Published:Updated:

ஒன் பை டூ: தி.மு.க-வுக்கு மாற்றுசக்தி பா.ஜ.க-வா?

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரால் தொடங்கப்பட்டு, அம்மா அவர்களால் வலிமையான இயக்கமாக வளர்த்தெடுக்கப்பட்டு, மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டது அ.தி.மு.க.

பிரீமியம் ஸ்டோரி

கரு.நாகராஜன், தமிழ்நாடு பா.ஜ.க பொதுச்செயலாளர்

“ஆமாம்... தி.மு.க-வுக்கு மாற்றுசக்தி பா.ஜ.க என்று எங்கள் மாநிலத் தலைவர் சொன்னதில் எந்த மிகைப்படுத்தலும் இல்லை. தி.மு.க-வின் தேசவிரோதக் கொள்கைகள், நடவடிக்கைகளுக்கு மாற்றுசக்தி, அவர்களை மாற்றக்கூடிய சக்தி பா.ஜ.க-தான். தங்களது தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், தி.மு.க அரசு காரணங்களை அடுக்கிக்கொண்டே செல்லும்போதெல்லாம், ‘பொய்யான வாக்குறுதிகளை அளித்து, தேர்தலுக்காக இரட்டை வேடமிட்டார்கள்’ என்பதை மக்களிடம் சேர்ப்பதும் பா.ஜ.க-தான். பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு குறைத்ததைத் தொடர்ந்து பல மாநிலங்கள் வாட் வரியைக் குறைத்து, மக்களின் சுமையை மத்திய அரசுடன் பகிர்ந்துகொண்டிருக்கின்றன. ஆனால், தமிழ்நாட்டில் தி.மு.க அரசு அதற்கும் காரணங்களைச் சொல்லி பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்காமல் நழுவிக்கொண்டிருக்கிறது. இந்தத் தவறுகளையெல்லாம் தமிழ்நாடு பா.ஜ.க சுட்டிக்காட்டிவருகிறது. அ.தி.மு.க-வைப் பொறுத்தவரை அவர்கள் ஒரு மாநிலக் கட்சி. அந்த எல்லைக்குள் இருந்து அவர்களால் முடிந்ததைச் செய்துகொண்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை வேகமாக வளர்ந்துவரும் பா.ஜ.க-வை நோக்கியே மக்கள் வருகிறார்கள். இந்திய அளவில் மட்டுமல்ல... தற்போது தமிழ்நாட்டிலும் தமிழர்களுக்கான உரிமைகளுக்காகக் குரல் கொடுத்துவருகிறோம். எனவே, தி.மு.க-வுக்கு மாற்று சக்தியாக இருக்கும் தகுதி பா.ஜ.க-வுக்கே இருக்கிறது!”

ஒன் பை டூ: தி.மு.க-வுக்கு மாற்றுசக்தி பா.ஜ.க-வா?
ஒன் பை டூ: தி.மு.க-வுக்கு மாற்றுசக்தி பா.ஜ.க-வா?

டி.ஜெயகுமார், முன்னாள் அமைச்சர், அ.தி.மு.க

“புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரால் தொடங்கப்பட்டு, அம்மா அவர்களால் வலிமையான இயக்கமாக வளர்த்தெடுக்கப்பட்டு, மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டது அ.தி.மு.க. நாங்கள் 30 ஆண்டுகள் ஆட்சி புரிந்திருக்கிறோம். 10 ஆண்டுகளுக்கும் மேல் எதிர்க்கட்சியாகவும் இருந்திருக்கிறோம். உள்ளங்கை நெல்லிக்கனிபோல அ.தி.மு.க-வின் வெற்றி வரலாறு அனைவருக்கும் தெரிந்ததுதான். இப்போது எதிர்க்கட்சியாக இருந்தாலும், நிச்சயம் 2026-ல் ஆளுங்கட்சியாகப்போவது அ.தி.மு.க-தான். நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலிலேயே எங்களுக்கும், ஆளும் தி.மு.க அரசுக்கும் இடையே 15 லட்சம் வாக்குகள்தான் வித்தியாசம்... நூலிழை வித்தியாசத்தில்தான் நாங்கள் ஆட்சியை இழந்தோம் என்பதை யாரும் புறந்தள்ளிவிட முடியாது. பொதுவாக ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் கட்சியை வளர்த்தெடுப்பதற்காகவும், தொண்டர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்துவதற்காகவும் ‘நாங்கள்தான் மிகப்பெரிய கட்சி, ஆளுங்கட்சிக்கு மாற்று’ என்றெல்லாம் பேசுவார்கள். அப்படித்தான் பா.ஜ.க-வும் பேசிக் கொண்டிருக்கிறது. அதைப் பெரிதுபடுத்தத் தேவையில்லை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அ.தி.மு.க ஆளுங்கட்சியாக இருக்கும் அல்லது ஆளும் தரப்புக்கு மாற்றுசக்தியாக இருக்கும். இதில் எந்த மாற்றமும் இல்லை!”

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு