Election bannerElection banner
Published:Updated:

'நல்லதைச் சொன்னதற்காகப் பழிவாங்கப்பட்டேன் ' - கட்சிப் பொறுப்பை ராஜினாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ

ரத்தினசபாபதி
ரத்தினசபாபதி

மீண்டும் எனக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதற்கான காரணத்தைத் தலைமை கொடுக்காத நிலையில், எனது வாயை அடைப்பதற்குத்தான் எனக்கு பொறுப்பைக் கொடுத்திருக்கிறார்கள். இவர்களோடு பதவியிலிருந்து பயணிப்பதைவிட, பதவியேதும் இல்லாமல், வெறும் தொண்டனாக இருப்பதைத்தான் பெருமையாக நினைக்கிறேன்.

அறந்தாங்கி தொகுதி அ.தி.மு.க எம்.எல்.ஏ-வான ரத்தினசபாபதிக்கு இந்தத் தேர்தலில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டது. முன்னாள் எம்.எல்.ஏ ராஜநாயகம் அறந்தாங்கி தொகுதி அ.தி.மு.க வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இதற்கிடையே, கடந்த சில தினங்களுக்கு முன்பு செய்தியாளர்களைச் சந்தித்த ரத்தினசபாபதி, "தொகுதியில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டது ஏன் என முதலமைச்சரிடம் கேட்டபோது, அவரிடமிருந்து எந்த பதிலும் கிடைக்கவில்லை. மாவட்டத்தில் நிறுத்தப்பட்டுள்ள அ.தி.மு.க வேட்பாளர்களை உள்ளூர் கட்சியினரே ஏற்றுக்கொள்ளவில்லை. வேட்பாளர் தேர்வு சரியில்லாததால், வெற்றிவாய்ப்பு கேள்விக்குறியே" என்று கூறியிருந்தார்.

அதோடு, அறந்தாங்கி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ராஜ நாயகத்துக்கு ஆதரவாகவும் ரத்தினசபாபதி தேர்தல் பணியில் ஈடுபடவில்லை. இதையடுத்து, அவரை சமாதானப்படுத்தும் வகையில், கடந்த 23-ம் தேதி புதுக்கோட்டை தெற்கு மாவட்ட அவைத்தலைவர் பதவியை தலைமை கொடுத்திருந்தது.

ரத்தினசபாபதி
ரத்தினசபாபதி

இந்தநிலையில், தலைமை வழங்கிய அந்தப் பொறுப்பை ராஜினாமா செய்திருக்கிறார் ரத்தினசபாபதி. ராஜினாமா குறித்து, கழக இணை ஒருங்கிணைப்பாளர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கும், கழக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வத்துக்கும் ரத்தினசபாபதி அனுப்பிய கடிதத்தில், "புதுக்கோட்டை தெற்கு மாவட்ட கழக அவைத்தலைவராக நியமனம் செய்ததற்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். மாவட்ட கழக அவைத்தலைவர் பொறுப்பில் தொடர்ந்து செயல்பட முடியாத சூழ்நிலையில் நீங்கள் அறிவித்த அந்தப் பதவியிலிருந்து என்னை விடுவித்துக்கொள்கிறேன் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டிருக்கிறார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ரத்தினசபாபதி,

``அறந்தாங்கி தொகுதியில் மீண்டும் போட்டியிட எனக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதற்கான காரணத்தைத் தலைமை கொடுக்கவில்லை. எனது வாயை அடைப்பதற்குத்தான் இந்தப் பொறுப்பைக் கொடுத்திருக்கிறார்கள். இவர்களோடு பதவியிலிருந்து பயணிப்பதைவிட, பதவியேதும் இல்லாமல், வெறும் தொண்டனாக இருப்பதைத்தான் பெருமையாக நினைக்கிறேன். நான் ஆரம்பத்திலிருந்தே அ.தி.மு.க., அ.ம.மு.க எல்லோரும் ஒன்றுபட வேண்டும் என்று சொல்லிக்கொண்டுவருகிறேன். நான் ஆரம்பகாலத்துக் கட்சிக்காரன் என்ற உரிமையோடு அன்றைக்கு அப்படிச் சொன்னேன். ஆனால், பதவியின் உச்சத்திலிருந்ததால், என்னுடைய சொல்லுக்கு அவர்கள் செவிமடுக்கவில்லை. அதனால்தான் வெளியேறி தினகரனுடன் பயணித்தேன். திரும்பவும் அ.தி.மு.க-வில் வந்து சேர்ந்தேன். அந்த நன்மையைச் சொன்னதற்காக இன்றைக்கு நான் பழிவாங்கப்பட்டு, அறந்தாங்கியில் எனக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டிருக்கிறது.

`Danger Zone'ல் அமைச்சர்கள்... அதிமுக-வின் வெற்றிவாய்ப்பு எப்படி?

இன்றைக்கு ஒவ்வொரு தொகுதியிலும் 15,000 - 20,000 வாக்குகளை அ.ம.மு.க வேட்பாளர்கள் பிரிக்கப்போகிறார்கள். கடந்த முறை மக்கள் நலக்கூட்டணியிலிருந்த கட்சிகள் இன்றைக்கு தி.மு.க-வுடன் பயணிக்கின்றன. இத்தகைய சூழலில் என்ன முடிவு வரும்... வெற்றிபெற வேண்டிய இயக்கம் பின்னடைவை நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறது. மிகப்பெரிய தோல்வியடைந்துவிடுவோமோ என்ற பயம் எனக்கு அதிகரித்திருக்கிறது. தனக்குப் பின்னாலும், கட்சியும் ஆட்சியும் நூறு ஆண்டுக்காலம் இருக்கும் என்ற அம்மாவின் எண்ணம் நிறைவேறாமல் போய்விடுமோ என்ற ஆதங்கத்தில்தான் ராஜினாமா செய்திருக்கிறேன்.

அ.ம.மு.க., சசிகலா எல்லாம் மாற்றுக் கட்சி கிடையாது. இயக்கத்திலுள்ள கருத்து வேறுபாடுகள்தான். அவர்கள்தான் இவர்களை முதல்வர்களாக்கினார்கள். பிரிந்திருந்தால், நிச்சயம் வெற்றிபெற முடியாது. முதல்வர் என்னைச் சமாதானம் செய்யவில்லை. என்னுடைய கேள்விக்கு விளக்கமும் அளிக்கவில்லை. காலப்போக்கில் எல்லாரும் ஒன்றிணைந்து பதவி கொடுத்தால் அதை ஏற்றுக்கொள்வேன். எந்த அரசியல் கட்சியாக இருந்தாலும் சரி, சுயேச்சை வேட்பாளர்களாக இருந்தாலும் சரி... மக்களை விலைகொடுத்து வாங்கிவிடலாம் என்று யார் நினைத்தாலும் அது மடத்தனம். பணத்தைக் கொடுத்தால் வாங்கிக்கொள்வார்கள். ஆனால், யாருக்குத் தீர்ப்பு எழுத வேண்டும் என்று அவர்களுக்கு நன்கு தெரியும்" என்றார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு