Published:Updated:

"கட்சி என்னைய கைவிட்டுடுச்சுண்ணே!" - எடப்பாடியிடம் வருத்தப்பட்ட ஜெயக்குமார்

ஜெயக்குமார்

புழல் சிறையில் தன்னைச் சந்தித்த அ.தி.மு.க இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியிடம், 'கட்சி என்னைய கைவிட்டுடுச்சுண்ணே' என்று வருத்தப்பட்டிருக்கிறார் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார். அவர் அப்படிப் பேசியதற்குக் காரணமென்ன

"கட்சி என்னைய கைவிட்டுடுச்சுண்ணே!" - எடப்பாடியிடம் வருத்தப்பட்ட ஜெயக்குமார்

புழல் சிறையில் தன்னைச் சந்தித்த அ.தி.மு.க இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியிடம், 'கட்சி என்னைய கைவிட்டுடுச்சுண்ணே' என்று வருத்தப்பட்டிருக்கிறார் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார். அவர் அப்படிப் பேசியதற்குக் காரணமென்ன

Published:Updated:
ஜெயக்குமார்

உள்ளாட்சித் தேர்தலின்போது, சென்னை மாநகராட்சியின் 49-வது வார்டில் தி.மு.க-வினர் கள்ள ஓட்டுப் போடுவதாக புகார் எழுந்தது. அந்தச் சமயத்தில், தி.மு.க தொண்டர் ஒருவரைப் பிடித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அவர் கள்ள ஓட்டுப் போடுவதாகக் குற்றம்சாட்டினார். அந்தத் தொண்டரின் சட்டையைக் கழற்றவைத்து, அரை நிர்வாணமாக அழைத்துச் சென்று போலீஸிடமும் ஒப்படைத்தார். இந்தச் சம்பவம் அப்போது பரபரப்பைக் கிளப்பியது. ஜெயக்குமாரின் செயலுக்கு எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆதரவு தெரிவித்த நிலையில், ஆளுங்கட்சி இதை ரசிக்கவில்லை.

அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

இந்தச் சம்பவம் தொடர்பாக தொண்டர்களுக்குக் கடிதம் எழுதிய முதல்வர் ஸ்டாலின், "ஜெயக்குமார்மீது சட்டரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும். அப்போது, அவர்களின் சட்டை மட்டுமல்ல, மொத்தமும் கழன்று போகிற வகையில் அம்பலப்படுவார்கள்" என்று சீறியிருந்தார். அந்தச் சீற்றம் குறைவதற்கு முன்னரே, ஜெயக்குமாரைக் கைதுசெய்தது தண்டையார்பேட்டை காவல்துறை. பூந்தமல்லி கிளைச் சிறையில் அடைக்கப்பட்ட ஜெயக்குமார், பிறகு புழல் சிறைக்கு மாற்றப்பட்டார். இந்தச் சூழலில்தான், பிப்ரவரி 24-ம் தேதி ஜெயலலிதாவின் பிறந்தநாள் கொண்டாட்டங்களை முடித்த கையோடு, சிறையிலுள்ள ஜெயக்குமாரை எடப்பாடி பழனிசாமி சந்தித்துப் பேசியிருக்கிறார். அப்போது, அவரிடம் தன் வருத்தத்தைப் பகிர்ந்திருக்கிறார் ஜெயக்குமார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்தச் சந்திப்பு குறித்து அ.தி.மு.க-வின் சீனியர்கள் சிலரிடம் பேசினோம். "ஜெயக்குமார் கைதுசெய்யப்பட்டபோது, சென்னையிலுள்ள மாவட்டச் செயலாளர்களில் ஆதி ராஜாராமைத் தவிர வேறு யாரும் அரசுக்கு எதிராகக் குரல்கூட எழுப்பவில்லை. எழும்பூர் நீதிமன்ற வாசலில் வந்து நின்றதோடு அமைதியாகக் கிளம்பிவிட்டனர். இது ஜெயக்குமார் குடும்பத்தை மன உளைச்சலுக்குள்ளாக்கிவிட்டது. கட்சித் தலைமை வரை வருத்தத்தைப் பதிவுசெய்தனர். இதைத் தொடர்ந்துதான் புழல் சிறையிலுள்ள ஜெயக்குமாரை எடப்பாடி பழனிசாமி, எஸ்.பி.வேலுமணி, பெஞ்சமின் உள்ளிட்டோர் சந்தித்துப் பேசினர். அப்போது எடப்பாடியிடம் வெடித்துத் தீர்த்துவிட்டார் ஜெயக்குமார்.

ஜெயக்குமார்
ஜெயக்குமார்

`என்னைய அரெஸ்ட் பண்ணி ரெண்டு மணி நேரம் சென்னைக்குள்ளேயே ரவுண்ட் அடிச்சுட்டு இருந்தது போலீஸ். ஆனா, என் தொகுதியில இருக்குற கட்சிக்காரங்களைத் தவிர, சென்னையில இருக்குற வேற யாருமே எட்டிக்கூட பார்க்கலை. மாவட்டச் செயலாளர்கள்கூட வரலை. என் மகன் ஜெயவர்தன் மீடியாவுக்குப் பேட்டி கொடுத்த பிறகுதான், பேருக்கு ஒண்ணு ரெண்டு பேர் வந்திருக்காங்க. கட்சி சார்புல ஒரு கண்டன ஆர்ப்பாட்டம்கூட நடத்தலை. இப்போகூட, என்னையப் பார்க்க நீங்க மட்டும்தான் வந்திருக்கீங்க. பன்னீர் அண்ணன் வரலை. கட்சி என்னைய கைவிட்டுடுச்சுண்ணே' என்று வருத்தப்பட்டிருக்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அவரை ஆறுதல்படுத்திய எடப்பாடி, 'உங்கள யாரும் கைவிடலை. கட்சி உங்க பின்னாடி நிக்கும். யார் வந்தாலும் வரலைன்னாலும் நான் உங்ககூட இருப்பேன். தைரியமா இருங்க' என்று சொல்லிவிட்டுக் கிளம்பியிருக்கிறார். இதைத் தொடர்ந்துதான், ஜெயக்குமார் கைதைக் கண்டித்து தமிழகம் தழுவிய ஆர்ப்பாட்டத்துக்கு அ.தி.மு.க அழைப்புவிடுத்தது. பிப்ரவரி 25-ம் தேதி சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் ஜெயக்குமார் ஆஜர்படுத்தப்பட்டபோது, சீனியர் தலைவர்களான நத்தம் விசுவநாதன், எம்.சி.சம்பத், உடுமலை ராதாகிருஷ்ணன், மனோஜ் பாண்டியன் ஆகியோர் அவரைச் சந்தித்தனர். அப்போது அவர்களிடம், 'கேஸ் மேல கேஸ் போடுறாங்கண்ணே. ஆனா, இதுக்கெல்லாம் நான் கலங்கப் போறதில்லை. எல்லாத்துக்கும் சேர்த்துவெச்சு அவங்க அனுபவிப்பாங்க' என்று ஆக்ரோஷமாகப் பேசிவிட்டுக் கிளம்பினார். ஜெயக்குமாரின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டிருக்கும் நிலையில், அவருக்குச் சிக்கல் நீடிக்கிறது" என்றனர்.

பன்னீர்செல்வம்
பன்னீர்செல்வம்

இதற்கிடையே, சிறையில் ஜெயக்குமாரை பன்னீர் நேரில் வந்து சந்திக்காதது அ.தி.மு.க-வினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. 'அவர் நடந்துக்கிட்டது தப்புதானே' என்று பன்னீர் கூறியதாகக் கட்சிக்குள் பேச்சு எழுந்திருக்கிறது. இதனால்தான், புழலுக்கு ஜெயக்குமாரைப் பார்க்க அவர் செல்லவில்லை என்கிறார்கள். இதை பன்னீர் தரப்பு மறுக்கவும் செய்திருக்கிறது. பன்னீருக்கு நெருக்கமான அமைப்புச் செயலாளர் ஒருவர், "புழலுக்கு எடப்பாடி செல்லவிருப்பது பன்னீருக்குத் தெரியாது. பன்னீரை அவர்கள் அழைக்கவுமில்லை. 'கட்சிக்காரர்களுக்குப் பிரச்னையென்றால் நான் மட்டும்தான் முன்னால் வருவேன்' என்று காட்டுவதற்காக எடப்பாடி இப்படியொரு நாடகத்தை நடத்தியிருக்கிறார். ஜெயக்குமார் மீது பன்னீருக்கு எந்த வருத்தமும் இல்லை" என்றார்.

இந்தச் சூழலில், ஜெயக்குமார்மீது தொழிற்சாலையை மிரட்டி அபகரித்ததாக மற்றொரு வழக்கு பதிவாகியிருக்கிறது. ஒரு வழக்கில் ஜாமீன் கிடைத்தாலும், மற்றொரு வழக்கில் ஜாமீன் கிடைக்காத சூழல்தான் நிலவுகிறது. இப்போதைக்கு அவரை விடுவிக்க ஆளும்தரப்பு தயாராக இல்லை என்பதால், ஜெயக்குமாரைச் சூழ்ந்திருக்கும் சிக்கல்கள் இப்போதைக்கு விடுபடாது என்கிறார்கள் விவரமறிந்த வழக்கறிஞர்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism