Published:Updated:

அதிமுக: ``கட்சியில் ஜூனியர்கள் பொறுப்புக்கு வரட்டுமே..!'' - மனம் திறக்கும் கோகுல இந்திரா

கோகுல இந்திரா

கோகுல இந்திராவிடம், தற்போது அ.தி.மு.க-வில் நிலவிவரும் அரசியல் சூழல் குறித்து சில கேள்விகளை முன்வைத்தோம்...

அதிமுக: ``கட்சியில் ஜூனியர்கள் பொறுப்புக்கு வரட்டுமே..!'' - மனம் திறக்கும் கோகுல இந்திரா

கோகுல இந்திராவிடம், தற்போது அ.தி.மு.க-வில் நிலவிவரும் அரசியல் சூழல் குறித்து சில கேள்விகளை முன்வைத்தோம்...

Published:Updated:
கோகுல இந்திரா

அ.தி.மு.க-வின் அமைப்புச் செயலாளர்களுள் ஒருவரும், முன்னாள் அமைச்சருமான கோகுல இந்திராவிடம், தற்போது அ.தி.மு.க-வில் நிலவிவரும் அரசியல் சூழல் குறித்து சில கேள்விகளை முன்வைத்தோம்..,

அதிமுக-வில் புதிய பொறுப்புகள்
அதிமுக-வில் புதிய பொறுப்புகள்

``கட்சியிலும் சரி சட்டமன்றத்திலும் சரி முக்கியப் பொறுப்புகள் எல்லாம் குறிப்பிட்ட சமூகங்களைச் சேர்ந்தவர்களுக்கே அதிக பிரதிநிதித்துவம் கொடுக்கப்படுகிறது என்கிற விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றனவே?''

``இந்த விமர்சனத்தை நான் நிச்சயமாக மறுக்கிறேன். சட்டமன்றத்தில் எந்த சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இருக்கிறார்களோ, அவர்களுக்குத்தான் பொறுப்புகள் வழங்க முடியும். அ.தி.மு.க-வைப் பொறுத்தவரை, எல்லாருக்கும் சரிசமமான வாய்ப்புகளும், முக்கியத்துவமும் கொடுக்கப்படுகின்றன. இன்னும் பொதுக்குழுத் தீர்மாங்கள் அங்கீகரிக்கப்படவில்லை. நீதிமன்றத்திலும் வழக்குகள் இருக்கின்றன. எல்லாம் சரியாகி ஒரு சுமுக நிலையை எட்டும்போது ஆட்சிமன்றக்குழு உள்ளிட்ட பல பதவிகள் உருவாக்கப்பட்டு அனைவருக்கும் முக்கியப் பொறுப்புகள் வழங்கப்படும்.''

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

``கோகுல இந்திராவே ஒற்றைத் தலைமையாக வந்திருக்கலாமே என்கிறாரே நாஞ்சில் சம்பத்?''

``ஹா ஹா ஹா... நான்காண்டுகள் முதலமைச்சராக இருந்தபோது எல்லா வகையிலும் அண்ணன் எடப்பாடியார் ஆளுமைத்திறன் மிக்கவராகத் திகழ்ந்ததை நாங்கள் அனைவரும் பார்த்திருக்கிறோம். நான் மிகைப்படுத்தி எல்லாம் சொல்லவில்லை. அதேபோல, கட்சி நிர்வாகிகள் எளிமையாக அணுகமுடிகிற நபராகவும் அவர் இருந்தார். தி.மு.க-வை எதிர்ப்பதிலும் அவர் தீர்க்கமாக இருந்தார். அப்படி எல்லோராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய நபராக அவரே கட்சியில் இருக்கிறார்''

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

`` கட்சியில் உங்களுக்கு முக்கியப் பொறுப்புகள் எதுவும் வழங்கப்படவில்லையே?''

``தலைமைக் கழக பொறுப்புகள் என்று பார்த்தால் நான் வகிக்கும் அமைப்புச் செயலாளர் என்பது நல்ல பதவிதான். தேர்தல் வேலை உள்ளிட்ட பல விஷயங்களில் எனக்கு கட்சியில் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இந்தப் பதவியை வைத்துக்கொண்டு கட்சியின் வளர்ச்சிக்கு என்ன செய்யலாம் என்றுதான் நான் பார்க்கிறேன். தவிர, கட்சியில் நான் பல்வேறு பொறுப்புகளில் இருந்திருக்கிறேன். அடுத்தகட்டமாக கட்சியில் ஜூனியர்கள் பொறுப்புக்கு வரட்டுமே... அடுத்தடுத்த வாய்ப்புகளில் நிச்சயமாக முக்கியப் பதவிகள் வரும். அதனால், எனக்கு எந்த மனசங்கடங்களும் இல்லை.''

`` எடப்பாடி பழனிசாமி கட்சியில் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை என்கிற குரல் தொடர்ந்து ஒலிக்கிறதே?''

``இல்லையே. தேர்தலில் மகளிருக்கு எம்.எல்.ஏ சீட் வழங்கப்பட்டிருக்கிறது. பலருக்கு அமைப்புச் செயலாளர் உள்ளிட்ட பொறுப்புகள் வழங்கப்பட்டிருக்கின்றன. தவிர, எல்லாவற்றையுமே இ.பி.எஸ் நேரடியாகப் பார்க்கவேண்டும் என்கிற அவசியமில்லை. ஒவ்வொரு மாவட்டத்திலும் மா.செயலாளர்கள், மாவட்ட மகளிரணி நிர்வாகிகள் எல்லாம் இருக்கிறார்கள். அவர்கள் முக்கியத்துவம் கொடுத்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். இந்த வருட மார்ச் எட்டாம் தேதி மகளிர் தினம்கூட கட்சி அலுவலகத்தில் மிக பிரமாண்டமாகக் கொண்டாடப்பட்டது. அதனால், கட்சியில் மகளிருக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்று சொல்லமுடியாது.''

ஜெயலலிதா | அதிமுக
ஜெயலலிதா | அதிமுக

``எடப்பாடி பழனிசாமி தலைமையிலான நான்காண்டுகால ஆட்சி சிறப்பாக இருந்தது என்று நீங்கள் உட்பட பலர் குறிப்பிட்டுப் பேசுகிறீர்கள். அதற்கு முன்பாக ஆட்சி செய்த ஜெயலலிதாவின் ஆட்சியையே மறந்துவிட்டீர்களா?''

``புரட்சித்தலைவர் டாப். அம்மா ஆட்சி டாப்போ டாப். அண்ணன் இ.பி.எஸ்ஸைப் பொறுத்தவரைக்கும், `அவரின் ஆட்சி மூன்று மாதம்கூட நிற்காது, ஆறு மாதங்களில் கலைந்துவிடும், தாக்குப்பிடிக்க மாட்டார்' என பலரும் ஆருடம் சொன்னார்கள். ஆனால், பல்வேறு பிரச்னைகளைச் சமாளித்து வெற்றிகரமாக ஆட்சியை நடத்தினார் அண்ணன் இ.பி.எஸ். பல்வேறு சாதனைகளும் புரிந்திருக்கிறார். அண்ணன் ஓ.பி.எஸ் மூன்றுமுறை முதல்வராக இருந்தவர் என பெருமையாகச் சொல்கிறார்கள். ஆனால், அவர் இருக்கும்போது அம்மா எனும் ஆளுமை பின்புலத்தில் இருந்தார். ஆனால், அம்மா இல்லாமல் வெற்றிகரமாக ஆட்சியை நடத்திக்காட்டியவர் அண்ணன் இ.பி.எஸ் என்கிற உண்மையை யாரும் மறுத்துவிடமுடியாது. நாங்கள் அம்மாவையோ, தலைவரையோ மறக்கவில்லை. ஆனால், அம்மா மறைவுக்குப்பிறகு அண்ணன் இ.பி.எஸ் நல்லாட்சியைக் கொடுத்திருக்கிறார். அதனால்தான் அனைவரின் விருப்பமாகவும் அவர் இருக்கிறார்.''