Election bannerElection banner
Published:Updated:

தே.மு.தி.க கேட்பதைக் கொடுக்கத் தயங்கும் அ.தி.மு.க..! - இழுபறியின் பின்னணி என்ன?

விஜயகாந்த், பிரேமலதா
விஜயகாந்த், பிரேமலதா

``2016-ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தே.மு.தி.க-வின் வாக்கு சதவிகிதம் 2.39-ஆகவும், 2019 நாடாளுமன்ற தேர்தலில் 2.19%-ஆகவும் குறைந்துகொண்டே வருகிறது என்றும் புள்ளிவிவரங்களை அடுக்கியிருக்கிறார்கள்.”

தமிழகத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு அ.தி.மு.க., தி.மு.க கட்சிகள் தங்கள் கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு குறித்துப் பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றன. அ.தி.மு.க கூட்டணியில் பா.ம.க-வுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன. அதேபோல பா.ஜ.க உடனான தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையும் சுமுகமாக முடிவுக்கு வந்திருக்கிறது எனக் கூறப்படுகிறது. ஆனால், தே.மு.தி.க-வுடனான கூட்டணிப் பேச்சுவார்த்தைதான் தொடர்ந்து இழுபறியில் இருக்கிறது.

பிரேமலதா
பிரேமலதா

தே.மு.தி.க-வுடன் கூட்டணி குறித்துப் பேச்சுவார்த்தை நடத்த அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, அ.தி.மு.க துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி ஆகியோர் விஜயகாந்த் மற்றும் தே.மு.தி.க இளைஞரணிச் செயலாளர் சுதீஷை கடந்த வாரம் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார்கள். அப்போதும் எந்த முடிவும் எட்டப்படவில்லை என்று கூறப்படுகிறது.

கூட்டணியிலிருந்து விலகிய கட்சிகள்; பா.ம.க கூட்டணி அறிவிப்பு! - தேர்தல் அறிவிப்பும் அதிரடிகளும்

இந்தநிலையில், அமைச்சர் தங்கமணி இல்லத்தில் தே.மு.தி.க நிர்வாகிகள் அழகாபுரம் மோகன்ராஜ், பார்த்தசாரதி, இளங்கோவன் உள்ளிட்டோர் கூட்டணி தொடர்பாக மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார்கள். அப்போது பா.ம.க-வுக்கு ஒதுக்கப்பட்டதுபோல் தே.மு.தி.க-வுக்கும் 23 தொகுதிகள் ஒதுக்க வேண்டும் அல்லது இருபது தொகுதிகளுடன் ஒரு நாடாளுமன்றத் தொகுதியை ஒதுக்க வேண்டும் என தே.மு.தி.க தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டிருக்கிறது. 10.5% வாக்குகள் இருக்கும் பா.ம.க-வுக்கும், மத்தியில் ஆட்சியிலுள்ள பா.ஜ.க-வுக்கும் 22 தொகுதிகளைத்தான் ஒதுக்குவதாக அ.தி.மு.க தலைமை முடிவு செய்திருக்கிறது.

பிரேமலதா சொல்வதுபோல தே.மு.தி.க-வுக்கு 10%-க்கும் அதிகமான வாக்குகள் இருக்கின்றன என்பது 2009-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றக் கணக்கு. அதன் பிறகு அ.தி.மு.க-வுடன் கூட்டணிவைத்து 29 தொகுதிகளில் வெற்றி பெற்று எதிர்க்கட்சியாக சட்டப்பேரவைக்குள் சென்றபோதுகூட அதன் வாக்கு விகிதம் 7.9%. இந்த அளவுக்கு வாக்குகள் கிடைத்ததற்குக்கூட அ.தி.மு.க-வுடனான கூட்டணிதான் காரணம். 2016-ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் தே.மு.தி.க-வின் வாக்கு சதவிகிதம் 2.39-ஆகவும் 2019 நாடாளுமன்றத் தேர்தலில் 2.19%-ஆகவும் குறைந்துகொண்டே வருகிறது என்றும் புள்ளிவிவரங்களை அடுக்கியிருக்கிறார்கள். மேலும், கட்சியின் வாக்கு விகிதம் இப்படி இறங்கு முகத்தில் இருக்கும்போது தே.மு.தி.க-வுக்கு 20 தொகுதிகளை எப்படி ஒதுக்குவது என்றவர்கள், தே.மு.தி.க-வுக்கு 9 அல்லது 10 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்படும் எனத் திட்டவட்டமாக கூறிவிட்டார்களாம்...

பா.ம.க - அ.தி.மு.க - தே.மு.தி.க
பா.ம.க - அ.தி.மு.க - தே.மு.தி.க

அ.தி.மு.க-வினரின் பேச்சில் அதிருப்தி அடைந்த தே.மு.தி.க-வினர் கூட்டணியை உறுதி செய்து விஜயகாந்த் கையெழுத்திட்ட கடிதத்தை மட்டும் கொடுத்துவிட்டு வந்திருக்கிறார்கள் என்கிறார்கள் கூட்டணி விவரம் அறிந்த சிலர். தொகுதிப் பங்கீடு தொடர்பான முடிவுகள் எதுவும் எட்டப்படவில்லை. அதாவது, `கூட்டணியில் தொடர்கிறோம்.’ ஆனால் தொகுதி பங்கீடில் இழுபறி நிலையே.

பேச்சுவார்த்தை தொடர்பாக தே.மு.தி.க வட்டாரத்தில் பேசியபோது ``குறைந்தது இரட்டை இலக்கத்தில் இடங்களை ஒதுக்கி தே.மு.தி.க-வை கௌரவப்படுத்த வேண்டும் என்பதுதான் எங்கள் கோரிக்கை. ஆனால், அ.தி.மு.க தரப்பில் இரட்டை இலக்கம் என்ற இடத்துக்கே செல்லத் தயங்குகிறார்கள்” என்றனர் ஆதங்கத்துடன்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு