Published:Updated:

`3 இடங்கள்; தே.மு.தி.க கோரிக்கை!' - மாநிலங்களவையைக் குறிவைக்கும் அ.தி.மு.க நெல்லைப் பிரபலங்கள்

அ.தி.மு.க அலுவலகம்
அ.தி.மு.க அலுவலகம்

மாநிலங்களவையில் அ.தி.மு.க-வுக்கு மூன்று இடங்கள் கிடைக்கும் வாய்ப்பு இருப்பதால், அதைக் கைப்பற்ற அ.தி.மு.க பிரபலங்கள் பலரும் தயாராகி வருகிறார்கள். 

மாநிலங்களவையில் ஏப்ரல் மாதம் தமிழகத்தைச் சேர்ந்த ஆறு பேரின் பதவிக் காலம் நிறைவடைகிறது. நெல்லையைச் சேர்ந்தவரும் அ.தி.மு.க மாநில மகளிரணியைச் சேர்ந்தவருமான விஜிலா சதயானந்த், முன்னாள் மாவட்டச் செயலாளர் முத்துக்கருப்பன், மேட்டுப்பாளையம் செல்வராஜ், சசிகலா புஷ்பா, மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த டி.கே.ரங்கராஜன், தி.மு.க-வைச் சேர்ந்த திருச்சி சிவா ஆகியோரின் பதவிக் காலம் முடிவடைகிறது. 

முத்துக்கருப்பன் எம்.பி
முத்துக்கருப்பன் எம்.பி

தற்போதையை சட்டமன்ற உறுப்பினர்களின் நிலவரப்படி, தி.மு.க சார்பாக மூன்று பேரும் அ.தி.மு.க சார்பாக மூன்று பேரும் மாநிலங்களவை உறுப்பினர்களாகத் தேர்வாகும் வாய்ப்பு இருக்கிறது. அதனால் மாநிலங்களவை உறுப்பினராகும் எண்ணத்தில் அ.தி.மு.க-வினர் பலரும் காய் நகர்த்தத் தொடங்கியிருக்கிறார்கள்.

அ.தி.மு.க-வைப் பொறுத்தவரை, கட்சியின் முன்னணி நிர்வாகிகள் பலரும் மாநிலங்களவை உறுப்பினராகும் நோக்கத்துடன் கட்சித் தலைமைக்கு நெருக்கடிகொடுக்கத் தொடங்கியுள்ளனர். சமீபத்தில், உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக மாவட்ட நிர்வாகிகளுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் ஆலோசனைக் கூட்டம் நடத்தியபோதே, பலரும் இதுகுறித்து தங்கள் விருப்பத்தை வெளிப்படுத்தினார்கள்.

விஜிலா சத்யானந்த்
விஜிலா சத்யானந்த்

பல்வேறு மாவட்டங்களிலும் உள்ள அ.தி.மு.க நிர்வாகிகள், இப்போதே கட்சித் தலைமையிடம் தங்கள் விருப்பத்தை வெளிப்படுத்திவருகிறார்கள். பதவிக் காலம் முடிவடைய உள்ள விஜிலா சத்யானந்த், முத்துக்கருப்பன் ஆகியோரும் மீண்டும் தங்களுக்கே வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார்கள்.

அ.தி.மு.க தலைமை, இந்த முறை புதியவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்க முடிவெடுத்துள்ளதாகத் தெரிகிறது. ஆனால், நெல்லையைச் சேர்ந்த முன்னாள் எம்.பி -க்களான பி.ஹெச்.மனோஜ் பாண்டியன், கே.ஆர்.பி.பிரபாகரன் ஆகியோரும் மாநிலங்களவை உறுப்பினராகும் கனவில் இருக்கிறார்கள்.

மனோஜ் பாண்டியன்
மனோஜ் பாண்டியன்

அ.தி.மு.க-வில் இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த முகமது ஜான் மாநிலங்களவை உறுப்பினராக இருக்கும் நிலையில், கிறிஸ்தவ சமூகத்துக்கு பிரதிநிதித்துவம் இல்லை என்கிற குறை உள்ளது. அத்துடன், நாடார் சமூகத்தினருக்கு தமிழக அமைச்சரவையில் போதிய பிரதிநிதித்துவம் இல்லை என்கிற ஆதங்கம் அந்தச் சமூகத்தினரிடம் இருக்கிறது என்கிறார்கள்.

இந்தக் குறையைப் போக்கும் வகையில், நெல்லை மாவட்ட ஜெ.பேரவைச் செயலாளரான கே.ஜே.சி.ஜெரால்டு,  மாநிலங்களவை உறுப்பினராக்கப்படுவார் என்கிற பேச்சு உள்ளது. எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இருவருக்குமே நெருக்கமானவர் என்பதால், அவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று உறுதியாக நம்புகிறார்கள், நெல்லை அ.தி.மு.க நிர்வாகிகள். 

கே.ஜே.சி.ஜெரால்டு
கே.ஜே.சி.ஜெரால்டு

அ.தி.மு.க-வுக்கு வாய்ப்பு உள்ள மூன்று இடங்களில் ஒன்றை தே.மு.தி.க கேட்கிறது. ஏற்கெனவே, அ.தி.மு.க சார்பாக ப.ம.க -வுக்கு ஓர் இடம் வழங்கப்பட்டுவிட்ட நிலையில், தங்களுக்கும் ஓர் இடம் ஒதுக்க வேண்டும் என அக்கட்சித் தலைமை அடம் பிடிக்கிறது. இந்த விவகாரம் குறித்து அ.தி.மு.க தொண்டர்கள் இப்போதே பரபரப்பாக விவாதிக்கத் தொடங்கிவிட்டார்கள்.

அடுத்த கட்டுரைக்கு