற்றச்சாட்டு அ.தி.மு.க-வின் நிவாரணப் பணிகளில் சந்தேக ரேகையைப் படரச் செய்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகேயுள்ள அரசூர் தேரிவிளை என்ற கிராமத்திலுள்ள ரைஸ் மில்லிலிருந்து 420 மூட்டைகள் ரேஷன் அரிசியை உணவுப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவினர் சமீபத்தில் பறிமுதல் செய்தனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஆலையின் உரிமையாளர் சுயம்புலிங்கம் உள்ளிட்ட ஏழு பேரும் அ.தி.மு.க ஆதரவாளர்கள் என்பதை மையமாக வைத்தே இப்படியான குற்றச்சாட்டை எழுப்பியுள்ளார் அப்பாவு.

‘‘ரேஷன் அரிசியில் நிவாரணம் வழங்குகிறது அ.தி.மு.க!’’
- அப்பாவு...

இது குறித்து நம்மிடம் பேசிய அப்பாவு, ‘‘கொரோனா ஊரடங்கு காரணமாக, கொரோனா பேரிடர் மீட்பு நடவடிக்கையாக கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரை ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் ஐந்து கிலோ அரிசியை மத்திய அரசு வழங்கியிருக்கிறது. அதன்படி ஒரு மாதத்துக்கு தலா 1,78,000 மெட்ரிக் டன் வீதம் மூன்று மாதத்துக்கு 5,34,000 மெட்ரிக் டன் அரிசி வழங்கப்பட்டுள்ளது. அந்த அரிசியை மக்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் இலவசமாக வழங்காமல் அ.தி.மு.க சார்பிலான நிவாரணமாக வழங்கி வருகின்றனர். இது நெல்லையில் அம்பலமாகியுள்ளது.

நெல்லை மாவட்டம், வள்ளியூர் நுகர்பொருள் வாணிபக் கிடங்கிலிருந்து ரேஷன் கடைகள் வழியாக மக்களுக்குச் செல்ல வேண்டிய அரிசியை, தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஆலைக்குக் கொண்டு சென்று பாலிஷ் செய்து, அதை அ.தி.மு.க-வின் நிவாரணமாக வழங்க ஏற்பாடு நடந்துள்ளது. அந்த ஆலையின் உரிமையாளர் சுயம்புலிங்கம் அ.தி.மு.க-வினருக்கு நெருக்கமானவர். இந்த வாணிபக் கிடங்கு நெல்லை மாவட்டம் நாங்குநேரி, வள்ளியூர், ராதாபுரம் வேளாண்மைக் கூட்டுறவு சங்கத்தின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. அதன் தலைவராக ஆளுங்கட்சியைச் சேர்ந்த முருகேசன் என்பவர்தான் இருக்கிறார். முருகேசனும் அ.தி.மு.க எம்.எல்.ஏ-வான இன்பதுரையும் சேர்ந்து இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.

அப்பாவு, இன்பதுரை
அப்பாவு, இன்பதுரை

சில மாதங்களுக்கு முன்னர் ரேஷன் கடை ஊழியர்களிடம், ‘நீங்கள் இப்போது வழங்கும் 2,000 ரூபாய் போதுமானதல்ல. இனிமேல் மாதந்தோறும் 5,000 ரூபாய் கொடுக்க வேண்டும்’ என்று முருகேசன் லஞ்சம் கேட்டு மிரட்டிய ஆடியோ வெளியானது. ஆனாலும், அவர்மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதற்குக் காரணம் எம்.எல்.ஏ இன்பதுரையுடனான நெருக்கம்தான். இதேபோல அம்பாசமுத்திரம் பகுதியிலும் ரேஷன் அரிசி பிடிபட்டது. அரசியல் அழுத்தம் காரணமாக விடுவித்துள்ளனர்.

நெல்லை மாவட்டத்தில் நடந்த முறைகேடு குறித்து நெல்லை மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்திருக்கிறேன். இதேபோல் மத்திய அரசு வழங்கிய 5,34,000 மெட்ரிக் டன் அரிசியிலும் மோசடி நடந்திருக்க வாய்ப்புள்ளது. வெளி மார்க்கெட்டில் வாங்கும் அரிசிக்குக் கிலோவுக்கு 22.50 ரூபாய் என விலை நிர்ணயம் செய்துள்ளது அரசு. அதன் அடிப்படையில் பார்த்தால் கடந்த மூன்று மாதங்களில் 1,200 கோடி ரூபாய் மோசடி நடந்திருந்திருக்கும். மாநிலம் முழுவதும் நடந்துள்ள ரேஷன் அரிசி மோசடி பற்றி விசாரணை நடத்துமாறு மாநில லஞ்ச ஒழிப்புத் துறையினரிடமும் புகார் அளித்திருக்கிறேன். இந்த மோசடிக்குப் பொறுப்பேற்று உணவுத்துறை அமைச்சர் காமராஜ் பதவி விலக வேண்டும். இல்லாவிட்டால் நீதிமன்றத்தில் வழக்கு தொடருவேன்’’ என்றார் காட்டமாக

இது குறித்து விளக்கம் கேட்க அமைச்சர் காமராஜைத் தொடர்புகொண்டோம். அவரின் பி.ஏ-தான் அழைப்பை ஏற்றார். விவரங்களைக் கேட்டுக்கொண்டவர், அமைச்சரிடம் கேட்டு பதில் சொல்வதாகத் தெரிவித்தார். பிறகு தொடர்பு கொண்டபோது அழைப்பை ஏற்கவில்லை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கலெக்டரிடம் புகார் கொடுக்க வந்த அப்பாவு...
கலெக்டரிடம் புகார் கொடுக்க வந்த அப்பாவு...

ராதாபுரம் எம்.எல்.ஏ-வான இன்பதுரையிடம் (அ.தி.மு.க) பேசினோம். ‘‘அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக அப்பாவு என்மீது புகார் கொடுத்திருக் கிறார். அப்பாவுவின் பேரனான பிரேம், அரசு நிலத்தை ஆக்கிரமித்து வீடு கட்டுவதாக அந்தப் பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த புகாரின் அடிப்படையில் அவர்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அத்துடன், கட்டுமானப் பணிகளுக்கும் தடை விதிக்கப்பட்டது. அதுமட்டுமல்ல, அப்பாவு தன்னுடைய வீட்டின் பின்புறம் நீரோடையை மறித்து மதில் சுவர் கட்டிவிட்டார். உயர் நீதிமன்ற மதுரை கிளை ஆணைப்படி அந்த ஆக்கிரமிப்பை அகற்ற பொதுப்பணித்துறை நோட்டீஸ் வழங்கிவிட்டதாகத் தெரிகிறது. இந்த இரு சம்பவங்களால் மனம் நொந்துபோன அப்பாவு தேவையில்லாமல் இப்படி ஆளுங்கட்சிக்கு எதிராக அவதூறு பரப்புகிறார்.

அதுமட்டுமல்ல, இந்த வழக்கில் கைதான முக்கியக் குற்றவாளியான சுயம்புலிங்கம்

அ.தி.மு.க ஆதரவாளர் கிடையாது அப்பாவுவின் ஆதரவாளர்தான். அவர் மட்டுமல்ல... அவருடன் கைது செய்யப்பட்ட வள்ளியூர், நாங்குநேரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் நகர்வு அதிகாரியான (டிரான்ஸ்போர்ட் இன்சார்ஜ்) விஜயசாவாமிநாதன், தி.மு.க தொழிற்சங்க நிர்வாகி. அப்படி இருக்கையில் இதில் எப்படி அ.தி.மு.க-வைக் குற்றம்சாட்ட முடியும்?’’ என்று படபடத்தார்.

ஆக மொத்தத்தில் அ.தி.மு.க, தி.மு.க இரு தரப்பினருமே தனித்தனியாகக் களவாணித் தனத்தில் ஈடுபட்டுவிட்டு, மாட்டிக்கொண்டதும் ஒருவர்மீது ஒருவர் பழியைப் போடுகின்றனர் என்பது மட்டும் தெளிவாகத் தெரிகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு