அ.தி.மு.க பொதுக்குழு கடந்த 11-ம் தேதி சென்னை வானகரத்தில் நடைபெற்றது. அதில் கட்சியின் இடைக்காலப் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி ஒருமனதாகத் தேர்வுசெய்யப்பட்டார். இதற்கிடையே, எடப்பாடி தரப்பால் ஓரங்கட்டப்பட்ட ஓ.பன்னீர்செல்வம், மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் உள்ளிட்டோர் ராயப்பேட்டையிலுள்ள கட்சித் தலைமை அலுவலகத்துக்கு வந்தனர்.

அப்போது, அங்கிருந்த எடப்பாடி தரப்பினர் அவர்களைத் தடுக்க முயன்றனர். இதனால், ஏற்பட்ட சண்டை... கல்வீச்சு, அடிதடி என வன்முறையானது. இதனால், வன்முறையைக் கட்டுக்குள் கொண்டுவர கட்சி அலுவலகத்துக்கு வருவாய்த்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இதையடுத்து, அலுவலகத்துக்கு வைக்கப்பட்ட சீலை அகற்றக் கோரி ஓ.பி.எஸ்., இ.பி.எஸ் என இரு தரப்பும் தனித்தனியாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்தன. அதன்படி, கட்சி அலுவலகத்தின் சீலை அகற்ற உத்தரவிட்டதோடு, எடப்பாடி தரப்பிடம் சாவி ஒப்படைக்கப்பட்டது. அதேபோல, அலுவலகத்துக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்குவதோடு, அ.தி.மு.க தொண்டர்களை ஒரு மாதத்துக்கு அனுமதிக்கக் கூடாது என்றும் உத்தரவிட்டது. அதன்படி, கட்சி அலுவலகம் வருவாய்த்துறை அதிகாரிகளால் நேற்றைய தினம் திறக்கப்பட்டது.

இந்த நிலையில், ``நீதிமன்ற ஆணைப்படி கழகத் தொண்டர்களும், ஆதரவாளர்களும் 20.8.2022 வரை தலைமைக் கழகத்துக்கு வருவதைத் தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்" என அ.தி.மு.க தலைமை கழகம் அறிவிப்பு பலகை வைத்திருக்கிறது. இதன் காரணமாக, தலைமை அலுவலகம் மூடப்பட்டிருக்கிறது.